கசப்பு-1
இந்த வாரத்து இப்பகுதியை வியாழக்கிழமைப் பூர்த்தி செய்து பிரதம ஆசிரியர் வசம் ஒப்படைக்கப் புறப்படும் சமயத்தில்.
தூரத்தில் குண்டுச் சத்தங்கள்! சிலமாதங்களாக எதிர்பார்த்திருந்த 'ரஷ்யக் குண்டுகள்"
இலங்கையை நோக்கி அல்ல என்றாலும் நம்மைப் பாதிக்கப் போகிறவை அவை. 'உக்ரைன்' என்கிற நாட்டை நோக்கிய ரஷ்யாவின் தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு, படையெடுப்பு எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம் பொருந்தும்.
ஞாயிறு காலைப் பொழுதில் அபிமானிகளுக்குப் பல பாரதூரமான செய்திகள் கிடைத்திருக்கும். ஆனால் நம் நாடு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்க்கக் கூடிய அத்தியாவசியத் தேவைகள் எவையெல்லாம் தடைப்படும் என்பதே பெரும் சிந்தனை.
அந்தக் கவலையுடன் அடுத்த கசப்பை வழங்குகின்றேன்.
கசப்பு-2
தூத்துக்குடி
தமிழகத்தின் பழம்பெரும் துறைமுகப்பட்டினங்களில் ஒன்று 'முத்து நகர்' என்றும் அழைப்பார்கள்.
ஒரு காலத்தில் முத்துக் குளித்தலும் முத்துச் சந்தையும் ஓஹோ!
நமது இலங்கைக்கும் இதற்கும் கடல் வழிப்பயணம் ரொம்ப சுகமானது, பாதுகாப்பானது. ஒரு தடவை சொகுசுக்கப்பலில் பயணித்த அனுபவம் அலாதி.
இந்தத் தூத்துக்குடி - கொழும்பு கடல் பாதைக் கதை பல நூறு ஆண்டுகளைக் கடந்த ஒன்று. எவ்வாறாயினும் இப்போது இந்தப் பாதையில் இரவுக்காலங்களில் எது நடக்கிறது?
கள்ளக் கடத்தல்! அதுவும் பிரதானமாகப் போதைப் பொருட்கள்!
இது, வழமைச் சவாரி!
கடந்த வாரம் நடந்த சம்பவம் இங்கே :-
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 30கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கின. இது தொடர்பாக 8பேர் கைது செய்யப்பட்டனர்.
படகில் சோதனை நடத்தியபொழுது, அப்போது படகின் அடிப்பகுதியில் 5பொலித்தீன் பைகளில் 2கிலோ வீதம் வௌ்ளை நிற கற்கண்டு போன்ற பொருள் இருந்தது. அது கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. அது ஐஸ் என்றும், சிந்தடிக் போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. பொலிசாரிடம் சிக்கிய அந்த 10கிலோ போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 30கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தூத்துக்குடி கடல் பகுதில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இனி வரலாறு எழுதுபவர்கள், "தூத்துக்குடி என்ற முத்து நகர், முத்துக்களும் கிராம்பு, ஏலக்காயும், உப்பும், கருவாடும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்தகாலம் அழிந்து 2021-22ஆம் ஆண்டு காலங்களில் போதைப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்றது மனித குலத்தின் அவலம்" என்றே பதித்துத் தீருவார்கள்.
இனிப்பு-1
ஒருவரது பெரும் இழப்பில் அவரது நினைவலைகளில் நீ்ச்சலிட ஒரு வாய்ப்பு கடந்த ஞாயிறு பொழுதில்...
"சங்கர் நற்பணி மன்ற"த்தார் நடத்திய நினைவேந்தல் பழைய கலை நிகழ்வுகளை அள்ளி இறைத்தன.
யாருக்காக வைபவம் என்பதை அபிமானிகள் முதலில் அறியவேண்டும்.
வடதிசையின் பருத்தித்துறையைச் சேர்ந்த " சங்கர்" இளமையிலேயே நல்ல தொழில் ஒன்றை மேற்கொண்டிருந்தவர். "தேயிலைப் பரிசோதகர்" என்ற நிபுணத்துமிக்கப் பணியில் பெரும் சம்பாதிப்பில் கொழும்பில் வலம் வந்தார். அந்தச் சமயம்.
கலைத்தாகம் அளவுக்கதிமாக ஏற்பட, ஒரு சந்தர்ப்பத்தில் தொழிலா, நாடத்துறையா என்ற பெரும் கேள்வி எழுப்ப தொழில் தோற்றது!
அப்பொழுது கொழும்பு நகரில் மூலை முடுக்குகளில் எல்லாம் நாடகம், நாடகம் என்பதே பேச்சாக இருந்த பொழுது " சங்கர்' கிழமை தோறும் மேடை ஒன்றில் காணப்பட்டார்.
கொழும்பு நாடக ஜாம்பவான்களின் நெறியாள்கையில் ஓர் ஒப்பற்ற கலைஞனாக ஜொலித்தான்.
