என்று தீரும் எங்கள் மீனவர் பிரச்சினை? | தினகரன் வாரமஞ்சரி

என்று தீரும் எங்கள் மீனவர் பிரச்சினை?

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பல ஆண்டுகளாக நீடித்தே வருகின்றன. ஆண்டுகள் கடந்தும் அவை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

இரு தரப்பு மீனவர்களுக்கும் தொப்புள் கொடி உறவுகள் என கூறி வருகின்ற போதிலும் மீனவர்கள் மத்தியிலும் முறுகல் நிலை ஏற்படாமல் இல்லை.

தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் வடக்கில் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வரையில் தொடர்கிறது. பெரிதும் பாதிக்கப்படுவது மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களே.

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே வருகின்றனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க வரும் மீனவர்களே அதிகளவில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தமது படகுகள் பழுதடைந்தமை காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து விட்டோம் என்பார்கள் சிலர், பலர் தமக்கு கடலில் எல்லை தெரியாமல் நுழைந்து விட்டோம் என்பார்கள்.

அதேவேளை, தாம் தமது எல்லைக்குள் நின்றே மீன் பிடித்ததாகவும், இலங்கை கடற்படையினரே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தம்மை கைது செய்து வந்ததாகவும் கூறுகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு.

அத்துடன் இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாகவும், தம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

அதுமாத்திரமின்றி, இலங்கை கடற்படையின் படகுகள் தம்முடைய படகுகளை மோதி விபத்தினை ஏற்படுத்தி, தமது படகுகளை கடலில் மூழ்கடிப்பதாகவும் குற்றம் சாட்டியும் உள்ளனர்.

அதேவேளை கடந்த சுமார் 40வருட கால பகுதியில் இலங்கை கடற்படையினர் சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளதாகவும், இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக்கொண்டு இருந்த காலப் பகுதியான 1989ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடல் வழியாக தாம் உதவிகளை வழங்கி வருவதாக கூறி பல மீனவர்களை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வடக்கு மீனவர்களின் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவது மாத்திமின்றி எமது கடல் வளங்களையும், எமது வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களையும் அழித்து விட்டு செல்கின்றனர் என வடக்கு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் பல கோடி ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தமக்கு எவரும் நஷ்டஈட்டைத் தந்து உதவவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

தீர்வுகள் எட்டப்படாத பேச்சுக்கள்

தமிழக மற்றும் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பல்வேறு கட்டங்களாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் இதுவரையில் தீர்வுகள் எட்டப்படவில்லை.

கடந்த காலங்களில் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரண்டு நாட்டு மீனவர்களும் ஆலயத்தில் ஒன்று கூடுவார்கள். அதன் போது இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன. அது மாத்திரமின்றி டெல்லி வரை சென்றும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அவையும் எவ்வித சாதகமான முடிவும் இன்றியே முடிவடைந்தன.

பொறுமையிழந்த வடக்கு மீனவர்கள்

பல்வேறு கட்ட பேச்சுக்கள், பல சுற்று பேச்சுக்கள் என எந்த பேச்சுவார்த்தைகளும் தமக்கு பயன் தரவில்லை என்பதனால் மீனவர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக கூட போராட்டங்களை முன்னெடுத்து துணைத்தூதுவரிடம் மகஜர்களையும் கையளித்து தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், உங்கள் மீனவர்களால் தமக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். அந்த கோரிக்கைகளும் பயனற்றுப் போயின.

கடலில் பஸ்களை இறக்கிய கடற்தொழில் அமைச்சு

வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி வந்தனர். பேச்சுக்களும் வெற்றியளிக்காத நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பழுதடைந்த பேருந்துகளை இலங்கை இந்திய கடல் எல்லையில் கடலில் இறக்கும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் மூலம் கடலினுள் இறக்கப்படும் பேருந்துக்களால், அடிமடி தொழில் செய்யும் இந்திய மீனவர்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். கடலின் அடியில் போடப்படும் வலைகள் அறுக்கப்படும். அதனால் பாரிய நஷ்டங்கள் அவர்களுக்கு ஏற்படும்.

