ஐ எஸ்சின் இரண்டாவது தலைவரையும் தீர்த்துக் கட்டிய அமெரிக்கா | தினகரன் வாரமஞ்சரி

ஐ எஸ்சின் இரண்டாவது தலைவரையும் தீர்த்துக் கட்டிய அமெரிக்கா

பயங்கரவாதச் செயல்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் எழுபதுகளில் தான் உலகெங்கும் அடிபட ஆரம்பித்தது. இஸ்ரேலை அழித்துவிட வேண்டும்; பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) தன் எதிரிகளாக இஸ்ரேலையும் அமெரிக்காவையுமே கருதி செயல்பட்டது. பயணிகள் விமானங்களைக் கடத்தி பயணிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை முதன்முதலாக செயல்வடிவத்தில் காட்டிய இயக்கம் யஸர் அரபாத்தினால் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பு. விமானங்கள் கடத்தப்படுவது, கமாண்டோக்கள் அதிரடி தாக்குதல் நடத்தி பயணிகளை மீட்பது அல்லது பெருமளவு பயணிகள் மரணிப்பது என்பது எழுபது எண்பதுகளில் ஆங்காங்கே அரங்கேறும் சம்பவங்களாகின. இந்த சூட்டோடு சூடாக இலங்கையரான சேபால ஏக்கநாயக்க இத்தாலிய விமானமொன்றைக் கடத்தி சிங்கள சமூகத்தின் மத்தியில் வீரரான கதையும் இலங்கையில் நிகழ்ந்தது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பைத் தொடர்ந்து பல தீவிரவாத அமைப்புகள் மத்தியகிழக்கை மையப்படுத்தியதாகவும் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் குறிவைத்ததாகவும் தோன்றின. விமானங்களை வெடிகுண்டாக ஏவி மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றொழித்த ஒசாமா பின்லேடனின் அல் கைதாவானாலும் சரி விடுதலைப் புலிகளானாலும் சரி இந்த அமைப்புகளுக்கெல்லாம் ஒரு அரசியல் நோக்கம் இருந்தது. அந் நோக்கங்கள் மக்களுடன் சம்பந்தப்பட்டவையாகவும் இருந்தன. அவை சரியா, தவறா என்பது வேறு விஷயம். 

ஆனால் எந்தவொரு நோக்கமுமற்ற ஒரு பயங்கரவாத அமைப்பொன்று தோற்றம் பெற்று அசுர வளர்ச்சியும் பெற்றதென்றால் அது ஐஎஸ் அமைப்பாகத்தான் இருக்க வேண்டும். அமெரிக்காவையும் இஸ்ரேவேலையும் எதிரிகளாக இலக்கு வைத்த அமைப்பு என அறியப்பட்ட போதிலும் அவ்விரு நாடுகளுக்கும் எந்த சேதத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ் விளைவிக்கவில்லை. இதனால் இவ்விரு நாடுகளும் தான் இவ்வியக்கத்தை உருவாக்கின என்றொரு விஷயமும் உள்ளது. இஸ்லாமிய நாடுகளை அழித்து தனியொரு இஸ்லாமிய நாடாக கலிபா இராச்சியமொன்றை மத்திய கிழக்கில் உருவாக்குவோம் எனக் கிளம்பிய ஐ.எஸ். மட்டுமல்ல; தலிபான்கள், அல் கைதா என்பன உருவாவதற்கும் அமெரிக்காவே துணை நின்றது. ஒரு காரியத்துக்காக இவ்வாறான அமைப்புகளை உருவாக்குவதும் பின்னர் அழிப்பதும் அமெரிக்காவுக்கு வாடிக்கை. ஐ.எஸ். ஈவு இரக்கமற்ற மிகக் கொடூரமான இயக்கம். அது மிகக் கடுமையான இஸ்லாமிய கோட்பாடுகளை முன்வைத்து இயங்கிய இயக்கம். அது மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டியவை என நம்பியது. இந்நிலையில் தான் அவ்வியக்கத்தை ஒடுக்காவிட்டால் மத்திய கிழக்கின் பாரிய எண்ணெய் வயல்கள் ஐ.எஸ்.வசம் சென்றுவிடும் எனக் கருதிய அமெரிக்கா ஐ.எஸ். மீது கடும் தாக்குதல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆரம்பித்தது. இறுதியாக மத்திய கிழக்கில் அதன் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.

