![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/21/nw01.jpg?itok=sUBwExry)
இலங்கை தொடர்பான சீனாவின் பிரசன்னம் குறித்தே புதுடில்லி பிரதான கரிசனையுடன் இருக்கையில், இலங்கைத் தமிழர் நலன்கள் மீது இப்போது அக்கறை செலுத்தப்படுமா என்பதில் உள்ள சந்தேகங்கள்!
கொவிட் பொருளாதார நெருக்கடி வேளையில் இந்தியா வழங்கும் அதிகரித்த உதவிகள்; இந்திய அக்கறையானது இலங்கைத் தமிழர்கள் மீதான அக்கறைக்கும் அப்பாற்பட்டது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரைச் சந்திப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போதிருந்தே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருமிடத்து அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருக்கு விரிவாக எடுத்துக் கூற இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான நீண்ட கால சிக்கலுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுப்பட்டு வரும் நிலையில், இரா.சம்பந்தன் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இந்திய தரப்பைக் கோரியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி பிம்ஸ்டெக் மாநாட்டில் (வங்காள விரிகுடா பல்துறைசார் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி) கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டை இலங்கை நடத்தவிருப்பதுடன், இதில் அரச தலைவர்கள் நேரடியாகப் பங்கெடுப்பதா அல்லது மெய்நிகர் முறையில் பங்கெடுப்பதா என்பது பற்றி இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அரசாங்கத் தலைவர்கள் நேரடியாகக் கலந்து கொள்வதாக இருந்தால் பாரதப் பிரதமர் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தபோதும் இதுபற்றி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் எதுவித உறுதிப்படுத்தல்களையும் இதுவரை வழங்கவில்லை.
இலங்கையிலுள்ள மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில், 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் கொண்டு வரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை உரியபடி நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு ஆவணமொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கும் நிலையில், தமிழர்களின் அபிலாஷைகள் குறித்து இந்தியப் பிரதமருடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது எதிர்பார்த்துள்ளது.
இலங்கை விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை காண்பித்து வரும் நட்பு நாடு என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இருந்தபோதும், இலங்கை விடயத்தில் இந்தியா தற்பொழுது காண்பிக்கும் அக்கறையானது தமிழ் மக்களின் அபிலாஷைகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்காது என்பதே அவதானிகளின் கருத்தாக உள்ளது.
கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் நட்பு நாடுகளின் உதவியைப் பெறும் நிலைக்கு இலங்கை இப்போது தள்ளப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியை முதலில் பெறுவது குறித்தே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த வரிசையில் இந்தியாவின் உதவிகளை இலங்கை நாடியிருப்பதுடன், பல விடயங்களில் உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், சில தினங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவுக்குச் சென்று பேச்சுகளை நடத்தி விட்டுத் திரும்பியிருந்தார்.
அது மாத்திரமன்றி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் ஒன்லைன் மூலம் நடைபெற்ற சந்திப்பில் இந்தியாவிடமிருந்து உதவிகள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்கு கடன் வழங்க முன்வந்த இந்தியா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் ஊடாக எரிபொருட்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இது மாத்திரமன்றி, எதிர்வரும் நாட்களில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகவும், இதன் போது இந்தியாவிடமிருந்து மேலும் உதவிகள் கிடைக்கவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் சீனா நெருக்கமாகி பல்வேறு உதவிகளைச் செய்துள்ளமையால் இந்தியா சில காலமாக அதிருப்தியடைந்திருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் பலமடைந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா அதிருப்தியைக் கொண்டிருந்தாலும், இக்கட்டான சூழ்நிலைகளில் எப்பொழுதும் இலங்கையைக் கைவிடாத நட்புக் கொண்ட அயல்நாடாக இந்தியா காணப்படுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட கப்பல் தீவிபத்து சம்பவங்களில் கூட உடனடியான ஓடிவந்து உதவியது இந்தியா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரிசையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா மீண்டும் ஒருமுறை உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இலங்கை விடயத்தில் இந்தியாவின் அக்கறையானது தமிழர்களின் பிரச்சினை என்பதற்கும் அப்பால் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்ற பரந்த எல்லைக்குச் சென்றுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய நேபாள இராணுவம் அங்கு ஒரு சாவடியை அமைக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரைத்திருந்தது. இது தவிர, நேபாளமும், சீனாவும் எல்லை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, செயலிழந்த நிலையில் இருக்கும் செயல்முறைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை நிபுணர்கள் இதுபற்றி தெரிவிக்கையில், "எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள் தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவர்களால் மட்டுமே நேபாள எல்லையை சரியாக பாதுகாக்க முடியும்" என்கிறார்கள்.
