பத்திரிகை ஜாம்பவான் 'எஸ்.டி.எஸ்' க்கு ஒரு தபால் தலை!! | தினகரன் வாரமஞ்சரி

பத்திரிகை ஜாம்பவான் 'எஸ்.டி.எஸ்' க்கு ஒரு தபால் தலை!!

பத்திரிகை ஜாம்பவான் என்று அழைக்கப்படும் அமரர் எஸ்.டி. சிவநாயகத்தின் ஜனன தின நூற்றாண்டாகும். 02.07.1921 அன்று திருகோணமலையில் பிறந்து வளர்ந்து, கல்வியைத் தொடர்ந்து, கந்தளாய் கூட்டுறவு திணைக்களத்தில் பொறுப்புள்ள அதிகாரியாக, தொழில் துறையில் காலடியெடுத்துவைத்தார். பள்ளிப்பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகையில் அதிக ஈடுபாடு. அதனால் அந்தத்துறையில் முன்னேறவேண்டும் என்ற குறிக்கோள். பத்திரிகை மேதை 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டு தனது எழுத்துத்துறையை வளர்த்துக்கொண்டார். எஸ்.டி.எஸ் என்ற மூன்றெழுத்தின் குருநாதர் அந்த மூன்றெழுத்து கல்கி தான். 1946ம் ஆண்டு 'ஐக்கிய தீபம்' என்ற பத்திரிகையை முதல் முதலில் ஆரம்பித்தார். 1947 ஆண்டளவில், மட்டக்களப்பில் 'உதயன்' என்ற பத்திரிகையையும் நடாத்தி வந்தார். பத்திரிகைத் துறை ஆர்வம் காரணமாக, இலங்கைத் தேசியப் பத்திரிகையான 'தினகரன்' பத்திரிகையில் காலடியெடுத்துவைத்தார். இவரது எழுத்துக்கள், கருத்துக்கள் தினகரன் பத்திரிகை மூலம் பேசப்பட்டது. அவரது எழுத்துத்தில் அரசியல் கண்ணோட்டத்தை அறிந்துகொண்ட தமிழரசு கட்சியின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தனது கட்சியில் இணைத்துக்கொண்டு, 'சுதந்திரன்' என்ற கட்சிப் பத்திரிகைக்கு ஆசிரியராக்கினார். அந்தப்பத்திரிகையில் அவர் எழுதிய ஆணித்தரமான அரசியல் கட்டுரைகளுக்காகவும், 'குயுத்தியார்' என்ற புனைப் பெயரில் வாசகர்களின் வினாக்களுக்கு வியக்க வைக்கும் விதமாக விடையளித்த விவேகத்துக்காகவும் சுதந்திரன் வார இதழ் விற்பனையில் சாதனை படைத்தது.

மற்றோரு தேசியப் பத்திரிகையான 'வீரகேசரிப்' பத்திரிகைக்குள் உள்வாங்கப்பட்டார். அந்தப் பத்திரிகையின் எழுத்து நடையையும், தோற்றத்தையும் ஆசிரியல் தலையங்கங்களை தனது பாணியில் மாற்றியமைத்தார். இலங்கை வாழ் பல இலக்கிய எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும், கவிஞர்களையும், பத்தி எழுத்தாளர்களையும், சிறுகதை நாவல் எழுத்துத்துறை விற்பன்னர்களையும் அறிமுகப்படுத்தியவர் தான் ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம். அவரிடம் பணிபுரிந்த பலர் இலங்கை மட்டுமல்ல உலகமெங்குமுள்ள சகல தமிழ் ஊடகத்துறைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.எம்.டி.குணசேணா என்ற பெரும்பான்மை யினத்தவர்களின் பத்திரிகை ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்த அனைத்து சகோதரப் பத்திரிகையை விட, விற்பனையில் இவரது படைப்புக்களான 'தினபதி - சிந்தாமணி' பத்திரிகைகள் உயர்ந்திருந்தது. 'சிந்தாமணி' பத்திரிகையின் விற்பனை வியக்கவைத்தது. அதன் காரணமாக, முதலும் இறுதியுமாக, ஒரு தமிழனாக அந்த ஸ்தாபனத்தில் நிர்வாகப் பணிப்பாளராக பதவியுயர்த்தப்பட்டார். 'சூடாமணி' 'தமிழின்பம்' என்ற பத்திரிகையின் ஆசிரியரும், தலைவர் சௌம்மியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை படைத்த சாதனையாளரும் இவர்தான்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஆசியும், அவரிடமிருந்து மோதிரம் ஒன்றையும் பரிசாகப் பெற்று, கொழும்பிலுள்ள ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் தலைவராகத் தொடர்ந்து 25 வருடங்கள் பணிபுரிந்தார். இன்று அந்த ஸ்தாபனம் கொழும்பில் பெயரேடுத்து தலைதூக்கியிருப்பதற்கு இவரே காரணகர்த்தா!! இவரது ஜனனதின நூற்றாண்டை முன்னிட்டு, இலங்கை அரசாங்கம், இவரை கௌரவித்து பெப்ரவரி 16ம் திகதி, மாலை 4 மணிக்கு, கொழும்பு இல113 புதுச் செட்டித்தெருவிலுள்ள 'சாயி நிலையத்தில்', ஒரு தபால் தலை ஒன்றை வெளியிடவிருக்கிறது. இலங்கை சரித்திரத்தில் தமிழ் தேசியப் பத்திரிகையாளர் ஒருவருக்கு கிடைக்கும் தேசிய மகுடம் இதுவாகும்.

சிவ இராஜஜோதி

Comments