'சர்வதேச தரம் கொண்ட ஒரு மருந்து தர நிர்ணய ஆய்வுகூடம் இங்கில்லை. அது மிக முக்கியம்'
"தைரோயிட் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் ஆர்ஜன்டினாவில் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்துதான் விமான மார்க்கமாக அதிகுளிர் நிலையில் கொழும்புக்கு எடுத்துவர வேண்டும். பின்னர் அதே குளிர்நிலையில் களஞ்சியப்படுத்தி வைக்கவும் வேண்டும். இல்லையேல் மருந்து பிரயோசனமற்றதாகிவிடும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இவ்வாறான பல மருந்துகள் - உயிர்காக்கும் மருந்துகள் பாதுகாப்பாக கையாளப்பட வேண்டியவையாக உள்ளன. ஆனால் நாம் மின் வெட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். மின் வெட்டின் போது ஜெனரேட்டர்களை இயக்கியாக வேண்டும். ஆனால் டீசலைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்.
"டீசல் பற்றாக்குறை, எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு, இறக்குமதிக்கான டொலர் இன்மை, கொவிட் தொடர்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் என இலங்கை தொழில், வர்த்தகத்துறையை பல பிரச்சினைகள் பிடித்தாட்டுகின்றன. இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் மருந்துகளைப் பெற்றுக் கொடுக்கும் எமது பணி மனித உயிர்க்காத்தலுடன் தொடர்புடையது. அது மனித ஆரோக்கியத்துடன் தொடர்புபடுவதால் உழைப்புடனும், உற்பத்தித் திறனுடனும், முக்கியமாக அபிவிருத்தியுடனும் சம்பந்தப்படுகிறது. எனவே மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. தரமான மருந்துகள் நியாயமான விலையில் தாராளமாக அரசு மருத்துவ மனைகளிலும், ஒசுசல ஊடாகவும் தனியார் பார்மஸிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்!"
இவ்வாறு எம்முடன் பேசத் தொடங்கினார் இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தை (Srilanka Chamber of the pharmaceutical Industry) சேர்ந்த ஒரு உத்தியோகத்தர்.
தற்போது நாட்டில் ஐந்து சதவீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் இந்நிலை நீடிக்க அனுமதிக்கப்படுமானால் மேலும் பல மருந்துகள் - உயிர் காக்கும் மருந்துகளும் கூட - தட்டுப்பாட்டு நிலைக்கு வந்துவிடும் என்பதால் எமது சம்மேளனம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. மருந்து இறக்குமதி மற்றும் விநியோகம் - அதில் காணப்படும் பிரச்சினைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இல்லையேல் மருந்து இறக்குமதியாளர்கள் மீது மக்களுக்கு சந்தேகம் வந்து விடும் அல்லவா? என்கிறார்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள்.
இன்றைய சூழலில் மருந்துகளுக்குக் காணப்படும் தட்டுப்பாடு நீக்கப்பட்ட வேண்டியது அவசியம். எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இத்தட்டுப்பாடு மென்மேலும் அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
இதே நிலை தொடரும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது சாதாரண வலி நிவாரணி மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதைப் போலவே, கொலஸ்ட்ரோல், தைரோயிட் மருந்துகள், நீரிழிவு மருந்துகள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்.
இலங்கை தனது மருந்து தேவையில் 85சதவீதமானவற்றை இறக்குமதி செய்கிறது. இவற்றில் அரசாங்கம் ஐம்பது வீதத்தையும் தனியார் துறை ஐம்பது வீதத்தையும் இறக்குமதி செய்கிறது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை எமது பிரச்சினைகளில் மெத்தனமாகச் செயல்படுகிறது. அதிகார சபையின் மெத்தனம், டொலர் பிரச்சினை, நடைமுறை சாத்தியமற்ற விலைச் சூத்திரம் என்பவற்றால் போதிய மருந்துகள் நாட்டில் கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது என எச்சரிகை செய்கிறார் இச் சம்மேளனத்தின் தலைவர் சஞ்ஜீவ விஜேசேகர.
இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அவர் பார்ப்போம் என்றார். ஆனால் இன்றுவரை எதுவுமே நடக்கவில்லை. அடுத்த ஆறு வாரங்களுக்கே மருந்து கையிருப்பு உள்ளது. இறக்கு மதியாகும் மருந்துகள் களஞ்சியசாலைகளில் குளிர் நிலையில் பேணப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்களை இயக்கும் டீசல் தட்டுப்பாடு தமக்கு மேலதிக பிரச்சினைகளாக இருப்பதாகவும் இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்ததாக இங்கு பேசப்பட்ட முக்கிய விஷயம் வங்கிக் கடன் பத்திரம் தொடர்பிலானது. ஒரு மருந்து இறக்குமதி நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக வங்கிகளில் கடன்பாதிரங்களை திறக்க வேண்டும். மொத்த இறக்குமதியின் பெறுமதி இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் என்றால் வங்கி அத்தொகையை வெளிநாட்டு மருந்து ஏற்றுமதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். வங்கியில் போதிய டொலர் இல்லை என்றால் அக் கடன் பத்திரத்தின் மீது அவ்வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காது. அம் மருந்துகள் இறக்குமதியாகவில்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படத்தானே செய்யும்? சில சமயம் மருந்து கம்பனி சமர்பித்த கடன்பத்திரத்தின் மீது வங்கி நடவடிக்கை எடுத்து தாமதமாக மருந்துகள் துறைமுகத்துக்கு வந்து சேர்கின்றன என்று வைத்துக் கொண்டால், இறக்குமதி செய்த நிறுவனம் மருந்துகளை ஓர்டர் செய்தபோது காணப்பட்ட டொலர்விலை இறக்குமதியானபோது அதிகரித்திருப்பதை அவதானிக்க நேரும். எனவே அதிக விலை கொடுத்தே மருந்துகளை பெற்றுக் கொள்ளவேண்டியிருக்கும். இந்த விலை அதிகரிப்பை இறுதியாக சில்லறை விலையில்தான் சுமக்க வேண்டியிருக்கும் என்ற ஒரு விஷயத்தையும் இறக்குமதியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
டொலரின் வங்கி நிர்ணயவில்லை 203ரூபா என்றால் வெளியில் அந்த விலைக்கு டொலர் கிடைப்பதில்லை என்றும் 260அல்லது 280ரூபாவுக்கு டொலரை வாங்க வேண்டியிருப்பதால் அந்த விலைக்கு மருந்துகளை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பது சாத்தியமில்லை என்றும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
மாதமொன்றுக்கு 20முதல் 25மில்லியன் டொலர் மருந்து இறக்குமதிக்குத் தேவை 2020- - 21காலப்பகுதியில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், புதிய மருந்துகள் போன்றவற்றின் இறக்குமதிக்காக மாதம் 300முதல் 350மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டன. தடுப்பூசிகள், கொவிட் தடுப்பு மருந்து, ஒக்சிஜன், வைன்டிலேட்டர்கள், முகக்கவசம், செனிடைசர்கள் போன்றவை புதிய மருத்துவம் பொருட்களாகவும் அதிக அளவிலும் இறக்குமதியாயின. தற்போது 20முதல் 25மில்லியன் டொலர் மாதாந்தம் பெற்றுத்தரப்படுமானால் நாட்டை மருந்து தட்டுப்பாடின்றி வைத்திருக்க முடியும். நாம் அரசிடம் வேண்டுவதெல்லாம் இந் நிதியை பெற்றுத் தரும்படி மட்டுமே.
இச்சம்மேளனம் குறிப்பிடும் இன்னொரு பிரச்சினையாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை உள்ளது. நடைமுறை சாத்தியமற்ற ஒரு விலை பொறிமுறையை அதிகாரசபை பின்பற்றி வருவதாக குற்றம் சாட்டுகின்றது இச் சம்மேளனம்.
