13ஆம் திருத்தத்தை தமிழர்கள் விரும்பிக் கேட்கவில்லை | தினகரன் வாரமஞ்சரி

13ஆம் திருத்தத்தை தமிழர்கள் விரும்பிக் கேட்கவில்லை

நம் நாட்டின் 13வது அரசியல் திருத்தம் 1987களில் ஏற்பட்டது. அது நமது முழு நாட்டிற்கும் சொந்தமானது. தமிழர்கள் அதனை விரும்பிக் கேட்டதுமில்லை, அரசு அதனை விரும்பிக் கொடுக்கவுமில்லை என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்

13வது அரசியல் திருத்தம் தொடர்பாகவும், நாட்டின் நிலை தொடர்பாகவும் அவரது கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

13வது அரசியல் திருத்தத்தின் உள்ளடக்கம் மாகாண சபைகள் ஆட்சி முறையாகும்.

நமது நாட்டில் 9மாகாணங்களும் 25மாவட்டங்களும் காணப்படுகின்றன. அந்தந்த மாகாண மக்கள் தமது பிரதிநிதிகளை அரசியலமைப்பில் கூறப்பட்டவாறு தெரிவு செய்து தத்தமது மாகாணங்களிவுள்ள வளங்களை முதன்மைப்படுத்தியும், குறைபாடுகளை களைந்தும் அதனை அபிவிருத்தி செய்வதற்கு இந்த மாகாணசபை அரசியல் அமைப்பு பெரிதும் உதவி வருகின்றது என்பதில் யாருமே தவறுகாணமுடியாது

இந்த மாகாண சபை முறைமை இந்திய அரசினால் இலங்கை அரசாங்கத்தினூடாக திணிக்கப்பட்டதொன்று என்பதே யதார்த்தம். இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே இது இந்திய அரசினால் திணிக்கப்பட்டது. ஆனால், அது வடக்கு, கிழக்கு மக்களுக்காக மட்டும் ஏற்படுத்தப்படவில்லை என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் அவர்களது அரசியல் முன்னோடிகளால் முன்வைக்கப்பட்டன. அவர்கள் அதைச் செய்யாவிட்டால் அந்த நேரத்தில் சிங்கள மக்களின் மத்தியில் இருந்த உணர்வுகள் வேறோர் வடிவில் பூதாகரம் எடுத்திருக்கும். இதுதான் நிஜம்.

ஆரம்பத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. அது அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்றிணைக்கப்பட்டன. இரு தசாப்தங்களுக்குப் பிறகு ஜே.வி.பியினர் 2006ல் அவ் இணைப்புக்கு எதிராக வழக்கைத்தாக்கல் செய்ததன் பலனாக அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும். இந்த இணைப்பினூடாக அக் கட்சி மட்டுமல்ல இன்னும் சில கட்சிகளும் சந்தோசப்படவில்லை.

இதை இன்னொருவகையில் பார்க்கப் போனால் இந்த நாடு பல சமூகங்களையும், இனங்களையும், மதங்களையும், மொழிகளையும் கொண்டிருக்கின்ற நாடு. ஆகையால் இந்த நாடு சமத்துவம் கொண்டதான ஒரு அரசியல் நடைமுறையை கொண்டிருக்க வேண்டும்.

தனி ஒரு இனம் தனது பெரும்பான்மை பலத்தைக் காட்டி மற்ற இனங்களில் சுதந்திரத்தில் தலையிடுவதோ, அல்லது அவைகளின் வரப்பிரசாதங்களை தடுப்பதோ, அல்லது அவர்களை அல்லது அவைகளை ஓரம் கட்டி நடப்பதோ முறைமையாகாது. நாங்கள், இப்பொழுது 74வருடமாக எமது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இனிமேலும் கொண்டாடுவோம் அதில் மாற்றமில்லை. ஆனால் சிறுபான்மையினங்கள் உண்மையான ”சுதந்திர உணர்வோடு” இருக்கின்றனவா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சுதந்திரம் என்பது

ஒருவரது அபிலாசைகளை ஒரு நாட்டின் சட்ட வரையறைக்கள் நின்று அனுபவிப்பதற்கான உரிமை? அப்படி இருந்திருந்தால் நாட்டில் உள்நாட்டுப் போர் தோன்றியிருக்காது. பல்லாயிரக் கணக்கானோர் அநியாயமாக இறந்திருக்கத் தேவையில்லை, பல மனித உயிர்கள் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கின்றன,

பல தொழிலாளர்கள் ஒட்டிய வயிறோடு, ஒட்டை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ சொல்லலாம். ஆகையால் சுதந்திரம் என்பது பெயரளவில் அரங்கேறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

இலங்கைத் தமிழர்களுக்கும் பாரத நாட்டுக்கும் ஒரு பாரிய தொடர்பு தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதனை ”தொப்புள் கொடி உறவென” பல அறிஞர்கள் கூறுவார்கள், அது அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் என விரிந்து செல்கின்றது. இங்கே தமிழர்களுக்கு ஏதாவது இக்கட்டு நேர்ந்தால் இந்தியாவுக்கு வலிக்கும்.

