![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/28/ab9843b7_18270_P_9_mr.jpg?itok=rqoWu89H)
சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் படைகள் எல்லைப்புறத்தில் மேற்கொள்கின்ற ஊடுருவல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் விதத்தில் இந்தியா தனது இராணுவப்படையின் அடிப்படைத் தளங்களை வலிமைப்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது மாத்திரமன்றி, எவ்வாறான மோதலையும் முறியடிக்கும் விதத்தில் இராணுவ வன்பொருளையும் தொழில்நுட்பத்தையும் நவீனமாயமாக்குவதிலும் இந்தியாவின் கவனம் அதிகரித்து வருகின்றது.
கடற்படை ஆயுதங்கள், பீரங்கிவகை துப்பாக்கிகள், போக்குவரத்து ஹெலிகொப்டர்களுடன் தனது நாட்டின் எல்லைப் பகுதிகளில் கமராக்கள், ரேடார்கள், உணரிகள், நகரும் கண்டறிவிகள், செயற்கைக்கோள் உருவகம் மற்றும் ட்ரோன்கள் ஆகியவையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது என்று 'தி ப்ரிட்' செய்தி வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது.
"நீங்கள் எவ்வளவு தயாராக இருந்தாலும் சரி, அவை எப்போதும் போதுமானதாக இருக்காது. தொழில்நுட்பத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இது அச்சூழ்நிலையின் முழுவிபரத்தையும் அறிந்து கொள்ள உதவுவதுடன், எதிரி நாடுகளின் செயற்பாட்டை முன்னதாக தகவல் அறிவதற்கும் உதவும்" என்று இராணுவ உயரதிகாரியொருவர் கூறியதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கண்காணிப்பையும் உளவு பார்ப்பதையும் பலப்படுத்த புதிய வான் பரப்பு படைப் பகுதி இந்திய இராணுவத்தினால் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பில் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகொப்டர்கள், ஹெலிகொப்டர்கள் (ஏ.எல்.எச்), ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி விமானங்கள், ஏ.எல்.எச்சின் ஆயுத வகையான ‘ருத்ரா’ ஆகிய உபகரணங்கள் உள்ளன.
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவுடன் ஏதேனும் மோதல் ஏற்படுகின்ற பட்சத்தில், இந்த படைப்பகுதி போர் செயல்பாடுகளில் உதவும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தில், மற்றைய நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளுடன் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஜெட் போர் விமானங்களையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இப்பகுதியில், மற்றொரு முக்கிய இராணுவ செயல்பாடு இதுவாகும்.
5000 கி.மீ தூரம் செல்லக் கூடிய அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்திருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்திய ராணுவப் படை வியூகத்தில் இது மற்றொரு முக்கிய வெற்றியாகும். இது சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்கும் திட்டம் என்று இந்திய ஊடகங்களில் பரவலாக கூறப்படுகிறது. அதாவது சீனாவோ அல்லது பாகிஸ்தானோ எதிர்காலத்தில் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தியா தனது எல்லையில் பாதுகாப்பை இவ்வாறு பலப்படுத்தி வருகின்றது.
இதற்கு முன்னர், இந்திய ஏவுகணை தொகுப்பில் 1500 கி.மீ வரை சென்று தாக்கக் கூடிய ‘அக்னி ப்ரைம்’ ஏவுகணைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுகோய், மிராஜ், ஜகுவார் போர் விமானங்களின் பழைய வடிவத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘எஸ் 400 ஏவுகணை மறிப்பு சிஸ்டம்’ களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் ஏவுகணைகளை வழிமறித்து வானத்திலேயே தாக்கி அழிக்கும் வகையில் இந்த ‘மிஸைல் சிஸ்டம்’ களமிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தயரிப்பான ‘எஸ் 400 மிஸைல் சிஸ்டம்’ தற்போது களத்தில் பயன்படுத்தப்பட தொடங்கி உள்ளது.
இதேவேளை இந்தியா - ரஷ்யா இடையிலான இந்த ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே விரும்பவில்லை. இந்த நிலையில்தான் இந்தியா எஸ் 400 மிஸைல் சிஸ்டத்தை பயன்படுத்தத் தொடங்கி உள்ளது. உலகிலேயே அதி வேகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிஸ்டம் S-400 missile சிஸ்டம் ஆகும். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்பது ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அல்லது எதிர் ஏவுகணைகள் அல்லது குண்டுகள் என்றும் கூறலாம்.
ஒரு நாட்டைத் தாக்க வரும் ஏவுகணைகளை முறியடிக்க எதிர் ஏவுகணைகளை ஏவி முறியடிக்க முடியும். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) மூலம் இவ்வாறு தாக்கி அழிக்க முடியும். எஸ்-400 (S-400) ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும். இது 400 கி.மீ தூரத்தில் இருக்கும் போதே ஏவுகணைகளை குறி வைத்து தாக்கி அழிக்கவல்லது. 30 கிமீ தூரத்தில் உள்ள ஏவுகணைகளை கூட எஸ்-400 தாக்கி அழிக்கும். எஸ்-400 (S-400) என்பது பல பயன்பாட்டு ரேடார் வசதி கொண்ட multifunction radar கொண்ட சிஸ்டம் ஆகும்.
இதில் இருக்கும் ரேடார் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. தானாக ஓட்டோமெட்டிக் முறையில் ஏவுகணைகளை கண்டுபிடித்து, அதை இலக்கு வைத்து, தாக்கி அழிக்கும். மொத்தம் மூன்று விதமான ஏவுகணைகளை ஏவி எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும். ஒரே நேரத்தில் 36 இலக்குகளை எஸ்-400 தனது ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.