கடலினுள் பழுதடைந்த பேருந்துகளை இறக்கியமை தனியே இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த மாத்திரமின்றி மீன் வளத்தையும் அதிகரிக்கும்.

கடலினுள் இறக்கப்பட்ட பேருந்துகள் மூலம் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டு மீன் வளம் பெருகும் என கூறப்பட்டது.

இவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் போடப்படும் பேருந்துகளினால் தமது மீனவர்கள் விரிக்கும் வலைகள், வேகமாக இலங்கை கடற்பரப்புக்குள் செல்லும் நிலை ஏற்படும் எனவும், அதனால் வலைகள் பேருந்துக்களில் சிக்கி கிழியும் நிலை ஏற்படும் எனவும் தமிழக மீனவர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடலில் பேருந்துகளை போடும் வேலைத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அத்துமீறல்.

கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் சென்றது. அதனால் மீண்டும் வடக்கு மீனவர்கள் போராட்டங்களில் குதித்தனர்.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக, சங்கானை பிரதேச செயலகம் முன்பாக, காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக என சுழற்சி முறையில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டங்களின் முடிவுகளில் அரச அதிகாரிகள் ஊடாக ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டோருக்கு மகஜர்களையும் கையளித்துள்ளனர். அதேவேளை யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைத் தூதுவரை சந்தித்தும் பேச்சுக்களை நடாத்தியதுடன், மகஜரும் கையளித்து உள்ளனர்.

வகை தொகை இன்றி கைதான தமிழக மீனவர்கள்

வடக்கு மீனவர்களில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளைகளில், கடந்த டிசம்பர் மாதம் கடற்படையினரும் கடலில் சுற்றுக் காவல் (ரோந்து) பணிகளை தீவிரமாக்கினார்.

அதனையடுத்து மன்னார் கடற்பரப்பில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேவேளை யாழ். மாவட்ட கடற்பரப்பில் 55மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஓரிரு தினங்களில் சுமார் 85க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுபட்ட பல மீனவர்களை கடற்படையினர் துரத்தியும் உள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

யாழ்.மாவட்ட கடற்பரப்பில் டிசம்பர் மாதம் கைதான 55தமிழக மீனவர்களும் சுமார் 45நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்று அவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பதனால், அவர்களுடைய கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் ஊடாக தமிழகம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த 55மீனவர்களும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்படுவார்களாயின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அத்துடன் கைது செய்யப்படும் காலப் பகுதியில் நடைபெறும் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைய வழங்கப்படும் தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும்.

கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில்

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விற்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசின் இந்த முடிவினை வடக்கு மீனவர்கள் "படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு எடுத்த முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோம்" என்கின்றனர். அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வீதிக்கு இறங்கிய மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்த மீனவர்கள் தமக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை என்ற வேதனையில் இருந்தனர்.

அந்நிலையில் கடந்த 27ஆம் திகதி வடமராட்சி வத்திராயன் பகுதியில் இருந்து கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.

குறித்த மீனவர்களை சக மீனவர்கள் தேடி வந்த நிலையில், நான்கு நாட்களின் பின்னர் 31ஆம் திகதி வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் கேவில் ஆகிய பகுதிகளில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின.

இந்திய மீனவர்களின் படகு குறித்த மீனவர்களின் படகுடன் மோதியதால் இரு மீனவர்களும் உயிரிழந்ததாக சக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேநேரம், அன்றைய தினம் (31ஆம் திகதி) அதிகாலை வடமராட்சி சுப்பர் மடம் பகுதியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அறுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் இரு மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தாலும், மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்ட சம்பவத்தாலும் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தி யிருந்தது.

