![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/28/a13.jpg?itok=fjjiMIQo)
வாழ்க்கையின் மிகப் பெரும் துயரம் அன்புக்குரியவர்களின் இழப்பாகும். அச்சு ஊடகத்திற்கும் பின்னர் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நேர்மறையாகவும் திறமையாகவும் பங்களிப்பை வழங்கிய அன்பான மனிதரின் கடைசி பிரிவு பல காரணங்களுக்காக எமது மனங்களைக் கனக்கச் செய்கிறது. அழகியல், கலை மற்றும் அன்பான எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் திறமைகளைக் கொண்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார எம்மிடம் இருந்து பிரிந்து சென்றமை திடீரென ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வாகும். நாம் பொதுவாக மரணத்தைப் பற்றிய புரிதலைக் கொண்டுள்ளோம். வாழ்வின் நிலையற்ற தன்மையை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் நமது கடந்த கால இனிய நினைவுகள் மறக்க முடியாமல் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.
அன்றும் இன்றும் என்றும் நான் அவரை பந்துல அண்ணா என்றே அழைப்பேன். அவரும் என்னை தம்பி என்றே அழைப்பார். பிரபாத்குமார, குமுது குசும்குமார, பூஜிதசிரி குமார மற்றும் இரண்டு சகோதரிகளும் அவருக்குள்ளார்கள். எனக்குத் தெரிந்தளவில் அவரது தந்தை ஒரு அதிபராவார். ஊர் மாத்தரை கும்புறுபிட்டி என அறிந்துள்ளேன்.
குமுது குசும்குமார மற்றும் ஏ. டி. ரஞ்சித் குமார ஆகியோரால் ஆரம்பத்தில் வெளியிட்ட புகைப்பட சினிமா சஞ்சிகை பின்னர் பந்துல பத்மகுமாரவினால் வெளியிடப்பட்டது. கீதா சினிமா சஞ்சிகையும் அவரது தயாரிப்பாகும். கித்சிரி நிமல் சாந்த உள்ளிட்ட அனேகமானோர் பந்துலவின் ஊடாகவே களத்திற்குள் பிரவேசித்தார்கள்.
அவரது கை எழுத்து மிகவும் அழகானதும், கலைத்தன்மை கொண்டதுமாகும். அவர் எனக்கு முதலில் அறிமுகமானது 70ம் ஆண்டு காலப்பகுதியின் கடைசியில் பாடசாலை காலத்திலாகும். அது இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பத்திரியைாகும். சந்திரா வீரசிங்க, உபாலி வீரவர்தன, காமினி மெண்டிஸ், நந்தனி கால்லகே, தர்மரத்ன பெரேரா, குமார சிரிவர்தன, பத்மி பிங்தெனிய, உபாலி பண்டார வீரசேகர மற்றும் நானும் உட்பட்ட குழுவினர் அவரது நிழலில் அவருக்கு கைகொடுத்து வெகுஜன ஊடக உலகில் களமிறங்கினோம். உபுல் சாந்த சன்னஸ்கல, பிரதீப் குமார பாலசூரிய, மைக்கல் ஏன்ஜிலோ, பெர்னாண்டோ, ஜயந்த களுபஹன போன்றோர் களத்திற்கு வந்ததும் பந்துலவினால் ஈர்க்கப்பட்டாகும். கெமிலஸ் பெரேரா, ஆதர் யூ. அமரசேன போன்றோர் பந்துலவிற்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள். ரெஜின பத்திரிகையை பெண்களுக்காக புதிய திருப்பங்களுடன் ஆரம்பித்தார். அரலிய மற்றொரு அற்புதமான பத்திரிகையாகும்.
பாடல், இசை பற்றியதாக புதிய எதிர்பார்ப்புக்களுடன் அவர் ஹாபுரா என்ற பத்திரிகையாக வெளியிட்டார். இங்கு அறிவொளி கலாசாரம் மற்றும் பிரபல கலாசாரமும் கலந்தது. ரீடர்ஸ் டைஜஸ்ட் வகையிலான சஞ்சிகை முத்துஹர என்ற பெயரில் வெளியிடப்பட்டதோடு, நாட்டில் இன்றும் அதிக வரவேற்பைக் கொண்டுள்ள இனப்பெருக்க சுகாதார துறைக்கு அறிவை வழங்கும் பத்திபத்தினி சஞ்சிகையும், செனெல் புகைப்பட கலைக்கும், ஆடை அலங்காரத்திற்கும் பின்னைய காலங்களில் தயாரிக்கப்பட்ட அம்மீ சஞ்சிகையைப் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும். பம்பலப்பிட்டியைப் போன்று டீ. ஆர். விஜேவர்தன மாவத்தையிலும், புறக்கோட்டையில் புத்தகக் கடைகளில் நிறைந்திருக்கும் வெளிநாட்டு சஞ்சிகைகள், புத்தகங்கள், பத்திரிகைகளை விலைக்கு வாங்கி அதிக சிரமங்களுடன் தனது பத்திரிகை, சஞ்சிகைகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் அவரது திறமை, ஆற்றல் புதுமையானதாகும். எமக்கும் அவர் வழிகாட்டினார்.
