இலங்கையின் பொருளாதார நிலை: முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் பொருளாதார நிலை: முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்

இலங்கை மிக மோசமானதொரு பொருளாதார நெருக்கடிக்குள்சென்றிருக்கிறது. நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில்இருந்துவரும் இரட்டைக்குறை நிலைகளானவரவு செலவுத்திட்டக் குறை நிலை மற்றும் சென்மதி நிலுவையின் வர்த்தகக் நிலுவைக் குறை நிலை என்பன நிலைத்திருக்க முடியாத அரச நிதி நிருவாகத்திற்கும்தொடர்ச்சியாக இலங்கை ரூபாவின் பெறுமதி தேய்வடைவதற்கும் பிரதான காரணங்களாகும்.

இது சுதந்திரத்தின் பின்னர் இருந்தே அதிலும் குறிப்பாக 1977இல் பொருளாதாரம் திறந்து விடப்பட்ட பின்னர் அவதானிக்கப்பட்டு வரும் பிரச்சினையாகும். ஆனால் முன்னர் ஒருபோதும் மிகக்குறுகிய காலத்தில் இன்று அனுபவிப்பது போன்ற நெருக்கடி நிலைக்குள் இலங்கைப் பொருளாதாரம் வீழ்ந்ததில்லை.  

2015ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மெதுவடைந்து சென்றமை தெளிவானது. எனினும் அதனை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுடன் அரச நிதி நிர்வாகத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது. வரிக்கொள்கைச் சீர்திருத்தங்களும் அரசாங்க கடன்களை மீளக்கட்டமைத்து செலுத்தும் வேலைத்திட்டங்களுடன் அரசாங்க செலவீடுகளை குறைக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை ஈடுபட்டது. வெளிநின்ற பொதுப்படுகடன்களின் அளவு அதிகரித்துச் சென்ற நிலையில் இலங்கை கடன் நெருக்்கடி நிலையினை எதிர்கொள்ளும் என பொருளியலாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  

இந்நிலையில் 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டன. தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிப் பதிலீட்டு கைத்தொழில் கொள்கைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. அதனால் நாட்டின் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. அதேவேளை நாட்டில் மிகப்பெரிய செலவீடுகளை மேற்கொண்டு உருவாக்கப்பட்ட துறைமுகம், விமான நிலையம், தாமரைக் கோபுரம், அதிவேக வீதிகள் என்பன நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தர முடியாத நிலையில் கடன் சேவை செலுத்தலுக்காக மீண்டும் கடன் பெறுவது தவிர்க்க முடியாததாக மாறியது.  

இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக நாட்டுக்குள் டொலரின் வருகை குறைவடைந்து வெளிச்் செல்கை அதிகரித்தது. நாட்டின் டொலர் கையிருப்புகள் கடன் மீளச் செலுத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டபோது கணிசமான வீழ்ச்சியினை எதிர்நோக்கின. இதனால் சர்வதேச கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கையின் இறைமைக் கடன் தரமிடலை தொடர்ந்து கீழ்நோக்கி நகர்த்தின. இலங்கை அந்த நிறுவனங்களுடன் சண்டைக்குப் போனதே தவிர துரதிருஷ்டவசமாக அதிலிருந்து சொல்லப்பட்ட செய்தியை சரியாகப் புரி்ந்துகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது.  

அந்நியச் செலாவணிச் சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போக்கு தொடர்ந்தது. இலங்கை ரூபாவில் குறுங்கால முதலீடுகளை மேற்கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மீளப்பெறத் தொடங்கினர். மறுபுறம் கடன் தரமிடல் கீழ்நோக்கி நகர்த்தப்பட்டமையால் திறைசேரி உண்டியல்களையும் முறிகளையும் பயன்படுத்தி கடன் பெறும் அரசாங்கத்தின் ஆற்றல் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.  

முன்னர் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு சாதனமாக விளங்கிய அரச பிணையங்கள் மதிப்பிழந்து போயின. அவற்றின் விலைகள் 60சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்தன. உயர் வட்டிவீதங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றின் மீதான முதலீடுகள் வீழ்ச்சியடைந்தமை இலங்கையின் கடன் பெறும் ஆற்றலை வெகுவாகப் பாதித்தது.  

எனவே நட்பு நாடுகளிடம் குறுங்காலக் கடன்களைப் பெற்று கடன் தவணைகளை செலுத்தும் நிலை உருவாகியது. அது இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் தேய்வடையக் காரணமாகியது. இதனால் இலங்கை டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை 203ரூபா என்ற நிலையான மட்டத்தில் கட்டிப்போட்டது.  

இந்த நடவடிக்கையே இலங்கை மேற்கொண்ட மாபெரும் தவறாகும். நாணய மாற்று வீதத்தை நிலையாக பேண வேண்டுமாயின் குறிக்கப்பட்ட 203ரூபா விலையில் மத்தியவங்கி சந்தைக்கு டொலரை வழங்க வேண்டும். ஆனால் மத்திய வங்கியிடம் டொலர் கையிருப்புகள் இல்லை. ஆகவே செயற்கையாக 203ரூபா என்ற மட்டத்தில் டொலரின் பெறுமதியை நிர்ணயித்துவிட்டு அதை நடைமுறைப்படுத்தம் ஆற்றல் இல்லாத நிலையில் அதனைப் பின்பற்றுமாறு கூறியமை மத்தியவங்கி செய்த மிகப்பெரிய தவறு.  

அவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துச் சென்றிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டதைப்போல ஓரிரு நாட்களில் 203ரூபா மட்டத்திலிருந்து 275ரூபாவாக மிகச் சடுதியான ஒரு அதிகரிப்பைச் சந்தித்திருக்காது. 

இப்போது ஏற்பட்டுள்ள நிலை ஒரு பொருளாதார அதிர்ச்சியாகும். இந்த அதிர்ச்சி பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஊகவணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாபெரும் செல்வம் ஈட்டவும் தனியுரிமைகள் தோன்றவும் பதுக்கல் நடவடிக்கைகள் விரிவடையவும் மிகவும் வாய்ப்பான சந்தர்ப்பத்தை இது ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.  

ரூபாவின் தேய்வினைத் தொடர்ந்து எல்லாப் பொருள்களின் விலைகளும் சடுதியான அதிகரித்துள்ளன. விலைக்கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் வணிகர்கள் தமது எண்ணப்படி பொருள் விலைகளை நிர்ணயிக்கும் நிலையேற்பட்டுள்ளது. பொருள் விலை அதிகரிப்புடன் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு விண்ணை முட்டி நிற்கும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக இப்போது ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமைக்கான பொறுப்புக் கூறலில் இருந்து இலகுவாக நழுவிச்செல்லும் போக்கில் உரிய தரப்பினர் ஈடுபட்டுள்ளமையையும் தெளிவாகக் காணமுடிகிறது.  

அரச பதவியொன்றை வகிக்கும் போது ஒருவர் எடுத்த பிழையான நடவடிக்கைக்காக மட்டுமன்றி எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையை எடுக்காமல் விட்டமைக்காகவும் பொறுப்புக் கூற வேண்டியவராவார். ஆனால் இப்போது எற்பட்டுள்ள பொருளாதார இழிநிலைக்கு தார்மீகப் பொறுப்பேற்கும் நிலையில் எவரும் இல்லை. மத்திய வங்கியின் ஆளுநர் இலங்கையில் டொலர் பிரச்சினை இல்லை. ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) செல்ல வேண்டியதில்லை என்று பலதடவைகள் பேட்டியளித்தார். அரசாங்கமும் அவ்வாறே செயலாற்றியது.   

இன்றைய நிலையில் மீண்டும் ரூபா மிதக்கவிடப்பட்டு ஒரு டொலருக்கு 275ரூபா மட்டத்தைக் கடந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் டொலர்களை இங்குவந்து கொட்டுவார்கள் என்றும் அதனால் டொலரின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் டொலரை நாட்டுக்கு அனுப்பத் தயங்குகின்றனர்.  

உதாரணமாக, இத்தாலியில் உள்ள பெரும்பான்மை இன இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பொன்று இலங்கைக்கு டொலர்களை அனுப்புவதைத் தடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாகப் பத்திரிகைக் குறிப்பொன்று கூறியது. அதே போன்று ஜப்பானில் வாழும் இலங்கையர்களும் நாட்டுக்கு பணம் அனுப்பத் தயக்கம் காட்டுகிறார்கள்.  

இலங்கையின் ஏற்றுமதிகள் உடனடியாக அதிகரிக்கும் சாத்தியங்கள் ஏதுமில்லை. இந்தியா தருவதாக ஒத்துக்கொண்டுள்ள ஒரு பில்லியன் கடனுதவி அத்தியாவசியப் பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவே பயன்படும். எனவே இலங்கையின் டொலர் கையிருப்பை அது மாற்றியமைக்காது. திடீர் ஞானோதயம் பிறந்து இப்போது IMF இடம் அடுத்த மாதம் செல்லப்போவதாக அறிவித்துள்ளார்கள். குறைந்த பட்சம் ஆறுமாதங்கள் ஆகும். அதன் உதவி கிட்டுவதற்கு.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments