இந்தியர்களை மீட்பதில் நரேந்திர மோடி அரசு அதிகூடிய கரிசனை | தினகரன் வாரமஞ்சரி

இந்தியர்களை மீட்பதில் நரேந்திர மோடி அரசு அதிகூடிய கரிசனை

உக்ரைன்- ரஷ்யா பிரச்சினையில் இரு நாடுகளுக்கும்மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை க்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளமைதொடர்பாக உலகெங்கும் இருந்து சமாதான விரும்பிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன்_ரஷ்யா இடையே போர் இன்னும் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ைரனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டு வருவதை பலரும் பாராட்டியுள்ளனர். ரஷ்யா_ - உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன், பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள், மோதல் தொடர்பான விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு புட்டினிடம் பேசிய பிரதமர் மோடி, மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து வருத்தங்களைத் தெரிவித்தார். மேலும், இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.மோடியின் இந்த முயற்சிக்கு இந்திய மக்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். சுமார் 35நிமிடமாக இந்த உரையாடல் நீடித்தது. உக்ரைனிலிருந்து இந்தியக் குடிமக்களை அழைத்து வர வசதி செய்ததற்காக ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இன்னமும் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக, இந்தியாவுக்கு அனுப்பத் தொடர்ந்து உதவ வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டார்.

உக்ரைன்_ ரஷ்யாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இந்திய மத்திய அரசு 'ஒபரேஷன் கங்கா' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். இதுவரை 10,400இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைன்_ ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்தியர்களை மீட்பதில் இந்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

உக்ரைன்_ ரஷ்யா இடையேயான மோதல் தொடர்வதால் மீட்புப் பணியில் சிக்கல் தொடர்கிறது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய உச்சநீதிமன்றம், அவர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் போபண்ணா, ஹிமா கோஹ்லி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் "மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனில் இருந்து ஏராளமான இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். எஞ்சியுள்ள 7ஆயிரம் பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவாக மீட்பது தொடர்பாக அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கு எந்த வாய்ப்பையும் மத்திய அரசு தவற விடாது. இந்த விவகாரத்தை அரசிடம் விட வேண்டும். குவைத் போரின் போது இலட்சகணக்கான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்ட முந்தைய வரலாறும் உண்டு" எனக் கூறினார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில் "மத்திய அரசு குறித்து எந்த ஒரு வார்த்தையும் கூற விரும்பவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். ஆனால், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் குறித்து கவலை கொள்கிறோம்" என்றனர்.

இதன் பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், "கடந்த கால போர் துயரங்களில் இருந்து மனிதர்கள் எதையும் கற்றுக் கொள்ளாதது கவலை அளிக்கிறது. தவறுகள் குறித்தும் பாடம் கற்று கொள்ளாமல், தற்போது போரை நடத்தி வருகின்றனர். அதிகம் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், மாணவர்கள் குறித்து கவலையாக உள்ளது" என்று கூறினார்.

 

Comments