வரைபட நிபுணரும், நேபாள நில அளவைகள் துறையின் முன்னாள் தலைவருமான புத்திநாராயண் ஷ்ரேஷ்டா இக்கருத்தைக் கூறினார். இதுஒருபுறமிருக்க, நேபாளத்தில் சுமார் 20,000 திபெத்திய அகதிகள் வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்தும் பல திபெத்தியர்கள் நேபாளத்திற்கு வருகிறார்கள். இந்தச் சூழலில் திபெத்தியர்களுக்கான வழிகளையும் சீனா சமீபத்திய ஆண்டுகளில் மூடியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவின் அத்துமீறல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த அறிக்கைகள் தொடர்பாக தலைநகர் காத்மண்டுவிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“நேபாளத்துடன் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை எதுவும் இல்லை. போலி அறிக்கையால் நேபாள மக்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்று நம்புகிறோம்” என்று சீன தூதரகம் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
மறுபுறத்தில் இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது இராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது.
சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் இராணுவ கட்டமைப்பு வளர்ச்சியுடன் இராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.
இது போன்ற கட்டமைப்பை இந்தியா மேற்கொள்வது புதிதல்ல என்றாலும், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற இருக்கும் அவசரமும் வேகமும் இங்கு கவனிக்கத்தக்கவையாகும்.
கடந்த ஆண்டு, எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், 20 இந்தியப் படையினரும், குறைந்தபட்சம் நான்கு சீனப் படையினரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியாவின் திட்டங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
லடாக் மோதலையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியா வீதிகள் அமைப்பது, ரயில் பாதைகளை இணைப்பது, விமானத் தளங்களை அமைப்பது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ உபகரணங்களை நவீனமாக்கும் பணியிலும் பெரும் முதலீடு செய்துள்ளது.
"தற்செயலாக எது நடந்தாலும், அதனை சமாளிக்க இந்தியாவிடம் ஒவ்வொரு துறையிலும் போதுமான படைகள் உள்ளன" என்று இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காலாட்படை, பீரங்கிப்படை, வான் பாதுகாப்பு, பீரங்கிப் படை வண்டிகள், கப்பற்படை ஆகிய பிரிவுகளிலும் புதிய போர் உருவாக்கங்களுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த குழுக்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பகுதிகளில் அவசர கால கட்டத்தில் வேகமாக முன்னேற உதவும்.
இதில் ஒரு முக்கிய கட்டடமைப்பு திட்டமாக, ஓர் முக்கிய மலைப் பாதையில், கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர்களுக்கு மேல் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இரு வழி சுரங்கப்பாதையாகவுள்ள இந்த சுரங்கப்பாதை, சீனாவின் தடுப்புக்காவல் இல்லாமல் இந்தியா தனது படைகளை முன்னெடுத்து செல்ல உதவும் என்ற உள்நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.
படைகளையும் பொருட்களையும் கொண்டு செல்ல லடாக்கின் எல்லைப் பகுதியில், இராணுவம் முக்கிய வீதி நிர்மாணிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
கடந்த சில மாதங்களாக, சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய பகுதிகளில், இந்தியா தனது படைகளையும் ஜெட் விமானப் படைகளையும் நகர்த்தியுள்ளது. அப்பகுதி மக்களுக்கு இது தெரிந்துள்ளது என்று ‘ப்ளூம்பேர்க்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, தற்போது இந்தியா சுமார் இரண்டு இலட்சம் படைகளை எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் விதமாக அமைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம்" என்று அச்செய்தி கூறுகிறது.
பி.ஹர்ஷன்...