இற்றைக்கு 140 வருடங்களுக்கு முன்னர், 1882ல் சன்மார்க்க சமுதாய நெஞ்சத்தின் சொந்தக்காரர் ஒருவரின் செவிகளில் விழுந்து, சிந்தையின் உணர்வுகளில் ஒன்று கலந்து செயலுருவானதே 'மத்ரஸதுல் கைரியா'.
கல்வியை வலியுறுத்தும் சன்மார்க்க சமுதாயத்தின் தேவையை உணர்ந்த மர்ஹூம் சுலைமான் லெப்பை காக்கா தனது சொந்த செலவில் 'மத்ரஸதுல் கைரியா' என்ற பெயரில் கொழும்பு 9 இருப்பிடத்தில் 1882ல் ஆரம்பித்தார். இதுவே தலைநகரில் முஸ்லிம்களுக்கென உருவான முதற் பள்ளிக்கூடம் என்பது வரலாற்று பதிவாகவும் வளமான வாழ்வுக்கான நெறியாகும்.
'கைரியா' என்ற பொன்னாமம் பூத்ததில் சொந்தமான பாசவலையொன்று பின்னியிருப்பது பலரறியாத ரகசியம். மர்ஹூம் சுலைமான் லெப்பை காக்காவின் வாரிசுகளான 1) கலீபா, 2) வஸீலா, 3) தனீனா ஆகிய மூன்று சகோதரிகளில் மூத்தவரின் மகளாகிய தன் பேத்தி கைரியாவின் பெயரை தான் ஆரம்பித்த பள்ளிக்கூடத்திற்கு சூடி, அதையும் தன் பாசத்திற்குரிய பேத்தியாக எண்ணலானார்.
தன் மறைவுக்குப் பின், தன் மகள்களான மூவரும் பொறுப்பேற்று நடத்தினர். அதன்பின் மர்ஹூம்களான ஓய்வுபெற்ற நீதவான் ஏ.எச். மாக்கான் மாக்கார், எம்.எம். சித்தீக் ஆகியோர் 1956 வரை வழிப்படுத்தினர். 1957ல் மர்ஹூம் நெய்னா மரிக்கார் பொறுப்பேற்று நடத்தினார்.
கல்லூரி ஆரம்பமான காலப்பிரிவில் மத்ரஸா சாயலிலேயே திண்ணைப் பள்ளிகள், வீட்டுப் பள்ளிகள், தோட்டப் பள்ளிகள் என்பன தோன்றலாயின. அதனடிப்படையில் உருவான நம் 'மத்ரஸதுல் கைரியா' அரபுமொழி போதனைக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் தந்தது. நாளடைவில் ஆங்கில மொழி போதனை, சிங்கள - தமிழ் போதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் ஆண், பெண் என இருபாலரும் ஒன்றிணைந்து கற்று வந்த மத்ரஸதுல் கைரியா, நாளாவட்டத்தில் மாணவர்களின் வரவுகுறைய மாணவியரின் வருகை கூடியது. இந்த அதிகரிப்பு கைரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக உருவாக அடித்தளமாயிற்று.
கைரியாவின் முதல் அதிபராகத் திருமதி. டேவிட் கல்விப்பணி புரிந்து பெருமை சேர்த்தார்கள். அவரைத் தொடர்ந்து ஜனாபா மர்யம் ஜாயா, திருமதி. பீ. அசவ் போன்றோர் கைரியாவின் அதிபர்களாக பணியாற்றியுள்ளனர்.
