அதிக இலாபம் ஈட்டும் நிதி நிறுவனங்களால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் | தினகரன் வாரமஞ்சரி

அதிக இலாபம் ஈட்டும் நிதி நிறுவனங்களால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்

கடனைத் திருப்பிச் செலுத்திக் கொள்ள முடியாமல் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தொடர்பான செய்தி சில தினங்களுக்கு முன்னர் களுத்துறை வெலிப்பன்னை, ஹோலின்பொன் குடியேற்றத்திலிருந்து வெளிவந்தது. ஹோலின்போன் குடியேற்றத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 37வயதுடைய நாகராஜா ராஜன்  என்பவர் இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது கடனைச் செலுத்துவதற்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தைத் தேடிக் கொள்ள முடியாமல் போனதன் காரணமாகவேயாகும்.  கடந்த 25ம் திகதி தனது மனைவியின் கையில் 200ரூபாவைக் கொடுத்து “நான் போய் பத்தாயிரம் ரூபாய் பணத்தைத் தேடிக் கொண்டு வருகிறேன்.... யாரும் எம் நிலையினை அறியப் போவதில்லை.... நீ பிள்ளைகளைப் பார்த்துக் கொள்...” எனக் கூறிவிட்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சில நாட்களாக மனைவி மற்றும் பிள்ளைகளும் பசியில் வாடியதைக் காணச் சகிக்காமலேயே   அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார். அவரது பிள்ளைகள் 12, 07, 04மற்றும் 03வயதுகளையுடையவர்களாகும். கடன் சுமையில் சிக்கிக் கொண்டிருந்த நாகராஜன், கொப்பியாவத்தை ரண்முத்து உயனவில் இறப்பர் மரம் ஒன்றில் தூக்கிட்டு தனது இறுதி மூச்சை விட்டது கடனைச் செலுத்துவதற்குத் தேவையான பணத்தைத் தேடிக் கொள்ள எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்காத நிலையிலாகும்.

அதேபோன்று மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய விடயங்களாக இருப்பது லீசிங், கடன் தவணை மற்றும் நுண்நிதிக் கடன் நெருக்கடிகளாகும். இன்னும் தீர்க்கப்படாத இந்த நெருக்கடி, கொவிட் சூழ்நிலையினால் மேலும் மோசமாகியது. அதேபோன்று, குத்தகை, கடன் தவணைகள் மற்றும் நுண்நிதி கடன் நெருக்கடியின் காரணமாக இலங்கை முழுவதும் 257தற்கொலைகள் பதிவாகியுள்ளன. எனவே இதற்கு நேரடியாகவே முகங்கொடுக்கும் தரப்பினருடன் பேசுவதற்கு தினகரன் மேற்கொண்ட முயற்சியே இதுவாகும்.

இந்தப் பிரச்சினையினால் பாதிப்புக்கு உள்ளான ஒரு தரப்பான சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் தினகரன் வினவியபோது, “தாம் தற்போது முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடி தொடர்பில் தெளிவுபடுத்தி புள்ளிவிபரங்களுடனான ஆவணங்களை அவ்வப்போது வங்கி கட்டமைப்பினை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ள மத்திய வங்கியிடம் சமர்ப்பித்த போதிலும் இதுவரைக்கும் எவ்வித தீர்வுகளையும் வழங்குவதற்கு மத்திய வங்கி தவறியுள்ளதாக தொழில்முயற்சியாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அமைப்பாளரும்,  தேயிலை தொழிற்சாலை பணிப்பாளர் லக்நாத் சன்னசூரிய தெளிவு படுத்தினார்.