அதனையடுத்து சுப்பர் மட மீனவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். பருத்தித்துறை பொன்னாலை வீதியினை சுப்பர் மடம் பகுதியில் மறித்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுப்பர் மட மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அயல் பிரதேச மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்திய மீனவர்களை மடக்கி பிடிக்க முயற்சி

அன்றைய தினம் இரவு வடமராட்சி மீனவர்கள் அத்துமீறி நுழையும் மீனவர்களை கடலில் மடக்கி பிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

இரண்டு படகுகளையும் அதில் இருந்த 21மீனவர்களையும் வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து வடமராட்சி கரைக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

அவ்வேளை அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர் அதனை கண்ணுற்று, இந்திய மீனவர்களை கைது செய்ததுடன், படகுகளையும் மயிலிட்டி துறை முகத்திற்கு கொண்டு சென்றனர்.

ஏனைய இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுப்பு

மறுநாள் 1ஆம் திகதி மீனவர்களின் போராட்டம் உத்வேகம் அடைய தொடங்கியது. மருதங்கேணி பிரதேச செயலகத்தை முடக்கி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதேவேளை பலாலி அந்தோணிபுர மீனவர்களும் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். மீனவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட செயலகம் முற்றுகை

அந்நிலையில் மீனவர்களின் போராட்டம் நான்காவது நாளான 3ஆம் திகதி உச்சம் தொட்டது. யாழ்.மாவட்ட செயலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். அதனால் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்தது.

குறித்த வீதி ஊடான போக்குவரத்திற்கு பொலிஸார் மாற்றுப்பாதைகளை வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் காட்டினார்கள்.

கடற்தொழில் அமைச்சரின் உறுதிமொழியை ஏற்க மறுப்பு

மாவட்ட செயலகம் மீனவர்களின் முற்றுகைக்குள் இருந்தமையால் , மீனவர்களுடன் சமரச பேச்சுக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக மீனவர்கள் மத்தியில் அமைச்சர் உறுதி அளித்த போது, வாய் மொழி மூல உறுதியினை தாம் நம்ப தாயார் இல்லை எனவும், எழுத்து மூலம் உறுதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரினார்கள்.

அதனால், அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அவ்விடத்தில் இருந்து டக்ளஸ் தேவானந்தா வெளியேறினார். மீனவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுப்பர் மடம் பகுதியில், பருத்தித்துறை - பொன்னாலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் டக்ளஸ் தேவானந்தா பேச்சுக்களை நாடாத்த முற்பட்ட போதும் அங்கும் அமைதியின்மை ஏற்பட்டதனை அடுத்து, அங்கிருந்தும் அமைச்சர் கோபத்துடன் வெளியேறிச் சென்றிருந்தார்.

போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

அதேவேளை, சுப்பர் மட மீனவர்கள் நான்கு நாட்களாக பொன்னாலை -−பருத்தித்துறை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால், போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி பருத்தித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதனை யடுத்து நீதிமன்று வீதியை மறித்து முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தடை விதித்து கட்டளை பிறப்பித்தது.

போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை பொலிஸார் மீனவர்களுக்கு அறிவித்தனர். அதேவேளை குழப்பங்கள் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைய வீதியை மறித்து போடப்பட்டிருந்த கொட்டகைகளை அகற்றிய மீனவர்கள், வீதி ஊடான போக்குவரத்திற்கு தடை இல்லாமல் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரு நாடுகள் தலையிட்டு தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இரு தரப்பு மீனவர்களின் பிரச்சினை உள்ளது. அதனால் அது நீடித்த பிரச்சினையாக உள்ளது. இரு நாடுகளினதும் மத்திய அரசு இரு தரப்பு மீனவர்களையும் கண்டு கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.

மீனவர்களின் பிரச்சினை அரசியல் நீக்கம் செய்யப்பட்டு திறந்த பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே இரு தரப்பு மீனவர்களினதும் கோரிக்கையாகும்.

மயூரப்பிரியன்

Comments