சமன்மலீ பத்மகுமார அவரது அன்புக்குரிய மனைவியாகும். ஹிரு மற்றும் முத்து என இரண்டு பிள்ளைகள் அவருக்கு உள்ளனர். முத்து ஆங்கில மொழியில் கவிதை எழுதுபவராகும். சமன்மலீ சிறுவர் கவிதைகள், பாடல்களை எழுதுபவராகும். தாகோர் சங்கத்தின் செயலாளருமாகும்.
சினிமா, இசை, நாடகம், இலக்கிய விமர்சனங்களை அதிகளவில் எழுதியுள்ள பந்துல, சினிமா திரைக்கதை வசனங்களை எழுதிய திரைப்பட இயக்குனராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டிய சிறந்த கலைஞருமாகும். அவர் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும் செயற்பட்டார்.
அவரால் தயாரித்து வழங்கப்பட்டு பிரதான இலத்திரனியல் ஊடகத்தினால் ஒளிபரப்பப்பட்ட முல் பிட்டுவ மற்றும் லோக சிதியம் எமது காலத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய இரு சுவாரஸ்யமிக்க நிகழ்ச்சிகளாகும். உலக விவகாரங்களை காலை வேளையில் அவர் வீட்டிற்கே கொண்டு வந்தார்.
பல கவிதைகளை மொழிபெயர்ந்த பந்துல, அமரதேவவைப் பற்றியும், லெஸ்டர் தொடர்பிலும் மிகவும் பக்தியுடன் புத்தகங்களை எழுதியுள்ளார். விக்டர் ரத்நாயக்கா, பிரேமசிரிய கேமதாச ஆகியோரையும் சிறந்த நண்பர்களாக நேசித்தார். அண்மையில் ப்ளேபோய் என்ற பெயரில் சிறு கதை தொகுதி ஒன்றையும் வெளியிட்ட பந்துல, நான் உட்பட அனேகமானோரின் வாழ்க்கையின் தடைகளைத் தாண்டுவதற்கு பெருமையின்றி கைகொடுத்து உதவினார்.
மிகவும் சுத்தமாக அழகாக ஆடை அணிவதற்கு ஆசைப்படும் அவர், அடிக்கடி புத்தகங்களை வாசிப்பது எனக்கு நினைவில் உள்ளது. குமரி பத்திரிகையின் விற்பனை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு அவர் என்னை இயக்கியது எனக்கு நினைவில் உள்ளது. பிறரிடமிருந்து வாங்கிக் கொள்ளும் துவிச்சக்கர வண்டியில் காலி வீதி, கண்டி வீதி, நீர் கொழும்பு வீதிகளில் பத்திரிகை கடைகளுக்கும், புத்தகக் கடைகளுக்கும் என்னை அனுப்பியது மிகுந்த விடாமுயற்சியையும், தைரியத்தையும் என்னுள் கட்டியெழுப்பியது. எனது பல்கலைக்கழக வாழ்வில் உதவித் தொகை கிடைக்காத எனக்கு குமரி பத்திரிகையின் உதவி ஆசிரியராக வழங்கப்பட்ட சம்பளம் பெரிதும் பயனளித்தது.
விஜய குமாரதுங்கவின் தூர நாட்டிலிருந்து வந்ததைப் போன்று பத்திரிகை தொடர் கதையினை எழுத வைத்தவர் அவராகும். நான் அல்லது வேறு யாரேனும் ஒருவர் அனேகமாக அந்த தொடர்கதையின் பிரதிகளை எடுத்து வருவதற்காக பஸ்ஸில் விஜயவின் வீட்டுக்குச் சென்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகும். பகல் உணவு வேளைக்கு சமன்மலீ சுவையாகவும், தரமாகவும் சமைத்து அனுப்பும் உணவுப் பொதியிலிருந்து எமக்கும் சுவையான கறிகளைப் பரிமாறிக் கொள்வது என்றுமே மறக்க முடியாத நினைவுகளாகும். பிரச்சினைகள், குழப்பங்களை வெற்றி கொண்டு முன் வைத்த காலை பின்வைக்காமல் முன்னேறிச் சென்றார். அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்தார்.
பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர
தமிழில் - எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)