கசப்பு
ஐம்பது அறுபதுகளில் பேனை அறிமுகப்படுத்தி வைத்த இரு ஏறாவூர் மைந்தர்கள் புரட்சிக்கமால் சாலிஹ், யூ.எல். தாவூத்... முன்னையவர் நான் வாழ்ந்த தெருவிலேயே வாடகை அறையில் முடங்கி சட்டம்பியாகக் கடமை. தாவூத், கொழும்பில் கற்பித்து விட்டு 'ஏரூர் அலிகார்' அரவணைப்பிற்கு ஆளானார்.
இருவரில் தாவூத் மிக நெருக்கும். முக்கிய காரணமாக அமைந்தது அவர், செட்டியார் தெரு 'நவலட்சு'மி புத்தகசாலை, பி.எம்.எம். முஹிதீன் அனுசரணையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டதே! நூலின் பெயர் முஸ்லிம் கதை மலர்கள்'.
இன்றையக் கசப்பு சிறுகதைப் பிரசவங்களைப் பற்றியதே. 'என், யூ.எல். தாவூத் காலத்தின் பின்னால் ஒரு சிறுகதைத் தொகுப்பு - அதாவது, முஸ்லிம் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து கதைத் தொகுதி ஏரூரிலிருந்து வரவே இல்லை?
சரி, சற்றே தொகுதியை மறந்து விட்டு தனிப்பட்டவர்களின் படைப்புகள் கூட்டு மொத்தமாக ஒரு ஐம்பது ஆண்டுகளில் எத்தனை வந்திருக்கின்றன...? எத்தனை சிறுகதைப் படைப்பாளிகள்?
பயங்கரமான ஒரு மரண, அடி விழுந்திருப்பதாகப் படுகிறதே...
ஒரு பட்டியலை மிகச் சிரமத்தில் கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் துணை கொண்டு தொகுத்தது இந்த மூத்த பேனை.
காலஞ் சென்றோர்
புரட்சிக் கமால் சாலிஹ்,
அதிபர் யூ.எல். தாவூத்,
எம்.சி உசனார்,
டி.எல்.எம்.உசனார்,
அலை வேந்து யூசுப்,
யூ. எச். முஹம்மத்
வாழ்வோர்,
ஏறாவூர் தாஹிர்
எச்.எம். அப்துல் ஹலீம்,
ஸர்மிலா சைய்யித்,
சித்தி அப்பாஸியா,
மருதூர் ஜமால்தீன்,
ஏ.சி. அப்துல் ரகுமான்,
ஏரூர் முகைதீன்,
ஏரூர் ஜிப்ரியா,
எம்.டி.எம். அன்ஸார்,
என்.எம். ஆரிஃபா,
கவித் தென்றல் ராஃபிசுபைர்,
ஏரூர் யூவன்னா,
ஆசிரியர் ஸஃப்ரான்,
ஏரூர் கே. நௌஷாத்,
ஏரூர்க்கவி எச்.எம்.எம். ரஹீம்,
ஏரூர் முஆத்,
உசனார் எம். பஷீர்,
எம்.ஐ.எம். சுபைர்,
எம்.என்.எம். சுபைர்,
முகம்மது நியாஸ்,
ஏ. றியாஸ்,
ஏரூர் முகம் அன்சார்,
சபீர் ஹாஃபிஸ்,
சேகுதாவூத்,
அப்துல் ரஸ்ஸாக்,
அல் - ஆஸாத்,
என்.எல். அம். மன்சூர்,
எச்.எஸ். றிஃபாஸ்
மருத்துவர் ஜலீலா முஸ்ஸம்மில்,
நஸீரா ஆப்தீன்,
ரீஸா ஹானி,
இஷா முகம்மத் (ஏரூர் கவிமொழி),
ஃபாத்திமா அஸ்கியா முகம்மது (ஏரூர் நிலா தோழி),
ஏரூர் எம். அஷ்றப் (கவித் தென்றல்)
சீனி முகம்மது ஸாலிஹ்.
கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள். மொத்தம் 41பேர். சிலர் தேடலில் அகப்படாமல் தப்பி இருக்கலாம். மன்னிப்பு.
இவர்களில் பலர் எந்தத் துறையில், 'ஓடிவிளையாடுகிறார்கள்' எனப் பார்த்தால் படுகசப்பு கசப்பு!
"அடப்பாவியே" என்போரும் இருப்பீர்கள். பரவாயில்லை.
ஏற்றமிகு ஒரு தேனக ஊரில் இப்படி கவிதைப் பிட்டணியில் மட்டும் கபடி விளையாடலாமா என்பதே பிரச்சினை.
கதை, கட்டுரை, நவீனம், நாடகம், நல்லாய்வு அனைத்தும் பக்கத்து ஓட்டமாவடி, மஜ்மா நகர் மண்ணுக்குள் கொரோனா நோயாளி போல் அடக்கமாகிவிட வேண்டுமா? (அங்கேயும் இடம் இல்லையாமே!)
நாளேடுகள், அதன் இணைப்புகள், மாதச் சிற்றிதழ்கள், ஆகியவற்றில் 'வரிக்குதிரை'ச் சவாரி, ஜோர்! ஜோர்! நாலைந்து பேர்வழிகள் முகநூலில் மட்டும்! கவி மணிகள் கேவலம்.