"பெரசித்திமோல் தட்டுப்பாட்டுக்கும் இதுதான் காரணம். ஒரு டொலரின் இலங்கை பெறுமதி 178ரூபாவாக இருந்தபோது தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் எப்படி டொலர் 203ரூபாவில் நிற்கும்போது சாத்தியமாகும்? இதை நாம் சொன்னால் அதிகாரசபை புரிந்து கொள்வதாக இல்லை. சுகாதார அமைச்சரால் இவ்விடயத்தில் ஆற்றக்கூடியது பெரிதாக ஒன்றும் கிடையாது. இந்த அதிகார சபைதான் எம்முடன் அமர்ந்து பேசி விலை சூத்திரத்தில் என்னென்ன நடைமுறை சாத்தியமான மாற்றங்களைச் செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நஷ்டத்துக்கு யாரும் வியாபாரம் செய்யமாட்டார்கள். உதாரணத்துக்கு ஒரு வலி நிவாரணி மாத்திரையை ஒரு ரூபாய்க்குத் தான்விற்க வேண்டுமென அதிகாரசபை எமக்குச் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த மருந்தின் இன்றைய இறக்குமதிவிலை மூன்றுரூபாவாக இருக்குமானால் அம்மருந்தை இரண்டு ரூபா நஷ்டத்துக்கு எந்த இறக்குமதி நிறுவனமும் இறக்குமதி செய்யாது. அவ்வாறு நிறுவனங்கள் விலகி நிற்கும் போது உள்நாட்டில் வலி நிவாரண மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவத்தானேசெய்யும்!" என்கிறார்கள் இச் சம்மேளன பொறுப்பாளர்கள். நாட்டின் இன்றைய நிலைமைகளை புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமான தீர்மானங்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கை!
அவர்களிடம், இது இங்கிலிஷ் மருந்து; இது வங்கதேச மருந்து விலையும் குறைவு, எது வேண்டும்? என்று பார்மஸிகளில் கேட்கிறார்களே, அது என்ன நல்ல மருந்து மலிவு மருந்து? என்று கேட்டபோது ஒரு உறுப்பினர் தெளிவாக பதில் அளித்தார்.
இங்கிலாந்து, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் மருந்து தயாரிப்பு கடுமையான தரக்கட்டுப்பாடுகளுடனேயே நடைபெறுகிறது. ஒரு மருந்தில் சேர்க்கப்படும் சேர்மானங்களில் தரமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே இந்நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் தரமானவை எனக் கருதப்படுகிறது. இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே ஆறாயிரம் மருந்து தயாரிக்கும் கம்பனிகள் இருக்கும். அவற்றில் 500நிறுவனங்கள் முதல்தரமுடையவையாக இருக்கும். இவை கடுமையான தரக்கட்டுப்பாடுகளை கொண்டவையாக காணப்படும். ஆனால் ஏனையவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. வங்க தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படும் என்று சொல்வதற்கில்லை. தரமானவை, தரமற்றலை எனச் சொல்லபடுவதற்கு இதுவே காரணம்.
இலங்கைக்கு 85சதவீதமான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே மருந்துகளின் தரம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். ஆனால் இந்நாட்டில் ஒரு முழுமையான மருந்து பரிசோதனைக் கூடமொன்றில்லை என்பது கவலைக்குரியது. சாம்பிளாக அனுப்பப்படும் மருந்துகளை பரிசோதனை செய்யக்கூடாது. சந்தையில் விற்பனையாகும் மருந்துகளையே தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
எமது உடனடித் தேவைகளில் ஒரு முழுமையான, சர்வதேசதரம் கொண்ட ஆய்வுகூடமும் ஒன்று என்றார் எம்முடன் பேசிய சம்மேளன முக்கியஸ்தர்.
அருள் சத்தியநாதன்