9/11தாக்குதலின் பின்னர் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்திருந்தாலும் பின்லேடனை கொல்லும் தன் தேடலை அமெரிக்கா கைவிடவே இல்லை. பின்லேடனை இறுதியாக பாகிஸ்தான் வீடென்றில் அடையாளம் கண்டு அவரை சுட்டுக்கொன்று கடலில் எறிந்தது. அதன் பின்னர் ஐ எஸ் ஐ எஸ்சின் முது கெலும்பை முறித்த பின்னரும் அதன் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை விட்டு வைக்கக் கூடாது என்ற கொள்கையில் தொய்வு ஏற்படவிடாது பின் தொடர்ந்த அமெரிக்க, 2019இல் வட மேற்கு சிரியாவில் இட்லிப் பகுதியில் அவரைக் கண்டு பிடித்தது. தப்ப வழியில்லாத நிலையில் பக்தாதி தற்கொலை செய்து கொண்டார். தற்போது பக்தாதியின் இடத்தைப் பிடித்த அபு இப்ராஹிம் அல் –ஹஷிமி அல் குரேஷியை குறிவைத்து பின் தொடர்ந்த அமெரிக்க விசேட அதிரடிப்படை அவரையும் தற்கொலை செய்ய வைத்திருக்கிறது.

தன் வெள்ளை மாளிகை ரூஸ்வெல்ட் அறையில் இருந்து இச் செய்தியை உவப்புடன் அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், ‘யுத்த களத்தில் இருந்து அபு ஹிப்ராஹிமை நாம் அப்புறப்படுத்தி விட்டோம்’ என்பதாக அவரது மரணத்தை குறிப்பிட்டார். ‘அமெரிக்காவின் கை எவ்வளவுக்கு நீளும் என்பதையும் உலகின் எந்த மூலையில் ஒளிந்தாலும் அவர்களை தேடிப்பிடித்து அழிக்கும் வல்லமை அமெரிக்காவுக்கு உண்டு என்பதற்கும் இந்த நடவடிக்கை ஒரு உதாரணம்’ என்றும் அவர் தன் உரையில் பெருமையுடன் குறிப்பிட்டார்.

அபு இப்ராஹிம் வாழ்ந்த வீடு மூன்று மாடிகளைக் கொண்டது. இது வட மேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் தனி வீடாக அமைந்துள்ளது. இங்கே மேல் மாடியில் தன் மனைவிமார் பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்தார். இங்கே வசிப்பவர்தான் ஐ.எஸ்.சின் தலைவர் என்பதை அமெரிக்க புலனாய்வு உறுதிப்படுத்திக் கொண்டதும் எப்படி அவரைப் பிடிக்கலாம் அல்லது அழிக்கலாம் என்பது தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படலாயின.

கீழ் தளத்தில் வசிக்கும் குடும்பத்துக்கும் அபு இப்ராஹிமுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. உலகில் மிக அதிகமாகத் தேடப்படும் நபர் இவர்தான் என்பது கீழ்த்தள குடும்பத்துக்குத் தெரியாது. எனவே இவ் வீட்டின் மீது விமானத் தாக்குதல் நடத்தும் யோசனையை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கைவிட்டனர். ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி அதிரடிப்படையினரை இறக்குவது, இறங்கிய வீரர்கள் வீட்டை சூழ்ந்து கொள்வது; சில வீரர்கள் கீழ்த்தள வீட்டுக்குள் நுழைந்து அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டது. அதுவரை அவ் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய ஹெலிகொப்டர்கள் பாதுகாப்பு வழங்குவது என்றும் முடிவானது. அமெரிக்கா கண்மூடித்தனமாகத்தாக்கி அப்பாவிளைக் கொன்று விட்டது என்ற பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவே இப்படி முடிவெடுக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்தது.

மூன்றாம் திகதி நள்ளிரவு சுமார் 50அமெரிக்க விசேஷ அதிரடிப்படையினர் விசேட ஆயுதங்களுடன் சிரியாவுக்கு அண்மித்த ஒரு தளத்தில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் ஹெலிகளில் புறப்பட, அவர்களுடன் ஆயுதமேந்திய ட்ரோன்கள், தாக்குதல் ஜெட் விமானங்களும், புறப்பட்டன. முதலுதவி பிரிவும் அவர்களுடன் சென்றது. அரை மணித்தியாலயத்துக்குள் ஒபரேஷனை முடித்துவிடுவது என்றும் முடிந்தால் உயிருடன் பிடிப்பது அல்லது கொன்றுவிடுவது என்பதும் அவர்களுக்கு பிறப்பிக்கப்பட உத்தரவு. முழுவீட்டையும் தாக்கி நிர்மூலமாக்கவும் உத்தரவு இருந்தது. ஏற்கனவே பக்தாதியை அழிக்கும் திட்டத்துடன் ஏறக்குறைய ஒத்துப்போகும் வகையிலேயே இத்திட்டமும் வகுக்கப்பட்டிருந்தது. மூன்றாம் திகதி இரவு தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம், அது ஒரு அமாவாசை நாள்.

