![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/21/nw06.jpg?itok=Wfq7Z9LL)
“அடுத்த ஐந்தாண்டு வேலைத்திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார் ஜனாதிபதி. இது நடந்தால் நல்லது. மகிழ்ச்சி.
ஏனென்றால், நாடு இப்பொழுது எதிர்கொண்டிருக்கும் நிலை மிகப் பாரதூரமானது. உற்பத்தி வீழ்ச்சி அல்லது போதாமை. பொருளாதார நெருக்கடி. அந்நியச் செலாவணியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, கொவிட் தாக்கம் போன்றவற்றிலிருந்து நாடு மீள வேண்டியுள்ளது.
இதற்கு விரைவான, சிறந்த, புதிய மேம்பாட்டுத்திட்டங்களும் நடவடிக்கைகளும் அவசியம். ஏறக்குறைய இடர் நீக்கு நடவடிக்கைகளைப் போல துரிதமாக இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவேதான் ஜனாதிபதியின் அறிவிப்பை நாம் மகிழ்ச்சியுடன் நோக்க வேண்டியுள்ளது.
ஆனால், இதற்கு நடைமுறையில் பல பிரச்சினைகள் உண்டு. ஒன்று கொவிட் 19 இன் புதிய அவதார வடிவங்கள். இரண்டாவது, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி. மூன்றாவது, உள்நாட்டின் அரசியல் குழப்ப நிலவரம். நான்காவது நாட்டில் பெருகியுள்ள ஊழல். ஐந்தாவது, அரச திணைக்களங்கள், அதிகாரசபைகளில் காணப்படும் அசிரத்தை.
ஆகவே ஜனாதிபதியின் அல்லது அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு பல நெருக்கடிகளைக் கடக்க வேண்டும். முன்னுள்ள சவால்களை முறியடிக்க வேண்டும்.
இதற்குச் சரியான பொறிமுறை அவசியம்.
தற்போது பல நடவடிக்கைகளையும் படைத்துறையின் பங்கேற்புடன்தான் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதைக்குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் இதை வரவேற்போரும் உண்டு. காரணம், விரைவான செயற்பாடு.
ஊழல் குறைவு. வினைத்திறன் அதிகம் போன்றவையாகும்.
ஆனாலும் சிவில் செயற்பாடுகளில் படைத்துறையினரின் நேரடித் தொடர்பாடல் நீண்டகால அடிப்படையில் பாதிப்பை உண்டாக்கும் என்ற ஜனநாயக நோக்கு நிலை உண்டு.
இந்த நிலை உருவாகுவதற்குக் காரணமாக இருப்பதும் சிவில் நிர்வாகத்தில் இயங்குவோரே. அவர்களுடைய அசிரத்தையும் வினைத்திறனின்மையும் ஊழலும் தவிர்க்க முடியாமல் படைத்தரப்புக்கான வாசல்களைத் திறந்து விடுகிறது. உதாரணமாக, சட்டவிரோத மணல் அகழ்வு, காடழிப்பு மற்றும் மரம் வெட்டுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றுச் சூழல், கனிய வளங்கள், வன இலாகா, பொலிஸ் போன்ற தரப்புகள் உள்ளன. இதை விட மாவட்டச் செயலங்கள் வேறுள்ளன.
இருந்தும் இவை கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் நடந்து கொண்டேயிருக்கிறது.
அப்படியென்றால் இவற்றில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
இதைக்குறித்து மக்கள் மத்தியில் உள்ள அபிப்பிராயம் கவலையளிப்பது. அவர்கள், இந்தத் தரப்புகளின் மீது நம்பிக்கை இழந்த நிலையில்தான் உள்ளனர்.
இதற்குப் பதிலாகச் சில இடங்களில் படையினர் கண்காணிப்பைச் செய்கின்றனர்.
அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அவ்வாறான இடங்களிலும் இவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
இதை மக்கள் அவதானிக்கின்றனர். அதிகம் ஏன், யாழ்ப்பாணத்தில் படையினர் குறைக்கப்பட வேண்டும். விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே விடுக்கப்படுகிறது. ஒரு பொதுமகன் என்ற அடிப்படையில் இதை யாரும் வரவேற்பர். ஏனெனில் உலகெங்கும் உள்ள நடைமுறையின்படி போரில்லாத சூழலில் மக்கள் மத்தியில் இல்லாமல் படையினர் புறத்தில் ஒதுக்கம் கொண்டிருப்பதே வழமை. அமெரிக்கா தொடக்கம் சீனா வரையில் இதுதான் நிலை.
இதன்படி நாமும் யுத்தச் சூழலில் இருந்து மீண்டு விட்டோம் என்பதை உணர, அந்த உணர்வுப் பாதிப்பிலிருந்து மீள சுயாதீனமான சூழலில் வாழ்வதே சிறப்பு.
ஆனால், இதை மக்கள் முழுமையாக ஏற்கிறார்களா? என்பது கேள்விக்குரியதே.
ஏனென்றால் அங்கே (யாழ்ப்பாணத்தில்) வாள் வெட்டுத் தொடக்கம் இளையோர் மத்தியில் காணப்படும் வன்முறை நடவடிக்கைகள் வரையில் படையினரின் நிலை கொள்ளலை வரவேற்பதாகவே உள்ளது.