அங்கே தமிழ்நாட்டுக்கு நோவு ஏற்பட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு முகம் வாடும். இதுதான் அந்த உறவின் மகத்துவம்.

இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு வாட்டி வதைக்கிறது என்பதை இந்தியா நன்றாக உணர்ந்திருந்தது. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியதை இந்தியா கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் விளைவாக, தமிழ் மக்களை அந்த இன்னலிலிருந்து காப்பாற்றுவதற்காகவே 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இலங்கை அரசுக் கூடாக முன்வைத்தது.

இது இரு நாடுகளும் செய்து கொண்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தம், இதனை மாற்றுவதோ, அல்லது நீக்குவதோ ஒரு முடியாத காரியம். அதனை மாற்றுவதாயின் சம்பந்தபட்ட இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து, மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்வதினூடாகவே அதனை மாற்ற முடியும். இது நிறைவேறக் கூடிய காரியமா? என்று சிந்தித்து பார்ப்பது இங்கு பொருத்தமானது. தமிழர்களின் நலன்களுக்காக ஏற்படுத்திய ஒரு உலகளாவிய ஒப்பந்தத்தை இந்தியா ஒரு போதும் கைகழுவிவிடாது. இது சில பேருக்கு புரியவில்லை.

13வது திருத்தத்தை எதிர்க்கிறோம் என்பவர்கள் ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கு விடை தேட வேண்டும். இனிமேலும் தமிழ் ஈழம் என்ற கோசத்திற்குள் தமிழர்கள் அடிமையாகிவிடக் கூடாது. முடியக் கூடியதை முன்வைத்து அதற்கான காய்களை முன்னகர்த்தி எங்களது அபிலாசைகளை வெல்வதே புத்தி சாலித்தனம். 13வது திருத்தம் எமக்கு கிடைத்த தீர்வின் முதற்புள்ளி. அதிலிருந்தே தீர்வு விரிவாக்கப்பட வேண்டும். எல்லா விடயங்களையும் நான் திறந்து கொட்டிவிட முயாது.

முதலில் தமிழர்களுக்குள்ளே ஒற்றுமை இருக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் வந்தபோது பாராளுமன்றத்தில் கையுயர்த்தி ”ஆமா” போட்டவர்களை நாம் இந்த காலகட்டத்தில் எண்ணிப் பார்ப்பது பொருத்தமானது. நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் நல்லதை தேடிவைப்போம். ஒரு சிலரின் குத்தல்பாட்டுக்கு குத்தலாட்டம் போடுவதையும் கொடிப் பிடிப்பதையும் நம்மவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்

அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயங்களுக்காக ஆட்டிப்படைப்பது ஒரு நாகரீகமான அரசியலாகாது. அரசியலில் மூத்தவர்கள் இதற்கு துணை போகக் கூடாது. தொப்பி யாருக்கு அளவாக இருக்கிறதோ அவர்கள் அதனை போட்டுக் கொள்ளலாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாக அரசு பலகாலமாகப் பேசிக் கொண்டிருக்கிறது அது கறுப்பா? சிவப்பா என யாருக்கும் தெரியாது. அதற்கு முன்பு, நாம் நமது கருத்தை வெளியிடுவது பொருத்தமாகாது. எது எப்படியிருந்தாலும் இந்தியா இந்தவிடயத்தில் 13வது திருத்தத்தை விட்டுக் கொடுக்கமாட்டாது.

அது தான் பெற்றெடுத்த குழந்தையை தானாக குழிதோண்டிப் புதைக்கப் போவதில்லை.

விவசாயமும் அறுவடையும்

”காலத்தே பயிர் செய்” என்பது ஒரு ஔவையாரின் பழமொழி, காலத்தில் பயிர் செய்ய உரம் கிடைக்கவில்லையே. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் வீழ்ச்சி 60- முதல் 70விகிதம் எனக் கூறலாம்.

ஒரு விடயத்தை தொடங்குமுன், பல அறிஞர்களதும், அனுபவசாலிகளினதும் அலோசனை பெறப்பட்டிருக்க வேண்டும். நெல் விதைத்தும், அறுவடை வந்தும் உரம் வரவில்லை எப்படி, நெல்விளைச்சல் சரியாக வரும். விவசாயிகள் நட்டாற்றில் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

அதனால் அரசின் உற்பத்தியும் பொருளாதாரமும் பாரிய வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும். அரசு, நிர்வாகத்தில் உறுதியாகவில்லை.

அரசு பொதுவாக உள்ளுராட்சிச் சட்டங்களிலோ சபைகளிலோ கைவைப்பது குறைவு.

ஆனால் கிழக்கு மாகாணம் ஒரு தனிவகை. இது ஒரு வெட்கக் கேடான விடயம்.

காலையில் ஒருவர் மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்கிறார் பிற்பகலில், காலையில் பதவியேற்றவர் நீக்கப்படுகிறார். நியமிப்புக்கும், நீக்கலுக்கும் கிழக்கு மாகாண ஆளுநரே காரணம். இவ்விரண்டு அறிவுறுத்தல்களையும் அவரே வழங்கியிருந்தார்.

எஸ்.எஸ்.தவபாலன்

Comments