தற்போது எவ்வித மனிதாபிமானமும் அற்ற நிலையில்  வங்கிகள் தமக்குத் தேவையான வகையில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து கொண்டு, வட்டியை வசூலித்து தான்தோன்றித்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக் காட்டினார். 1990ம் ஆண்டின் 4ம் இலக்க வங்கிகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் அறவீடு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 2000ம் ஆண்டின் 56ம் இலக்க குத்தகைச் சட்டம் (லீசிங் சட்டம்) போன்றன அப்போது நாட்டில் நிலவிய பொருளாதாரத்திற்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி மூலோபாயமாக (பொருளாதார அபிவிருத்திக்கான விசேட ஒழுங்கு விதிகள் சட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் இதுவரையில் கடந்து சென்றுள்ள 30வருட காலத்தினுள் அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக ஆகியுள்ளது. இதன் மூலம் இடம்பெற்றிருப்பது இந்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சியாளர்களை உயர்த்தி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை வளரச் செய்வதற்குப் பதிலாக குறித்த வங்கி கட்டமைப்பு அதிக இலாபத்தை ஈட்டி வளர்ச்சி  அடைந்ததேயாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார். தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு இச்செயற்பாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் லக்நாத் சன்னசூரிய தெரிவித்தார்.  நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு மத்திய வங்கி தலையிட்டு இதற்காகத் துரிதமான தீர்வினை வழங்க வேண்டும் என்றும், இதற்கான முன்மொழிவுகள் தற்போது மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு டொலரினைக் கொண்டு வரும் மூன்றாவது வருமான வழியாக ஆகியிருப்பது சுற்றுலாத் துறையாகும். கொவிட் தொற்றுக்கு மத்தியில் இத்துறையானது பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த இரு வருட காலங்களுக்குள் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் நேரடியாக 10இலட்சத்தை அண்மித்த அளவில் இருப்பதோடு, மறைமுகமாக 30இலட்சத்தை அண்மித்தவர்கள் இலங்கை முழுவதிலும் மிகவும் கஷ்டங்களுக்குள்ளாகியுள்ளனர்.

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கை முழுவதிலும் நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டவர்கள் 29இலட்சம் பேர் உள்ளதாக இனங்காணப்பட்டாலும், கிராமங்களுக்குள் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிக்கும் போது இத்தொகை அதிகளவில் பெருகியிருப்பதாக நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டவர்களின் தேசிய அமைப்பின் அழைப்பாளர் நிரோஷன் குருகே சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு நுண்நிதி கடனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துச் செல்வதற்கு தாக்கத்தைச் செலுத்தக்கூடிய படிவங்கள் சில உள்ளதாகச் சுட்டிக் காட்டிய அவர், ஒரே பிரதிநிதி பல நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவருக்கு பல நிறுவனங்களிடமிருந்து கடன் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதேச செயலகங்களில் பணியாற்றும் கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பயன்படுத்திக் கொண்டு திருகோணமலை, பதுளை, அம்பாறை, பொலனறுவை போன்ற மாவட்டங்களில் கடன்களைப் பெற்றுக் கொண்ட கிராம பெண்கள் தொடர்பில் ஓரளவுக்குத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டாலும், ஏனைய மாவட்டங்களில் முறையான அடிப்படையில் இந்த நடவடிக்கை இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் பாதிக்கப்பட்டு கடன் சுமையினால் சிக்கி வாழ்க்கையையே அழித்துக் கொள்ளும், பாலியல் இலஞ்சங்களுக்கும் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகும் பெண்கள் தொடர்பில் சரியான தகவல்கள் மற்றும் விபரங்களைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது பிள்ளைகளுடன் அல்லது தனியாக தற்கொலை செய்து கொள்ளல் போன்ற சம்பவங்கள் நேரடியாகக் காணக் கூடியதாக இருந்த போதிலும், பிரதிநிதிகள் அந்த வீடுகளுக்குச் சென்று காலை முதல் இரவு வரைக்கும் அவ்வீடுகளில் நேரத்தைக் கழிப்பது எவருக்கும் தெரிவதில்லை.  மிகவும் சிறிய வீடாக இருந்தால் தமது பிள்ளைகளைப் போன்று வயது வந்தவர்களும் ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பதும் அந்த பிரதிநிதிகள் பார்த்துக் கொண்டிருக்கையிலாகும். நெருங்கிய உறவினர்களால் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் மற்றும் பெண்கள் வாழும் நாட்டில் இவ்வாறான வெளியாட்களின் துன்புறுத்தல்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என யாரிடம் கூறுவது? பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கடன் கட்டில் கடன் என்றே அறியப்படுகின்றது. அங்கு இந்தக் கடன் அந்தளவுக்கு பாரதூரமானதாகும்.

இதற்காக அவர்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில் ஒன்று, எவ்வித நிபந்தனைகளும் இன்றி இந்தக் கடன்களை இரத்துச் செய்வதாகும். நுண்நிதி கடன் திட்டத்தின் கீழ்  செலுத்தும் பணத்தினை விட அதிக இலாபத்தை அந்த நிறுவனங்கள் தற்போது ஈட்டிக் கொண்டுள்ளன. இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்திற்கு அமைய எந்த ஒரு நிலையின் கீழும் வட்டி அறவிடப்பட வேண்டியது அதி கூடியதாக 30வீதம் மாத்திரமேயாகும். எனினும் இவ்வாறு கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த வீதத்தினைத் தாண்டிச் சென்று வட்டியினை அதிகரித்து முறையற்ற வகையில் இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன.

ரசிக கொட்டுதுரகே
தமிழில் - எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

 

Comments