டொலர் விலை அதிகரிப்பு தந்திருக்கும் பொருளாதார அதிர்ச்சி! | தினகரன் வாரமஞ்சரி

டொலர் விலை அதிகரிப்பு தந்திருக்கும் பொருளாதார அதிர்ச்சி!

கடந்த வாரம் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சோதனை மிக்க ஒரு வாரமாக அமைந்தது. நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டிருந்த பெற்றோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள்கள் மற்றும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக நீடித்திருந்த அதேவேளை இவற்றைப் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமையும் தொடர்ந்தது.

அதேவேளை நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக மின் வெட்டு தொடர்ந்து செல்லுகிறது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை செயற்கையான 203ரூபா என்ற மட்டத்தில் கடந்த ஒருவருட காலமாக கட்டிவைத்திருந்த மத்திய வங்கி திடீரென அதனை அவிழ்த்துவிட்டு 230ரூபா உச்ச எல்லைக்கு உட்பட்டு ரூபாவின் பெறுமதி சந்தையில் கேள்வி நிரம்பல் சக்திகளுக்கு அமைய நிர்ணயிக்கப்படுமென அறிவித்தது. 

அதாவது பட்டினி போட்டு கட்டி வைத்திருந்த ஒரு எருதை அவிழ்த்து விட்டால் என்ன நடக்குமோ அதற்கொப்பான நடவடிக்கை சந்தையில் அவதானிக்கப்பட்டது. டொலரின் பெறுமதி எகிறிச் சென்று 260ரூபாவாக அதிகரித்தது. 230ரூபா உச்ச எல்லை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் விலை அதனை மீறிச் சென்ற போது அதனைத் தடுக்கும் வல்லமை வங்கிக்கு இல்லை.  

ஒவ்வொரு வணிக வங்கியும் வெவ்வேறு நாணய மாற்று வீதங்களைப் பின்பற்றியமை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய வேலை  நாட்களில் அவதானிக்கப்பட்டது. அது சந்தையில் தளம்பலான நிலையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியது.  

எதிர்வரும் வாரநாட்களில் இடம்பெறும் டொலர் உட்பாய்ச்சல்கள் மற்றும் வெளிப்பாய்ச்சல்களின் அளவைப் பொறுத்து டொலரின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு சந்தை ஒரு நிலைத்த தன்மைக்கு திரும்பக் கூடும். ஆனால் முன்னறிவிக்கப்படாத இந்த நடவடிக்கை நடைபெறக் கூடுமென பலரால் எதிர்வு கூறப்பட்டிருந்த போதிலும் பொருளாதாரத்தில் மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது போன்ற நிலையை ஏற்படுத்தியது.  

பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகள் IOC நிறுவனத்தால் ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரிக்கவில்லை. அதனால் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் வாகனங்கள் மிக நீண்ட வரிசைகளில் காத்து நின்றன.  

ஆனால் வெள்ளியன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு லீற்றர் 92ஒக்டேன் பெற்றோலின் விலை 254ரூபாவாக 77ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலின் விலை லீட்டர் ஒன்று 55ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 176ரூபாவாக விற்கப்படுகிறது. வெகு விரைவில் எரிவாயுவின் விலைகளும் அதிகரிக்கப்படலாம்.  

டொலரின் விலை அதிகரிப்பும் உக்ரேன் ரஷ்ய மோதலும் உலக எரிபொருள் விலையை ஒரு பீப்பாய் மசகெண்ணெய் 106அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ள காரணத்தால் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உள்நாட்டு எரிபொருள் விலையில் அரசாங்கம் அறவிடும் வரிகளும் முக்கியமான சதவீதம் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மறுபுறம் மிக நீண்டகாலமாக ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 117ரூபாவாக இருந்து வந்தது.  

இப்போது ஏற்பட்டுள்ள அதிகரிப்பின்படி நோக்குமிடத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக அதன் விலை 117சதவீதத்கினால் இருமடங்கிற்கும் அதிகமான உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பும் டொலரின் விலை அதிகரிப்பும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளன. உடனடியாகவே எல்லாப் பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.  