படையினர் முற்று முழுதாக நீக்கப்பட்டு விட்டால் எல்லாமே பாழாகி விடும், தமக்குப் பாதுகாப்பற்றுப் போய் விடும் என்று கருதுவோர் பலருள்ளனர்.
இது எவ்வளவு மோசமான ஒரு நிலை?
அப்படியென்றால் சட்டம் ஒழுங்கைப் பேணுகின்ற தரப்புகளின் வினைத்திறன் என்ன? பொறுப்பென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.
இதேவேளை இதை மறுவளமாகப் பார்ப்போரும் உண்டு. இந்த வன்முறைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. வன்முறைக் குழுக்கள் உள்நோக்குடன் உருவாக்கப்படுகின்றன என்று இவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால், நாடு எங்கே போகிறது?
அப்படியென்றால் இதன் பின்னுள்ள சேதி என்ன?
இப்படிச் சிக்கலடைந்திருக்கும் நாட்டின் சூழலில் திட்டமிட்டவாறு மூன்று ஆண்டுகளுக்குள் இலக்கை எட்டுவதற்குக் கூட்டுப் பொறிமுறை அவசியம்.
இந்தக் கூட்டுப்பொறிமுறை என்பது அனைத்துத் தரப்பினரையும் முடிந்த வரையில் உள்ளீர்ப்பதாக இருக்க வேண்டும்.
இது பல எலிகள் கூடினால் வளை எடுக்காது என்ற முதுமொழியை பலருக்கும் நினைவு படுத்தலாம். ஆனால், அப்படியல்ல இது. ஒரு தேசிய இடரின் போது அல்லது நெருக்கடியின் போது அனைத்துத் தரப்பின் பங்களிப்பும் பங்கேற்பும் கிடைக்க வேண்டும். அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் சிறப்பானது.
இலங்கையில் அமைதியை, சமாதானத்தை, அதற்கான அரசியற் தீர்வை எட்டுவது தொடக்கம் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் ஆக்கிரமிப்பு போன்றவற்றையெல்லாம் தடுப்பதற்கும் இந்தக் கூட்டுப் பங்கேற்பும் பங்களிப்பும் அவசியம்.
ஏனென்றால் இவற்றினால் உண்டாகும் பாதிப்பு அனைத்துத் தரப்பையும் தாக்குகின்றது. அது எத்தகையதாக இருந்தாலும் கூட.
எனவேதான் அனைத்துத் தரப்பின் பங்கேற்பும் பங்களிப்பும் அவசியம் என வலியுறுத்தபடுகிறது.
இதை எட்டுவதற்கு அதற்கான உளநிலைகளை தயார்ப்படுத்த வேண்டும்.
ஏனெனில் இலங்கையின் அரசியற் பண்பாடு என்பது எதிர் எதிர்த்துருவ நிலைப்பட்டது.
ஒரு தரப்பு ஒரு தீர்மானத்தை எடுத்தால் அது எவ்வளவு சரியாக இருந்தாலும் மறு தரப்பு அதை மறுத்து நிராகரிப்பதே வழமையாகி விட்டது.
இவ்வாறான உளநிலையில் கூட்டுச் செயற்பாட்டுக்குரிய மனப்பாங்கை உடனடியாக வளர்க்க முடியாது. அதற்கொரு பண்பாட்டுத் தயாரிப்பு வேண்டும். அதை அரசாங்கம் முன் வந்து செய்ய வேண்டும். அதற்கே இதில் அதிக பொறுப்புண்டு. அப்படிச் செய்யும்போதுதான் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியும். இதொன்றும் மந்திரமோ மாயமோ இல்லை.
நடைமுறை ரீதியாக எட்டப்பட வேண்டி ஒன்று. அவசியமான ஒன்று. நாடு என்பது அனைவருக்கும் பொதுவானாது.
அதன் வளங்கள் தொடக்கம், சட்டம், ஒழுங்கு, நீதி, வளர்ச்சி, வீழ்ச்சி என அனைத்திலும் அனைவருக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு. அனைவரும் சரியாகவும் சீராகவும் இயங்கும்போதே நெருக்கடியைக் கடக்க முடியும். வளர்ச்சியின் – முன்னேற்றத்தின் இலக்கை எட்ட முடியும்.
அப்படியென்றால் எந்தத் திட்டத்திலும் அனைவருக்கும் பங்கும் பங்கேற்பும் உண்டு அல்லவா!
நமது ஆட்சி முறை எப்படியானது?
மக்கள் பிரதிநிதித்து முறையை அடிப்படையாகக் கொண்டதல்லவா. அதில் பல தரப்புகளின் பங்கேற்புக்கும் பங்களிப்புக்கும் இடமுண்டே. பாராளுமன்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் பல வேறு தரப்புகளின் சங்கமிப்புள்ளதல்லவா.
இதன் திரண்ட வடிவம்தான் எதிர்காலத்துக்கான திட்டமிடல்களும் நடவடிக்கைகளுமாகும். ஆதுவும் இந்த இடர் நெருக்கடிக் காலத்தில் இதை இன்னும் கூர்மையாக நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.
இதை நாடும் மக்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு சிறந்த கப்டனாக நாட்டின் தலைவர் இதை வழிநடத்த வேண்டும்.
அதற்கான அறை கூவலைக் காலமும் தேசமும் விட்டுக்கொண்டிருக்கிறது. பார்ப்போம் நல்லன நடக்கட்டும் என்று எதிர்பார்ப்போம்.