நாடக ஜாம்பவான் கலைச்செல்வனின் "கொள்ளைக்காரன்" "தங்கப்பதக்கம்", "ராதா", "
அந்தனி ஜீவாவின் "முள்ளில் ரோஜா", "அக்கிப் பூக்கள்", "பறவைகள்" மற்றும் "பரதன் பெற்ற பாதுகை",
எம்.எம். மக்கீன் என்று பெயரில் மேடைநெறியாள்கை செய்த இந்தப் பேனாக்காரனின் "டயல் 'எம்' போர் மர்டர்" ஒரு யாழ் மைந்தனை மாபெரும் கலைஞனாக்கியது.
அப்புறம், திரை நட்சத்திரம்!
'தினகரன்' நிழற்படக் கலைஞராகத் திகழ்ந்த அமரர் கிங்ஸ்லி எஸ். செல்லையா, தன் ஆனந்தா புரடக்சன்ஸ் பதாகையில் தொழில் அதிபர், புரவலர் ஜி. நாராயண சாமி பொருள் உதவியில் வெளியிட்ட இலங்கைத் தமிழ்ப்படம் "மஞ்சள் குங்குமம்" கதாநாயகன்.
இப்படத்தை ரசித்த நம்கால நடிகர் திலகம் சிவாஜி கணேசனார், முதல் சினிமாஸ்கோப் படமான "ராஜ ராஜ சோழனில் தன்னுடன் நடிக்கும் சந்தர்ப்பம் வழங்க, அது "பைலட் பிரேம்நாத்" வரை கொண்டு சென்றது. இப்பொழுது கலைமகளும் கால மகளும் 42ஆண்டுகளைக் கடக்கச் செய்து "கலை வேந்தன் சங்கர்" என்ற கலைஞரை நினைவுகூரச் செய்யவைத்திருப்பதற்கு உறுதுணை ஒரு சண்முகராஜா.
இவரும் ஒரு கலைஞரே! ஆனால் ரொம்ப வித்தியாசமான லட்சியங்களை, நோக்கங்களைக் கொண்டிருக்கிறவர். அதனால் தான் 'கலைவேந்தன்' சங்கர் பிரியாவிடை பெற்ற காலத்திலிருந்து தொய்வின்றித் தொடர்ந்து 42ஆண்டுகளாய் அவரைத் தலைநகரில் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கிறார்...
அதுவும் பாருங்கள், கடந்த இரு ஆண்டுகளுக்கிடையில், கொழும்பில் கலைத்துறையில் ஈடுபட்டிருந்த, எம். ஏகாம்பரம், கே. சோமசுந்தரம், ஆர்.கே. புஹாரி ஆர். திவ்வியராஜன், டேனியல் செல்வராஜ், ஜோக்கீம் பெர்ணாண்டோ, மாத்தளை கார்த்திகேசு, பாரதி மணி, எச்.யூ. தாஹிரா ஆகிய கலைமாமணிகள் பிரியாவிடை பெற்றுள்ளனர். சிலர் மறைந்தது பல நாட்களுக்கு பிறகே வெளிச்சம்!
இவர்கள் அத்தனை பேருக்கும் எந்த நினைவஞ்சலி எங்கே நடந்தது?
கலைஞர் சண்முகராஜாவுக்கு அனைவரும் புகழாடை போர்த்த வேண்டும்.
அன்று ஏற்புரையில் அவர் இந்தக் குறிப்பை உதிர்த்தார்.
* "42ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்த்தி விட்டேன். கடவுள் 50ஆம் ஆண்டு வைபவத்தையும் நான் செய்யக் கூடிய வல்லமையை வழங்கி வாழ்நாளை நீடிக்க வேண்டும்!"
மெய்சிலிர்க்கிறது. மெய்யாகவே சண்முகராஜா நீடு வாழ அந்தச் சக்தியாளனை இறைஞ்சுவோம்.
இனிப்பு-2
தமிழ்நாட்டில் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் மைந்தர் இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிபீடம் அமைத்து ஒன்பதே மாதங்கள். இந்தக் காலத்தில் நல்லவை நடக்க, நல்லாட்சி புரிய 'கிருமிகளின்' படுதொல்லைகள் ஒரு புறமும் எதிர்க்கட்சிகளின் இடையூறுகள் மறுபுறமும் இந்த நிலையில், கடந்த 19ல் நமது மாநகரசபை (முனிசிப்பில்) உள்ளூராட்சி சபை, பிரதேச சபை போன்றவற்றுக்கு நிகரான பதவிகளுக்கு ஒரு தேர்தலை அவர் சந்தித்தார்.
அவர் அடிக்கடி சொல்லும் "திராவிட மாடல் ஆட்சி" (திராவிடத்தின் முன்மாதிரி நல்லாட்சிக்கு) நற்சான்று தெரிவிக்கும்' வகையில்.
கைப்பற்றி, நகராட்சி, பேரூராட்சிகளில், அதிக இடங்களையும் பிடித்து அசுர சாதனை புரிந்துள்ளார்.
அவருக்கு இதயத்து இனிய நல்வாழ்த்துகள்.
தேர்தல் முடிவுகளில் ஒரு பேரதிசயம் நடந்துள்ளது! அந்த இனிப்பு அடுத்த ஞாயிறு பொழுதுகளில்...