பக்தாதி மறைந்திருந்த இட்லிப் பிரதேசத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில்தான் அபு இப்ராஹீமின் வீடும் அமைந்திருந்தது. அமெரிக்க உளவாளிகள் தொடர்ச்சியாக நடத்திய இரகசிய தேடுதல்களில் அப்பகுதியில் ஒரு முக்கியஸ்தர் வசிப்பது தெரியவந்தது. தொடர்ச்சியான தேடுதல்களில் அந் நபர் ஐ எஸ் தலைவர் இப்ராஹிமின் உருவத்துடன் ஒத்துப் போவதை அறிந்து கொண்டார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருப்பார்கள். ஆனால் அந்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரு கூரியர் அந்த வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவதை புலனாய்வாளர்கள் கவனித்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர் அபு இப்ராஹீம் அல் ஹஷிமி அல்குரேஷி என்பது ருசுவானது. அந்த கூரியரின் நடமாட்டம் அவர் ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிகக போதுமானதாக இருந்தது.

இதையடுத்தே தாக்குதலை நடத்தும் உத்தரவை ஜோபைடன் பிறப்பித்தார். முதல் வேலையாக கமாண்டோக்கள் கீழ்தளத்தில் வசித்த பத்துப்பேரை அங்கிருந்து ஒரு பாதுகாப்பான தொலைவுக்கு நகர்த்தினார். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம்.

வீட்டை படையணி சூழ்ந்து கொண்டதும் ஒலிபெருக்கி மூலம் பத்து நிமிட கால அவகாசத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலாக அங்கிருந்த ஐஎஸ் பாதுகாவலர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். கமாண்டோக்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்ந்தது.

அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் இச்சம்பவம் பற்றி மறுநாள் விவரித்திருந்தார்கள். விமானங்கள், ஹெலிகள் பறக்கும் சத்தம் கேட்டது. பின்னர் கதைக்கும் சத்தம் கேட்டது. கொஞ்ச நேரத்தில் துப்பாக்கிகள் முழங்கின. இச் சண்டையின் போது ஏவுகணைகள் வெடிக்கும் சத்தமும் கேட்டது.பெரியதொரு வெடிக்கும் ஓசையும் கேட்டது என்று அயலவர்கள் தமது அனுபவத்தை கூறியுள்ளனர்.

மொத்தம் மூன்று மணித்தியாலம் இந்த ஒபரேஷன் நீடித்திருந்தது. அமெரிக்கத் தரப்பில் மரணம் நிகழவில்லை. ஆனால் ஒரு ஹெலியில் இயந்திரக் கோளாறு ஏற்படவே அது தரையிறக்கப்பட்டது.அதில் இருந்தவர்கள் ஏனைய ஹெலிகளில் ஏறிக் கொண்ட பின்னர் அந்த ஹெலி தாக்கி அழிக்கப்பட்டது. மூன்று மணித்தியாலத்தின் பின்னர் அமெரிக்க படையினர் தமது தளத்துக்கு திரும்பினர்.

தான் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதையும் தப்பிக்க மார்க்கம் இல்லை என்பதையும் அறிந்த ஐ எஸ் தலைவர் தானும் தன் குடும்பத்தினரும் உயிரை மாய்த்துக் கொள்வதே ஒரே வழி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அபு ஹிப்ராஹிமுடன் நான்கு பெண்களும் ஆறு குழந்தைகளுமாக மொத்தம் 13பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். வீழ்ச்சி கண்டிருந்த ஐ எஸ் மீண்டும் வலிமை பெற்று இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் வகையில் திட்டங்களைத்தீட்டி வந்த நிலையிலேயே அந்த அமைப்பு தன் தலைவரை இழந்திருக்கிறது. ஐ எஸ்சுக்கு அது ஒரு பெரிய பின்னடைவு. இப்ராஹிமின் இடத்துக்கு இன்னொருவர் நியமிக்கப்படுவார். ஆனால் குறுகிய காலத்துக்குள் இரண்டு தலைவர்களை இழந்திருக்கும் ஐ எஸ் அமைப்பு தன் பழைய வலிமையை அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம் அல்லது சிதறியும் போகலாம்.

அருள் சத்தியநாதன்

Comments