அவசரகால சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர்கள் அறிவிப்பு
போர் நிறைவடைந்து 12வருடங்களை தாண்டி விட்டாலும் கூட வடபகுதி மக்களின் மனங்களில் இன்னும் தீராத ரணங்களும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காணிப் பிரச்சினை, காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, மீனவர் விவகாரம், தமிழ் கைதிகள் விடயம், மீள்குடியேற்றம் என அவர்கள் முன்பாக உள்ள பிரச்சினைகள் நீண்ட பட்டியல் விரிகிறது.
காலத்துக்குக் காலம் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் வாக்குறுதிகளும் அடுக்கப்பட்டாலும் அவை நிறைவேறாமலே கடந்து விட்ட வரலாறே அதிகம்.
இந்த நிலையில் தான் அண்மையில் நீதிக்கான அணுகல் என்ற தொனிப்பொருளில் வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடத்தப்பட்டது. இதற்கு முன்னரும் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டாலும் இது மாறுபட்டதும் முன்னேற்றகரமானதுமான நடமாடும் சேவையாக அமைந்தது என்பதற்கு கலந்து கொண்ட பெருந்தொகையான மக்களும் நடமாடும் சேவை ஏற்படுத்திச் சென்ற மாற்றங்களும் சாட்சி பகரும்.
அவற்றுக்கு மேலாக நல்லிணக்கம்,காணி விவகாரம், காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதி விவகாரம், சட்டச் சிக்கல்கள் என பல விடயங்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் இந்த நீதிக்கான அணுகல் அமைந்திருந்தது. பேச்சளவில் நின்று விடாது செயலில் பல விடயங்கள் நடந்திருப்பதே அதற்குக் காரணம் எனலாம்.
சம்பிரதாய நடமாடும் சேவைகளுக்கு அப்பால் சென்று அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து நியாயமான தீர்வு வழங்கும் வகையில் 5நாட்கள் 5மாவட்டங்களிலும் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை நடத்தப்பட்டிருந்தது.
நீதி அமைச்சர் அலி சப்ரியின் திட்டத்திற்கு அமைய வட மாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் கடந்த ஜனவரி 26முதல் 30வரை சிறப்பாக நடந்து முடிந்தது. அமைச்சரவை முடிவுக்கு அமைய வடக்கில் முதலாவது நல்லிணக்க நோக்கிலான இந்த சேவை ஆரம்பமானதோடு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, தென்மாகாணத்தில் மாத்தறை மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த நடமாடும் சேவைகள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கில் முதலாவது சேவை நடத்த தெரிவு செய்யப்பட்டதோடு நீதி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் தொடர்புள்ள நிறுவனங்கள் இதில் பங்கேற்று மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளையும் நம்பிக்கை ஏற்படுத்தும் பதில்களையும் வழங்கியிருந்தன. குறிப்பாக நீதி அமைச்சர் அலி சப்ரியும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிசும் பொதுமக்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கலந்துரையாடியது முக்கிய அம்சமாகும்.
இந்த நடமாடும் சேவையின் போது அரச அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கற்றுக் கொடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வடபகுதி மக்களின் பிரச்சினைகளுடன் நேரடி தொடர்புள்ள காணமலாக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அலுவலகம், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், இலங்கை சட்டஉதவிகள் ஆணைக்குழு, இணக்க சபை, மாவட்ட பிரதேச செயலகங்கள் உட்பட பிரதானமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நடமாடும் சேவைகளில் பங்கேற்றனர்.
26ஆம் திகதி முதல் நாள் நிகழ்வு வவுனியாவில் உத்தியோகபூர்வமான ஆரம்பித்து வைக்கப்பட்டது. 27மற்றும் 28ஆம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது. 29மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் யாழ் மாவட்ட நடமாடும் சேவையும் நல்லிணக்க செயற்பாடுகளும் நடைபெற்றன. அத்தோடு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ் மாவட்ட செயலகங்களை மையமாக வைத்தும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இவற்றுடன் இணைந்ததாக கிளிநொச்சி நீதிமன்ற கட்டடத் தொகுதி, மாங்குளம் நீதிமன்ற கட்டடம், கிளிநொச்சி இந்து கல்லூரி ஸ்மார்ட் கிளாஸ் அறை திறப்பு என்பனவும் இடம்பெற்றமை முக்கிய அம்சமாகும்.
இது தவிர புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் இளம் போராளிகளுடனான நல்லிணக்க அலுவலக அதிகாரிகளின் சந்திப்பு, வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பு, பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் என்பனவும் இதில் அடங்கியிருந்தன. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வும் இவற்றில் அடங்கும். முக்கியமாக காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்வுகள் மாணவர்களுக்கான அறிவூட்டல் நிகழ்வுகளும் இவற்றுடன் இணைந்ததாக நடைபெற்றிருந்தன.
வடபகுதி அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சிகளும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பொது மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் ஊடக மாநாட்டின் போது, வடபகுதியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடமும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடமும் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழ் கைதிகளின் விடுதலை, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான கலந்துரையாடல், காணிப்பிரச்சினை என்பன அவற்றில் பிரதான இடம்பிடித்தன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான பல தமிழ் இளைஞர்கள் நீண்டகாலமாக விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி முக்கியமாக அலசப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் மாற்றப்படும் என அமைச்சர் பீரிஸ் இங்கு குறிப்பிட்டிருந்தார். அதற்கான முன்னெடுப்புகள் பற்றியும் அவர் விளக்கியிருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இங்கு தெரிவித்திருந்தார்.
அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளதாகவும் நீதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது குறித்து ஆலோசனைக் குழுவொன்றை முன்னாள் பிரதமர நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் குழு அமைத்துள்ளதை இன்போது சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், குறித்த குழுவிற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதையும் இங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
எம்.எஸ்.பாஹிம்