![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/14/fea04.jpg?itok=ppatlXGQ)
இலங்கைப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பொருளாதாரச் சீராக்கம் ஒன்றைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தலைவலிக்கு மாத்திரை விழுங்குவது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தமானமாக தீர்மானங்களை (ad hoc decisions) மேற்கொண்டு அப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிப்பதையே கடந்த காலத்தில் அரசாங்கங்கள் தொடர்ச்சியாகத் தமது அரசியல் உபாயமாகக் கடைப்பிடித்து வந்துள்ளன
உற்பத்தி பாதிப்படைய வருமான மூலாதாரங்கள் பாதிக்கப்படும். அதனால் மக்களின் கொள்வனவு செய்யும் ஆற்றலும் சேமிக்கும் ஆற்றலும் கடுமையாக வீழ்ச்சியடையும். இது தொடர்ச்சியாக நடைபெறும் பட்சத்தில் பொருளாதாரச் சுருக்கமடைந்து மந்த நிலையை நோக்கி நகரும்
இலங்கையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அத்துடன் பொதுவாக எல்லாப் பொருட்கள் மற்றும் சேவை வகைகளின் விலைகளும் சமீபகாலங்களில் சடுதியான அதிகரிப்புக்கு உட்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி சந்தையில் பொருள் தட்டுப்பாடுகள் நிலவுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது. சாதாரண பரசிட்டமோல் வகையிலான வைத்தியரின் பரிந்துரை தேவைப்படாத சாதாரண மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
அண்மையில் உத்தியோகபூர்வமான வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி பால்மா, எரிவாயு, கோதுமை மாவு மற்றும் சீமெந்து ஆகிய நான்கு பொருள்களுக்கு மிதமானதொரு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் ஒத்துக்கொண்டதோடு இறக்குமதிகள் மூலம் தட்டுபாட்டை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு புறம் பொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் அதே வேளை அதிகரித்த விலைகளிலும் பொருள்கள் தட்டுப்பாடாக இருப்பதனால் கள்ளச்சந்தை விலைகள் தோற்றம் பெற்று அதிகூடிய விலைகளை செலுத்த நுகர்வோர் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். உதாரணமாக சீமெந்து பைக்கற் ஒன்றின் விலை 2021 ஒக்டோபர் மாதம் 7ஆந் திகதி 1275 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2022 ஜனவரி 1ஆந் திகதி 1375 ரூபாவாக மேலும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த அதிகரிக்கப்பட்ட விலையிலும் சீமெந்தை சந்தையில் பெறமுடியாதுள்ளதாக கட்டடத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கள்ளச்சந்தையில் ஒரு பைக்கற் சீமெந்து 2000 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. பால்மா, கோதுமை மா போன்றவை சந்தையில் போதியளவில் கையிருப்பில் இல்லை. எரிவாயுவும் தேவைக்கேற்ப உடனடியாக கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவுகிறது. எரிவாயு விநியோகத்தர்கள் டிலிவரி கட்டணம் என்ற பெயரில் அதன் விலைகளில் மாற்றங்களை செய்வதையும் அவதானிக்க முடிகிறது.
சாதாரணமான தலைவலிக்கு மக்கள் பயன்படுத்தும் பரசிற்றமோல் வகையிலான மருந்துக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. குறைந்த பட்சம் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் விநியோகிக்கும் இது போன்ற சாதாரண மருந்து வகைகளுக்கு ஏன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை உரிய அதிகாரிகள் கூற வேண்டும்.
மரக்கறி வகைகளின் விலைகள் உச்சத்திலிருந்து சற்று கீழே இறங்கி வந்திருப்பதாக சந்தை வட்டாரங்களை நோக்கும்போது புலனாகிறது. சாதாரண சந்தை நிலைமையில் 250 ரூபாவிலிருந்த ஒரு கிலோ கறிமிளகாயின் விலைகள் சடுதியாக 900 ரூபாவுக்கு எகிறிச் சென்று இப்போது 600 ரூபா மட்டத்திற்கு இறங்கி வந்திருப்பது அதன் விலை குறைந்திருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை நுகர்வோருக்கு ஏற்படுத்தினாலும் கூட ஆரம்பத்திலிருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் அது இருமடங்கிற்கும் மேற்பட்டதொரு அதிகரிப்பாகும். மரக்கறி வகைகள் பலவற்றின் விலைகளின் போக்குகள் இவ்வாறே உள்ளன. முட்டை, மீன் இறைச்சி போன்றவற்றின் விலைகளும் சடுதியான அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சாதாரண குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மறுபுறம் 117 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை அண்மையில் 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையில் இயங்கும் இரு பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்று அதன் விலையை மேலும் அதிகரித்து 184 ரூபாவுக்கு விற்பனை செய்கிறது. இந்தியாவில் நிலவும் பெற்றோலிய விலைகளை விடக்குறைவாக இலங்கையின் பெற்றோலிய விலைகள் இருப்பதாக தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.
எதிர்வருங்காலங்களில் மற்றைய போட்டியாளரும் பெற்றோலிய விலைகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமானதாகத் தெரிகின்றன. மின்சார உற்பத்தி வினியோகத்துறை தொடர்ச்சியான பெற்றோலியத்துறையின் அழுத்தங்களுக்கு உட்பட்டு வருகிறது. பெற்றோலிய விலைகளுக்கும் மின்சார உற்பத்திச் செலவுகளுக்கும் அதிகூடிய நெருக்கம் நிலவுவதால் மின்சாரக் கட்டணங்கள் பெரியளவில் அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மேலும் ஒரு சுற்று விலையதிகரிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இறக்குமதித் தடைகள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை ஒரு புறம் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை எற்படுத்துகிறது. மறுபுறம் மக்களின் வருமான மூலாதாரங்களை அது மூடிவிடுகிறது. இவை இரண்டும் இணைந்து பொருளாதாரத்தின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கி நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது.
(15ஆம் பக்கம் பார்க்க)