![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/14/fea02.jpg?itok=v9AHmpmJ)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அநுராதபுரம் பேரணியில் திரண்டு வந்த மக்கள் வெள்ளம் புலப்படுத்தியிருக்கும் அரசியல் கள நிலைவரம்!
தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி விடுவதற்கு மீண்டுமொரு சதிமுயற்சி!
கொவிட்-19 நெருக்கடிகள், பொருளாதார சவால்கள் என பல்வேறு பக்கங்களிலிருந்தும் எழுந்துள்ள சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தனது முதலாவது பேரணியை அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் சில தினங்களுக்கு முன்னர் நடத்தியிருந்தது.
'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், பெரும் சவால்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் அடைந்த இலக்குகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். நிதி அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
கொவிட் நெருக்கடிகள் காரணமாக நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அரசின் செல்வாக்கு குறையவில்லையென்பதை பேரணியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் தெளிவுபடுத்தியது. அரசின் கொள்கைத் திட்டங்களில் மக்கள் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளனரென்பதையும் மக்கள் கூட்டம் எடுத்துக் காட்டியது.
எவ்வாறான சவால்களுக்கு அரசாங்கம் முகங்கொடுத்திருந்தாலும் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க தொடர்ந்தும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தலைவர்கள் இங்கு உறுதியாக வலியுறுத்தியிருந்தனர். குறிப்பாக மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கு அடிமட்டத்துக்குச் செல்லத் தயாராக இருப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையில் கூறியிருந்தார்.
அதேநேரம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளி விடுவதற்கு, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இப்போது இணைந்து செயற்படுகின்றன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு குற்றஞ்சாட்டியிருந்தார்.
எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டவாறு, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கவும், நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
'மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினரின் நலனை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், எவ்வாறான தடைகள் ஏற்படினும் தொடர்ந்து முன்னோக்கி நகர்வோம்' என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்துபவர்கள், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அரச ஊழியர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். புத்தெழுச்சி பெற்று வருகின்ற பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, நாட்டை முடக்காமல் அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயற்படுத்த இடமளிப்பதே இன்றைய தேவையாக உள்ளது எனக் குறிப்பிட்டார் ஜனாதிபதி.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையில் எதிர்க்கட்சியை கடுமையாகச் சாடியிருந்தார். எதிர்வரும் மூன்று வருடங்களையும் குழப்புவதே எதிரணியின் நோக்கமாக உள்ளது. ஆனால் சதிகளால் அன்றி முடிந்தால் மக்கள் மத்தியில் வந்து சவால்களை வெல்லுமாறும் பிரதமர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் குறிப்பிட்டிருப்பது போன்று நாட்டையும் மக்களையும் குழப்பும் வகையிலேயே எதிரணியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. நாட்டினதோ மக்களினதோ நலன்களை முன்னிலைப்படுத்தியதாகவோ கருத்தில் கொண்டதாகவோ அவர்களது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று அபாயத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், இதனுடன் இணைந்ததான பொருளாதாரப் பின்னடைவுகளால் நாடு பின்னோக்கித் தள்ளப்படுவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் அவற்றைக் குழப்பாமல் இருக்க வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சியினர் என்ற வகையில் அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக வீணாக மக்களைக் குழப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இதேவேளை, டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன. சுகாதார சேவைகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலை குறித்து சிறிதளவும் சிந்திக்காது அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரடியாக எவ்வித சம்பந்தமும் இல்லை.
இருந்த போதிலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் சில விடயங்களை மறந்து விடுகின்றன. அதாவது அரச ஊழியர்கள் கல்வி கற்று தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் வழங்கவும் மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாது தொழிற்சங்சங்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதமாக மக்களை பணயக் கைகதிகளாகக் கொள்கின்றனர்.
இவ்வாறான முயற்சிகளின் பின்னணியில் எதிரணியினர் இருக்கின்றனர் என்பது எவராலும் மறுக்க முடியாததாகும். பல்வேறு சவால்களுக்கு மக்கள் முகங்கொடுத்திருக்கும் நிலையில் அவர்களை மேலும் சிரமங்களுக்கும், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் நடந்து கொள்வது காலத்துக்குப் பொருத்தமானதா என்பதை அவர்களே தமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இது இவ்விதமிருக்க, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கையின் 74வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
'இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.
நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வலியுறுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
பி.ஹர்ஷன்...?