ஏறாவூரின் இலக்கிய முன்னோடிகள் புரட்சிக்கமால், தாவூத் போன்றோர் கவிதை பாடினாலும், கட்டுரையும் கதையும் பேசியவர்கள் தானே? அவர்கள் வழித்தடத்தில், ஏரூர் யூவன்னா, எச்.எம். ஹலீம், ஏ.சி. அப்துல் ரகுமான், மருதூர் ஜமால்தீன், உசனார் எம். பஷீர், சித்தி அப்பாஸியா ஆறே ஆறுபேரே கண்ணில் படுகிறார்கள். ஏரூர் கே. நௌஷாத் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி போட்டிக்கு அனுப்பி விட்டு "சிறுவர் பாடல்கள்" பாடிக் கொண்டிருக்கிறார்!
ஒரேயொரு பெண்மணி ஸர்மிலா ஸெய்யித் மட்டுமே கதை, உளவியல் கட்டுரை, நவீனம் என உலா வந்திருக்கிறார்.
இனி வேண்டவே வேண்டாம் வரிக்குதிரைச் சவாரி ஏரூர் இலக்கிய நெஞ்சங்களே...!
இனிப்பு
கடந்த மாதத்தில் தமிழ்நாட்டு இருபத்தியொரு மாநகராட்சிகளையும் கைப்பற்றி, நகரம், பேரூர்கள் சபைகளில் அதிக இடங்களைப் பிடித்தும் அசுர சாதனை புரிந்தவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் மகனார் ஸ்டாலின்.
தேர்தல் முடிவுகளில் சில பேரதிசயங்கள் நடத்திருப்பதை இரு கிழமைகளுக்கு முன் தெரிவித்திருந்த பேனை சற்று தாமதித்து விவரங்களை இன்று வழங்குகிறது.
கடந்த 08ம் திகதி கொண்டாடப்பட்ட அனைத்துலக மகளிர் தினத்திற்கு மகிமை சேர்க்கும் விதமாக அதற்கு முன்னதாகவே பெண்மணிகள் பலருக்கு சாதி வித்தியாசங்களைக் குப்பையில் போட்டு அதிசயப்படும் வகையில் உயர் பதவிகளை வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுமட்டுமல்ல, கீ்ழ் மட்டப் பெண்களுக்கும் பதவிகள்.
தமிழ்நாட்டு உள்ளாட்சிச்சேவை அங்கத்துவப் பதவிகளுக்கு ஐம்பது விழுக்காடு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆண்களுக்கு சரி சமமாகப் பெண்கள் போட்டியிட்டு வெற்றி! வெற்றி!
"சிலருக்கு'க் கல்வி அறிவு மிகக் குறைவு. எழுத்துக் கூட்டியே வாசிக்க இயலும், அது தேர்வுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை! இது எப்படி?
கரூர் (திருச்சிப்பக்கம்) நகரத்தில் போட்டியின்றித் தேர்வான பெண் பதவி ஏற்பில், அழுது கொண்டே இருந்தார்! (ஆனந்தக் கண்ணீர்?)
முதலமைச்சர் ஸ்டாலின் கசப்புத் தமையானர் மு.க. அழகிரி ஆதரவில் மதுரையில் பானு முபாரக் அபார வெற்றி!
சென்னையின் 340ஆண்டு மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக இருபத்தெட்டு வயது இளநங்கை ஆர். பிரியா மாநகராதிபதி மேயர்!
இதேபோல், 'நான் மாடக் கூடல்' என்கிற தூங்கா மதுரைமாநகரின் மேயராக இந்திராணி.
வேலூரில் ஓர் அங்கத்தவராக கங்காநாயக் என்ற திருநங்கை தேர்வு! இதே ஊரில் 21வயது ரேவதியும் தேர்வு!
சட்டக்கல்லூரி 03ஆம் ஆண்டு மாணவி யஸ்வினி, (22வயது), பொறியியல் பட்டதாரி சினேகா (இவரும் 22!) சென்னையின் ஒரு பிரிவில் நிலவரசி என்றெல்லாம் பல இளைய தலைமுறைகள்.
இவர்களுடன், குடும்பங்களின் வெற்றி' படுஜோர்!
அதென்ன குடும்பங்களின் வெற்றி? பலதொகுதிகளில் கணவன் - மனைவி, மாமி - மருமகள், அண்ணன் - தங்கை!
"குடும்பப் பொறுப்புகளுடன் ஊர் வளர்ச்சிப் பொறுப்பும் உங்களுக்கே" என்று அறிவுறுத்தி உள்ளார் முதலமைச்சர். இன்னுமொரு இனிப்புடன் இதை நிறுத்த அனுமதியுங்கள். கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைமை ஓதுக்கீடு செய்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் சரவணன் (42), மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமையால் அறிவிக்கப் பட்டார்.
வேறுயாரும்,
மேயர் பதவிக்கு போட்டியிடாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். பின்னர், மேயருக்கான இருக்கையில் அமரவைத்து, அவருக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. எப்படிப்பட்ட பேரதிசயம், தமிழ்நாட்டில், கும்பகோணத்தில் அறுசுவை உணவுக்குப் புகழ்பெற்ற அந்நகருக்கு இனி ஆட்டோ, சாரதியே மேயர்! ஆஹா!
ஓர் அடிக்குறிப்பு
பல முஸ்லிம் பெண்மணிகளும் முக்கிய இடங்களில் தேர்வு..