1969ம் ஆண்டு செப்டெம்பர் 13ம் திகதி பிறந்த ஷேன் வோர்ன் கடந்த 4ம் திகதி தாய்லாந்திலுள்ள சுற்றுலாத்தீவான கேசாமூயிலுள்ள உல்லாச விடுதியொன்றில் விடுமுறையைக் கழிக்க வந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
திடீரென உயிரிழந்ததால் ஆரம்பத்தில் அவரது உயிரிழப்பு சம்பந்தமாக சந்தேகங்கள் எழுந்தாலும், தாய்லாந்து அரசின் உத்தரவுக்கமைய அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர், அஸ்துமா போன்ற நோயினால் அவதிப்பட்டிருந்ததாலும், அதிகமாகப் புகைப்பது, மது அருந்துவது போன்ற காரணத்தால் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட மரணம் என உறுதி செய்யப்பட்டது. எனவே அவரது பூதவுடல் தாய்லாந்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவரது பூதவுடல் எதிர்வரும் 30ம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரச மரியாதையுடன் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுவதாக விக்டோரியா மாநில அரசு அறிவித்துள்ளது.
1980களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு தலையிடியைக் கொடுத்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் கதீரின் கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்தவுடன் அதே பானியிலான பந்துவீச்சுக்கு உயிர் கொடுத்தவர்தான் ஷேன் வோர்ன். 1992ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி சிட்னி நகரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமான அவர் இரு தசாப்த காலங்களாக லெக் ஸ்பின் பந்துவீச்சின் மூலம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பணமாகத் திகழ்ந்தார்.
சிட்னியில் விளையாடிய முதல் போட்டியின் பின் அவர் ஏழு மாதங்களாக அடையாளம் தெரியாமலிருந்தார். 1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியே அவரது இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும்.
அப்போட்டியில் முதலாவது இனிங்ஸில் குருசிங்க, அர்ஜுன, களுவிதாரண ஆகியோரின் அதிரடிக்கு ஆளான ஷேன்வோர்ன் முதல் இன்னிங்சில் 22ஓவர்கள் பந்து வீசி 107ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றியிருக்கவில்லை. ஆனால் போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணிக்கு 176ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த நிலையில், இறுதியில் இலங்கை அணிக்கு வெற்றி பெற இன்னும் 34ஓட்டங்களே தேவையாகவிருந்தது. அச்சமயத்தில் தலைவர் அலன் போடர் பந்து வீச புதிய வீரர் ஷேன் வோர்னை அழைத்தார். அதுவரை வெற்றியின் விளிம்பிலிருந்த இலங்கை அணியை 16ஓட்டங்களால் தோல்வியடைய ஷேன் வோர்னின் பந்து வீச்சே காரணமாயமைந்தது. மீண்டும் அவ்வருட இறுதியில் மேற்கிற்தியத் தீவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவர் அங்கு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 52ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7விக்கெட்டைக் கைப்பற்றினார். அது முதல் வோர்னின் பந்து வீச்சு ஏறுமுகமாகவே இருந்தது.
அதுமுதல் அவர் ஓய்வுபெறும் வரை உலகில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் சவாலாகவே விளங்கினார். 2007ஜனவரி 2ம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியே அவரது கடைசிப் போட்டியாக அமைந்தது. அதுவரை அவர் 145போட்டிகளில் விளையாடி 40,705பந்துகளை வீசி, 17995ஓட்டங்களைக் கொடுத்து 708விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதன் சராசரி 25.41ஆகும். அவரது சிறந்த பந்துவீச்சாக இங்கிலாந்துக்கு எதிராக 81ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சாக இங்கிலாந்துக்கு எதிராக 128ஓட்டங்களுக்கு 12விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் 37முறை 5விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றியுள்ளதுடன், ஒரு போட்டியில் 10விக்கெட்டுக்கு மேல் 10முறை கைப்பற்றியுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் சில சமயங்களில் துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் கைகொடுத்துள்ளார். மொத்தம் 199இன்னிங்ஸ்களில் 12அரைச்சதங்களுடன் 3154ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ஒரு இன்னிங்ஸில் கூடிய ஓட்டங்களாக 81ஓட்டங்களைப் பெற்றுள்ளார். மொத்தமாக 125பிடிகளை எடுத்து களத்தடுப்பிலும் அவுஸ்திரேலிய அணிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். உலகின் 700விக்கெட் என்ற மைல்கல்லை முதன் முதலில் கடந்த வீரராகவும் ஷேன் வோர்ன் சாதனை படைத்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 1993ம் ஆண்டு மார்ச் 24ம்திகதி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளிங்டனில் அறிமுகமானார். 2005ஜனவரி மாதம் 10திகதி மெல்போர்ன் நகரில் ஆசியன் லெவன் அணிக்கு எதிராக நடைபெற்ற அவரது ஓய்வுப் போட்டிவரை 194சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 25.73என்ற சராசரியுடன் 293விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்து வீச்சாக 33ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 4விக்கெட்டுக்கு மேல் 13முறை கைப்பற்றியுள்ளார். ஒரு ஓவருக்கு 4.25வீதம் ஓட்டங்களை வழங்கியுள்ளார். ஒரு நாள் போட்டி துடுப்பாட்டத்தில் 107இன்னிங்ஸில் 29முறை ஆட்டமிழக்காமல் 13.04சராசரியுடன் 1018ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கூடிய ஓட்டங்களாக 55ஓட்டங்ளைக் பெற்றுள்ளார். 80பிடிகளை எடுத்து களத்தடுப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார். சர்வதேச அரங்கில் இரு வீரர்களே சர்வதேச போட்டிகளில் 1000விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர். ஷேன் வோர்னும் அதில் ஒருவர்.
இவர் ஓய்வு பெற்ற காலங்களிலேயே ரி/20போட்டிகள் அறிமுகமானது. எனவே ரி/20போட்டிகளில் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும், இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பமான ஐ. பி. எல். ரி/20தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்குத் தலைவராகவும், பயிற்சியாளராகவும் பொறுப்பேற்று அவ்வணி கிண்ணம் பெற தனது பங்களிப்பை உச்சளவில் வழங்கினார்.
வலது கை ‘லெக் ஸ்பின்’ பந்துவிச்சாளரான இவர்
துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பாராத விதமாக பந்தை வீசி, சரியாக விக்கெட்டுக்கு பந்தை சுழல விடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். அவ்வாறான பந்துகளை துடுப்பாட்ட மட்டையால் தடுகக்காமல் விடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறுமளவுக்கு அவரது மாயஜால பந்து வீச்சு அமைந்தது. இங்கிலாந்து வீரர் அண்ட்ரு ஸ்ட்ரோஸ், மைக் கெடிங், பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, மேற்கிந்தியத் தீவுகளின் சந்தர்போல் இப்படியாக பல முறை ஆட்டமிழந்துள்ளனர்.
பழுப்பு நிறத்தினாலான சிகை அலங்காரம், காதில் அணியும் கடுக்கன், தங்கமாலை போன்ற அலங்காரங்களால் அதிக பெண் ரசிகர்களிடம் பிரசித்தி பெற்ற ஷேன்வோர்ன், ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் முட்டி மோதிவதிலும் பிரபல்யம் பெற்றிருந்தார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஷேன் வோர்ன் பல முறை போட்டித் தடைகளுக்கும் உள்ளாகியிருந்தார். அதில் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட பல சந்தர்ப்பங்களும் உள்ளன.
2003ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவிருந்த சமயத்தில் அவரது உடற்தகுதி போட்டிக்கு உகந்ததாக இல்லை என்ற சர்ச்சை அப்போது எழுந்ததால் அவரை உலகக் கிண்ண அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை எடுத்துக்கொண்டார். இந்த உண்மை தெரியவந்ததும் ஒருவருட தடைக்குள்ளானார். என்றாலும் சளைக்காத ஷேன் வோர்ன் அந்த ஒரு வருடத்தையும் கிரிக்கெட் வர்ணனையாளராக தன்னை புடம் போட்டுக்கொண்டார். பின்னாளில் ஓய்வின் பின் முழுநேர வர்ணனையாளராக மிளிர இது உதவியதாக அவர் ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார்.
அவுஸ்திரேலிய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து 1999ஆம் ஆண்டு காலகட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அணித் தலைவர் ஸ்டீவ் வோவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் நீக்கப்பட்டார்.
இவர் அந்நாளில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு சல்லாபங்களிலும் ஈடுபட்டதாலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது 2000ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாதி ஒருவர் தனக்கு குறுஞ்செய்திகளில் பாலியல் ரீதியாக செய்திகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முறையான ஆதாரத்துடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது பற்றி வோன் கூறுகையில்: போதையில் இருந்த போது அப்படி அனுப்பியிருக்கலாம் என்று தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உப தலைவர் பதவியைப் பறித்தது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை.
அரவிந்த டி சில்வா, ஜயசூரிய, களுவிதாரண போன்ற இலங்கை அணி வீரர்கள் இவரின் பந்து வீச்சை அடித்தாடுவதில் வல்லவர்கள். இதனால் கோபப்படும் ஷேன்வோர்ன் இலங்கை அணியினருடனும், முக்கியமாக தனது பந்து வீச்சுப் போட்டியாளரான முரளியுடனும் ஆடுகளத்தில் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆடுகளத்துக்கு வெளியே எல்லோருடனும் சுமுகமாகப் பழக்கூடியவர். 2006ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட சமயத்தில் இலங்கைகு விஜயம் செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும், ஆதரவும் அளித்து சமூக சேவையில் ஈடுபட்ட முதல் கிரிக்கெட் வீரர் இவராவார்.
கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் புரிந்த சிறந்த வீரராக ஷேன் வோர்ன் இருந்தாலும் அவரது சல்லாப நடத்தை காரணமாக பலமுறை போட்டித் தடைக்குள்ளானார்.
எம்.எஸ்.எம்.ஹில்மி