1962ம் ஆண்டு ஜனாபா. என்.ஜி. டெய்ன் அதிபரானார். இதுகாலம் வரை சன்மார்க்க இதயங்களின் தாலாட்டில் தனியார் பள்ளியாக வளர்ந்து வந்த கைரியா, இவரின் காலத்தில், 01.11.1962ல் அரசாங்கம் கையேற்று ஒரு அரசுப் பள்ளியாக மாறியது. அவ்வமயம் 400 மாணவியர்களும் 15 ஆசிரியர்களும் இருந்தனர். இவரது அயராத, அர்ப்பண உழைப்பினால் கைரியாவுக்கு பாடசாலைக்கான வளங்கள், கல்விக்கான உபகரணங்கள், கட்டடங்கள் என்பன கிடைத்தன. க.பொ.த. உயர்தரம் வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வித்தரமும் எழலாயிற்று. 25 வருடங்கள் சேவைகள் பல செய்து விட்டு, இவர் 1987ல் பணிநிறைவு கண்டார். இவரது காலம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாக கருதப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து அதே கைரியாவில் அனுபவம் வாய்ந்த ஓர் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஜனாபா Z. F நிஸாம்தீன் அதிபராகப் பதவி ஏற்றார். கைரியாவின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஆசிரியையாக 15 வருடமும் அதிபராக 15 வருடமும் அரும்பணியாற்றிய இவர் 30 வருட சேவையில் பின் ஓய்வு பெற்றார். பாலர் வகுப்புகளுக்கான தனி கட்டடமொன்று எழுப்பப்பட்டது இவரது சேவையின் தாற்பரியமாகும். ஜனாபா. நிஸாம்தீன் ஓய்வு பெற்றதன் பின் நிரந்தர அதிபர் ஒருவர் நியமனமாகாதது கைரியா சந்தித்த சோகமாகும்.
அதுவரை காலமும் உபஅதிபராக கடமையாற்றி வந்த ஜனாபா Y. M. ஆமித் வெற்றிடத்தை நிரப்ப அதிபராகப் பொறுப்பேற்க வேண்டி வந்தது காலத்தின் கட்டாயமும் கட்டளையுமானது. ஓராண்டு காலம் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஜனாபா. ஆமிதின் காலத்தில் மாணவியர்களின் தொகை 1500 ஆகவும், ஆசிரியர்களின் தொகை 44 ஆகவும் பெருகியமை கைரியாவின் கவர்ச்சிகரமான வளர்ச்சியை காட்டுகிறது.
அதன்பின் ஜனாபா. ஏ.எஸ். ஷிஹானா 2003ல் அதிபராக நியமனமானார். புதிய அதிபரின் சேவைக்கு நிர்வாகம் ஒரு சவாலாக அமைந்தது என்றால், பெருகிவரும் மாணவியர் தொகைக்கேற்ற இடவசதி இல்லாதது பெரும் குறையாக இருந்தது. சுமார் 50 வருட காலமாக இயங்கிய இரு நேர பாடசாலையை ஒரு நேர பாடசாலையாக அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தின் ஒரு பகுதியை சுவீகரித்து ஒரு நேர பாடசாலையாக மாற்றியதில் இவர் பெரும் பங்களிப்பை வழங்கினார்.
அக்கால கட்டத்தில் அதிபர் ஷிஹானாவுக்கு உறுதுணையாக இருந்து மும்முரமாக ஈடுபட்ட ஒரே உப அதிபர் A.L.S. நஸீரா ஹஸனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர், மாணவிகள் தொகை உயர்தல், கல்வி சுற்றுலா வருடந்தோறும் நடத்தப்பட்டமை. 125 வருட நிறைவில் கைரியா வாரம் நடத்தப்பட்டமை, 4 மாடி கட்டடத்திற்கு நிலம் பெற்றமையோடு பத்தாண்டுகள் (2003 - 2013) சேவை செய்த அதிபர் ஷிஹானாவை பாடசாலை நிர்வாகம் கௌரவப்படுத்தியது.
அதிபர் ஷிஹானா விடைபெற்றுச் சென்ற அன்று முதல் புதிய அதிபராக, நிகழ்கால அதிபர் திருமதி நஸீரா ஹஸனார் 2013ல் பதவியேற்றார். புதிய அதிபர் திருமதி நஸீரா ஹஸனாருக்கு மற்றவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தகுதி இருப்பது பலர் அறியாத விடயம். கைரியாவின் பழைய மாணவியாக, அங்கு படிப்பித்த ஆசிரியையாக, முன்னாள் அதிபரின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பக்கபலமான உப அதிபராக செயற்பட்டவர்.
நிகழ்கால அதிபர் பதவியேற்ற நாள் முதல்
செய்து வரும் பணிகளுள் சில....
க.பொ.த விஞ்ஞான பிரிவை ஆங்கில மொழி மூலம் ஆரம்பித்ததோடு, விஞ்ஞான பாடநெறியில் உயிரியல் பிரிவை 2014 முதல் உயர்தரத்தில் துவக்கினார். இதன் மூலம் 1C பாடசாலை 1AB பாடசாலையானது. கைரியாவின் இடப்பற்றாக்குறையை போக்கும் பெரு நோக்கில் பெறப்பட்ட முன்புற காணியில் 4 மாடி கட்டடம் ஒன்றை பேருவளையின் சமுதாய கொடை வள்ளல் மர்ஹூம் ரிபாய் ஹாஜியார் உதவியில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை நடத்தினார். பிரஸ்தாப கட்டடம் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்டது ஈண்டு நோக்கத்தக்கது.
கைரியா பெண்கள் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருக்கும் காணியை பெற்றுக் கொள்வதில் பலர் பல முயற்சிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் இக்காணி நவ்ஷாத் மொஹிதீன், அஸாத்சாலி (முன்னாள் ஆளுநர்), அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூலம் 2011ல் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்நிலப்பரப்பில் கொடை வள்ளல் ZAM Refai Hajiar ஆல் 2016ல் உயர் மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. இதில் பிரதான மண்டபமும், 21 வகுப்பறைகளும் அமைக்கப்பட்டன. விஞ்ஞான ஆய்வுக் கூடமும், தகவல் தொழில்நுட்ப கூடமும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டடத்திற்கு ZAM Refai Hajiar கட்டடம் என்ற நாமம் சூட்டி அன்னாரை நினைவு கூர்கின்றது கைரியா சமூகம். இதற்காக அதிபர் நஸீரா ஹஸனார் மேற்கொண்ட அயராத முயற்சி, அவருடைய தியாகம் என்பன அவர் கல்லூரி மீது கொண்ட முன்னேற்றத்திற்கு சான்றாகும். இன்று உயர்தரப் பிரிவு முழுவதும் இக்கட்டடத்திலேயே நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறெல்லாம் பல சேவைகளை செய்த கைரியா தன்னுடைய சிகரத்தை நோக்கிய பயணத்தில் வரலாற்று நினைவாக 2017ஆம் ஆண்டு தனது 135ஆவது வருட பூர்த்தியை நினைவூட்டும் நோக்கோடு அதிபர் நஸீரா ஹஸனார் தலைமையில் நடந்த நினைவுகள்.
1. கல்விக்கு உயிர் கொடுத்த முன்னாள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டமை.
2. ஊடகத் தினம் கொண்டாட்டம்.
3. கைரியா நடை பவனி (Khairiya’s Walk)
4. திறமைக்கு முகம் கொடுக்கும் பரிசளிப்பு விழா.
5. கண் கவரும் கண்காட்சி.
இதனைத் தொடர்ந்து இரு கட்டடங்களையும் இணைக்கும் பாலம் ஒன்றை அமைப்பது காலத்தின் கட்டாயமாக இருந்தது. பாதையை கடப்பதில் மாணவர்கள் படும் இன்னலை அறிந்த அதிபர் அதையும் நிவர்த்திக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் பயனாக அப்போதைய ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவால் 2019ல் பாலம் ஒன்றை அமைப்பதற்கான சகல பணிகளிலும் அதிபர் ஈடுபட்டார். பாலமும் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை அதிபர் உறுதிப்படுத்தினார்.
கைரியா மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வளமான எண்ணத்தில், பிற பாடசாலைகளும் பங்கேற்கும் விதமாக 2015ல் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒரு வலைப் பந்தாட்ட (Net Ball) சுற்றுப் போட்டியை நடத்தினார். அதில் கைரியா மாணவிகளே வெற்றி பெற்றனர். இதன் மூலம் கைரியா மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.
கைரியா மாணவர்களின் போக்குவரத்து நலனுக்காக வலைப் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வசூலான தொகையுடன், சமுதாய நல்லிதயங்களின் உதவிகளையும் பெற்று சொந்தமாக ஒரு பேருந்தை (bus) வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிபர் மேற்கொண்டு வெற்றியும் பெற்றார்.அத்துடன் பாடசாலைக்கு முச்சக்கர வண்டி ஒன்றை பழைய மாணவியர் மூலமாக பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் கைரியா மாணவியர் பங்குகொண்டு வெற்றிபெறும் வண்ணம் கதவுகளைத் திறந்துவிட்ட அதிபரின் சேவை போற்றத்தக்கது. மேலும் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் மஜ்லிஸ், மாணவர் பாராளுமன்றம், சாரணர் இயக்கம், மாணவ ஊடகப்பிரிவு, தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கிய மன்றம் போன்ற குழுக்களினூடாக மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் அதிபர் பெரும் பங்களிப்பு செய்கிறார்.
அல் ஹிஜ்ராவில் தற்காலிகமாக இயங்கிய கைரியாவின் ஆரம்பப் பிரிவுக்கான நிரந்தர காணியைப் பெற்றுக் கொடுப்பதில் பல தரப்பினர்களும் முயற்சி செய்தனர். இறுதியில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஜனாப் பாயிஸ், ஜனாப் அர்ஷாட், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியினால் 42 பேர்ச் காணி சட்டபூர்வமாக கைரியா பெண்கள் கல்லூரிக்கு பிரித்து வழங்கப்பட்டது. காணியில் கட்டடம் எழுப்ப வேண்டிய கட்டாய நிலையில் கைரியா சமூகம் தவித்த நேரத்தில் கைகொடுத்த மகானாக நூருல்லாஹ் மௌலவியை காண்கின்றோம். இவர் குவைத் நாட்டில் வாழ்ந்த பெண்மணியான 'தைபா' என்பவரின் நன்கொடையைக் கொண்டு, கைரியா பெண்கள் கல்லூரிக்கு ஒரு மாடி கட்டடம் ஒன்றை கட்டி வழங்கினார். இதில் 8 வகுப்பறைகளை மட்டுமே அமைக்க முடிந்தது. ஆனால் 25 வகுப்பறைகள் தேவைப்பட்டன. அரச சார்பற்ற நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் மேலும் ஒரு மாடி அமைத்து 4 வகுப்பறைகளை கட்ட முடியும் என்பதால் W.M.O (2021ல்) உலக மேமன் சம்மேளனத்தின் உதவியைப் பெற்று மேலும் 4 வகுப்பறைகள் இரண்டாம் மாடியில் அமைப்பதற்கு, அதிபர் மேற்கொண்ட முயற்சியை வார்த்தைகளில் வழங்க முடியாது.
கைரியா சமூகத்தின் தேவைகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வரும் திருமதி நஸீரா ஹஸனாரின் அடுத்த நகர்வு, ஆரம்பப்பிரிவில் 18 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிப்பதாகும். கல்லூரியின் பௌதிக வளங்களைப் பெற்றுக் கொள்ளும் பயணத்தில் கல்லூரி சமூகத்தை கைகோர்த்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது அதிபருடைய தனிப் பெரும் சிறப்பாக உள்ளது. பெற்றோர்கள், பழைய மாணவிகள், நலன்விரும்பிகள் அத்தனை பேரும் இப்பணியில் கைகோர்த்துள்ளனர்.
இன்று 96 ஆசிரியைகளையும், 2700 மாணவிகளையும் கொண்ட கைரியா பெண்கள் கல்லூரி, பௌதிக வளத்தில் மட்டுமல்ல கல்வி அடைவு மட்டங்களிலும் மேலோங்கி நிற்கின்றது. இதை பாடசாலையின் பெறுபேறுகள் உறுதிப்படுத்துகின்றன. பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி பீடங்களிலும் எமது மாணவிகள் பிரகாசிக்கின்றனர். பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். கைரியாவின் முதலாமாண்டு அனுமதிக்கான கேள்வி அதிகரித்துள்ளமை இதற்கு சான்று பகர்கின்றது. நிலைமையை சமாளிக்க முடியாமல் நிர்வாகம் திண்டாடுகிறது. எனவே கல்வித் திணைக்களத்தின் அனுமதியுடன் 2016ல் சிங்கள மொழி மூலமான ஒரு வகுப்பை அதிகரித்தமை யானைப் பசிக்கு சோளப்பொரி இட்டது போலாகும். இப்பிரச்சினைக்கான முடிவு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. 140 ஆவது வருட நிறைவில் விழாக்கோலம் பூணும் கைரியா பெண்கள் கல்லூரியை காண்கையில் உளம் பூரிக்கிறது. இதனை முன்னிட்டு இன்று கொழும்பு நகரை மையப்படுத்தி வரலாறு காணாத மாபெரும் வாகன பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 'நெலும் பொகுன - தாமரைத் தடாகம்' மண்டபத்தில் இவ் விழாவை விமரிசையாக கொண்டாடுவதில் கைரியா சமூகம் பெரு மகிழ்ச்சியடைகிறது. இந்நிகழ்விற்காக அதிபரின் தலைமையின் கீழ் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவிகள் சங்கம், நலன் விரும்பிகள் அத்தனை பேரும் பெரும் பங்களிப்பை நல்கி வருகின்றனர். கைரியாவின் வரலாற்றில் திருமதி நஸீரா ஹஸனாரின் பணிக்காலம் ஒரு திருப்புமுனை எனக் கூறினால் அது மிகையாகாது. உலகம் சுருங்கி உள்ளங்கையில் அடங்கி விட்ட நவயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே எமது கல்வி முறையிலும் மாற்றம் வரவேண்டும் என்பது நிதர்சன உண்மையாகும். வகுப்பறைகளில் கரும்பலகைகள் வெண்பலகையாகின. இந்த நவயுகத்தில் வெண்பலகை மின் - பலகையாக வேண்டும். இதை உணர்ந்த அதிபர் இலத்திரனியல் பலகை (Electronic Board) ஊடாக கல்வி பயிலும் வாயிலைத் திறந்துவிட்டு, மாணவிகளின் கற்றல் முறையில் புது திருப்பத்தை உருவாக்கினார். இதற்கான இவரது முயற்சியை சொல்லில் வடிக்க முடியாது. 140 ஆவது நிறைவு வருடத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை டிஜிட்டல் மயமாக்கிய பெருமை திருமதி நஸீரா ஹஸனாரையே சாரும்.
ஆரம்பப் பிரிவு, இடைநிலைப் பிரிவு, உயர்தரப் பிரிவு என முக்கோண நிர்வாக நிலப் பரப்பையும், ஒரே தலைமையின் கீழ் நிர்வகிக்கும் தலைசிறந்த ஆளுமையாக தற்போதைய அதிபர் திருமதி நஸீரா ஹஸனாரை காண்கிறோம். இவ்வதிபரின் தலைமைத்துவம் கைரியா பெண்கள் கல்லூரியை உச்சம் நோக்கி அழைத்துச் செல்லும். இவரது திருப்பணிகள் ஆரோக்கியமாக அமைவதற்கு மனமார வாழ்த்தி, வல்ல நாயனை பிராத்திப்போம்.