கோதுமை மாவின் விலை 30தொடக்கம் 45ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு இறாத்தல் பாணின் விலை 30ரூபாவாலும் பேக்கரி உற்பத்திகள் 10ரூபாவாலும் அதிகரிக்கபட்டுள்ளன. மருந்துகளின் விலைகள் 29சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாகவும் ஒரு சோற்றுப்பார்சலின் விலை 20ரூபாவினாலும் குறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 35ரூபாவாகவும் குறைந்த பட்ச முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் 80ரூபாவாகவும் அதிகரிக்கப்பட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மின்சாரக் கட்டணங்களும் வெகு விரைவில் அதிகரிக்கப்படுவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளன. மறுபுறம் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் விலைகளையும் அதிகரித்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் பார்க்கும் நோக்கில் மிகப்பெரிய இறக்குமதியாளர்கள் கடந்த வெள்ளியன்று கொள்வனவுக் கட்டளைகளை பெறுவதில் தயக்கம் காட்டினர். ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருள்களின் விலை அதிகரிப்பதை தடுக்க அரசாங்கம் எதையும் செய்ததாகத் தெரியவில்லை. தவித்த முயல் அடிக்கும் இந்தக் கூட்டம் களேபரமான இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.  

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற நிலை காரணமாக மக்களின் வருமானம் அதிகரிக்காத நிலையில் முன்னர் 100ரூபாவைக் கொண்டு கொள்வனவு செய்த பொருள்கள் சேவைகளை 160ரூபாவுக்கு மேல் செலவு செய்து கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாய சூழல் தோன்றியுள்ளது.  

வேறு வகையில் கூறுவதானால் இப்போதைய பொருளாதார அதிர்ச்சி மக்களின் மெய்வருமானத்தை அரைவாசிக்கும் மேலாகக் குறைத்து விட்டிருக்கிறது. இது மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இலகுவில் பாதிக்கப்படும் நிலையில் உள்ள முதியவர்கள் பெண்கள் குறைந்த வருமானம் பெறும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும்.  

நிரந்தர வருமானம் பெறும் நடுத்தட்டு மக்கள் தமது அன்றாட செலவுகளை செய்து தமது சமூக அந்தஸ்தைப் பேணிச் செல்வதில் மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவர். இதனால் அத்தியாவசிய தேவைகளான உணவு போன்றவற்றை குறைத்து நுகர்வர். எனினும் மிக அத்தியாவசியமான சேவை வழங்கும் வைத்தியர்கள் மற்றும் வக்கீல்கள் போன்றோரும்  எந்திரிகள் தொழினுட்பவியலாளர்கள் போன்ற சிறப்புச் சேவை வழங்குநர்களும் இந்நிலைமையினால் அதிக இலாபம் உழைக்கலாம். 

ஏற்கெனவே மருந்துப் பொருள்களின் விலைகளை 29சதவீதம் அதிகரிப்பதற்கு ஆலோசகைள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சேவைக்கட்டணங்களும் பெரியளவில் உயர்வதற்கான சாத்தியங்கள் உண்டு. கட்டடப்பொருள்களின் விலைகள் ஏற்கெனவே மலை போல் உயர்ந்து விட்டன. தற்போது ஏற்பட்டுள்ள விலை அதிர்ச்சியினால் அவை மேலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கின்றன. ஒரு சாதாரண குடிமகனால் தனது தலைக்கு மேல் ஒரு நிழற்குடையை அமைத்துக் கொள்ள முடியாத ஒரு அவலச் சுூழல் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் மக்கள் செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர் கோவிட் வந்தது. உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தது அதற்கு நாம் என்ன செய்வது என்று அரசியல் வாதிகள் காரணங்கூறுகின்றனர். ஆனால் செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் விட்டு பொருளாதாரத்தில் அதிர்ச்சி ஏற்பட அனுமதித்தமை யாருடைய குறைபாடு என்பதையும் தேடிப்பார்ப்பது நன்று.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments