![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/06/a23.jpg?itok=rjnQtHpp)
தொழில்நுட்ப உலகம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதுடன் தொடர்ந்தும் முன்னேற்றமடைந்து வருகிறது. இச்செயற்பாடுகளை நாம் அனைவரும் கண்கூடாக காண்கிறோம். முதலாவது தலைமுறை wireless (கம்பியற்ற) தொழில்நுட்பமானது, நம்மை குரல் வழியாக ஒருவருடன் ஒருவர் இணைத்தது. பின்னர் 2G (2ஆம் தலைமுறை) ஆனது, குறுஞ்செய்தியை சேர்த்துக் கொண்டது. 3G உடனான கையடக்கத்தொலைபேசி அடிப்படை கணனியை ஏற்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தியது. 4G வசதி மூலம், நாம் அதிக வேகத்தைப் பெற்றுள்ளதோடு, எமது கையடக்கத் தொலைபேசிகளை பல செயலிகளைப் பயன்படுத்தி வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும் அதனை மேம்படுத்தினோம். தற்போது அதன் அடுத்த நிலைமாற்றம் 5G ஆகும். தற்போதுள்ள வேகத்தை விட சுமார் 100மடங்கு அதிகமான வேகத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான மடைதிறந்த வெள்ளம் போல் இது வழியேற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
5G என்பது கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகளின் 5ஆவது தலைமுறை என்பதுடன், இலங்கையில் ஒரு திருப்புமுனைக்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது. 5G அலைக்கற்றை (spectrum) குறுகிய அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது. இது வேகத்தில் மாத்திரமல்லாது, அதன் திறன், குறைந்த தாமதம், வலையமைப்பின் தரம் ஆகியவற்றில் நாம் எதிர்பார்க்கின்ற உந்துதலை வழங்குகிறது. 4G ஐ விட 100 மடங்கு வேகத்திலான 5G ஆனது, தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு இதுவரை கண்டிராத வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. தொழில்துறைகளை மாற்றியமைப்பதன் மூலமும், அன்றாட அனுபவங்களை மேம்படுத்துவதன் மூலமும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, அதிக அலைப்பட்டையை இத்தொழில்நுட்பம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கருத்தானது மிக எளிமையானதாக இருந்த போதிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அது கம்பியற்ற இணைப்பு மற்றும் செயல்திறனை மிக உயர் தனித்தன்மையுடன் உச்ச அளவில் மேம்படுத்துகிறது.