![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/20/a27.jpg?itok=IB9UBatN)
உலக சிட்டுக்குருவிகள் தினம் (2022.03.20)இன்றாகும். அதன் நிமித்தம் இக்கட்டுரை பிரசுமாகிறது.
இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி மனிதனுக்கு அபரிமித நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளன. அதேநேரம் அனைத்து உயிரினங்களுக்கும் அவை தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியனவாகவும் அமைந்துள்ளன. அதனால் சில உயிரினங்கள் முற்றாக அழிந்து அருகிவிடக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சிட்டுக்குருவியும் ஒரு உயிரினமாகக் கருதப்படுகின்றது.
என்றாலும் சிட்டுக்குருவிகள் அவ்வாறான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று ஒரு சாராரும் எதிர்கொள்கின்றது என்று மற்றொரு சாராரும் தத்தம் பக்க நியாயங்களை முன்வைத்தபடி தெரிவிக்கின்றனர். ஆனால் நவீன அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மனிதனின் நடத்தை மற்றும் பழக்கவழக்கங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகம் எமக்கானது எனக் கருதிய சுய நல செயற்பாடுகள் பெரிதும் அதிகரித்துள்ளன. அவற்றின் விளைவான மாற்றங்களும் கூட பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் இருப்புக்கு பெரும் சவால்மிக்க அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
அந்த வகையில் சிட்டுக்குருவியானது, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் பல நாடுகளில் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மிகவும் சிறியவை. இது வீட்டுக்குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க்குருவி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இப்பறவை இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும். சிறிய அலகு, சிறிய கால்களைக் கொண்ட இப்பறவை 8முதல் 24சென்றி மீற்றர்கள் நீளமுடையவை. அதேநேரம் பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை நிறங்களிலும் காணப்படக்கூடிய இப்பறவை, கூம்பு வடிவ அலகுகளையும் 27முதல் 39கிராம் நிறை கொண்டவையாகவும் காணப்படக்கூடியன.
இப்பறவைகளின் ஆண், பெண் இனங்களை இலகுவாகக் கண்டறியலாம். ஆண் பறவையின் உடலின் மேற்பகுதியில் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகளை அவதானிக்கலாம். கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படும்.
அதேவேளை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய இப்பறவையினம், பசரீன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13ஆண்டுகளாகும். இவை மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். அதன் முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கக்கூடிய பண்பைக் கொண்டிருக்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை அவை கூட்டிலேயே இருக்கும். அவை பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடும். காகத்திற்கு அடுத்தபடியாக மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவையே இது.
மனிதர்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படக்கூடிய பறவையாக சிட்டுக்குருவிகள் விளங்கிய போதிலும் அவை மனிதர்களோடு பழகுவதுமில்லை. அவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களிலுள்ள மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கக்கூடிய இப்பறவை, கிண்ண வடிவில் கூடுகளை அமைக்கக்கூடியனவாகும். குளிர் காலத்தில் கூட்டமாக புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கும் பண்பையும் கொண்டிருக்கின்றன.
இப்பறவைகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளக்கூடியவை. என்றாலும் மலர் மொட்டுகளையும் உண்ணும் பண்பைக் கொண்ட சிட்டுக்குருவிகளும் இவற்றில் உள்ளன.
இரைதேடுவதில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
எனினும் வீட்டுக்குத் தேவையான உணவுத் தானியங்கள் வீட்டு முற்றத்திலும் திறந்த வெளியிலும் உலர வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக மனிதனிடம் காணப்பட்டன. அதன் பயனாக இறைதேடிக் கொள்வதில் இக்குருவிகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியின் விளைவாக அண்மைக்காலம் முதல் தானியங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் பொலித்தீன் பைகளில் பொதியிடப்படும் பழக்கம் மனிதனில் குடிபுகுந்துள்ளன. பலசரக்கு கடைகளும் மூடுண்ட, பல்பொருள் அங்காடிகள் நிலையங்களாக மாறி வருகின்றன. அங்கும் பொலித்தீன் பைகளில் தானியங்களை அடைத்து விற்பனை செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தானியங்கள் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதனால் வீடுகளிலும் பல சரக்கு கடைகளிலும் இரைதேட முடியாத நிலைக்கு இப்பறவை இனம் உள்ளாகியுள்ளன.
இரசாயனப் பாவனை அதிகரிப்பு
அதேநேரம் மனித செயற்பாடுகளால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களும் இப்பறவை இனத்தின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பசளை, கிருமி நாசினி, களைக்கொல்லி என்பன இதற்கு பாரிய பங்களிப்பு நல்கியுள்ளன. இதன் விளைவாக இப்பறவை இனம் உணவாகக் கொள்ளும் விவசாய நிலங்களில் காணப்படும் பூச்சி இனங்களும் புழுக்களும் அழிக்கப்படுகின்றன.
அதனால் இப்பறவை இனம் இரண்டு விதமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளன. அவற்றில் ஒன்று வீட்டுத்தோட்டங்கள், வயல்களுக்கு இரசாயனப் பசளை மற்றும் கிருமிநாசினிப் பாவனையால் வண்டுகள், புழுக்கள் மற்றும் பூச்சி இனங்களும் சுற்றாடலில் அழிவடைந்து வருகின்றன. இதன் விளைவாக இப்பறவை இனம் உணவை இழந்து வருகின்றன. மற்றையது இரசாயனப் பசளை மற்றும் கிருமிநாசினிகளால் உயிரிழந்த பூச்சி புழுக்களையும் உணவாக கொள்ளும் நிலைமைக்கு இப்பறவை இனம் சில சந்தர்ப்பங்களில் முகம் கொடுக்கின்றன. அதனால் அவை ஒன்றில் உயிரிழக்கின்றன அல்லது அவற்றின் இனப்பெருக்கத் தொகுதிகளில் நச்சு இரசாயனத் தாக்கம் ஏற்பட்டு இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகின்றன.
மேலும் எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைத்திரேட்டு எனும் இரசாயனக் கழிவுப் புகையால் காற்று மாசடைகின்றன. அதன் விளைவாகவும் பூச்சி இனங்கள் அழிவடைகின்றன. இவற்றின் விளைவாக இரை தேடுவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சிட்டுக்குருவிகள், உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்துள்ளன.
கூடமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
மேலும் இப்பறவை இனம் மெல்லிய நார் போன்ற நூலிழைகளைக் கொண்டு கூடமைத்து வாழும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் நடத்தை மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவாக சுற்றுச்சூழலில் இவ்வாறான நூலிழைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு இப்பறவை இனம் உள்ளாகியுள்ளன. அத்தோடு இப்பறவை இனம் கூடமைப்பதற்கு பயன்படுத்தும் பொருட்களில் மரங்கள், தாவரங்களில் இருந்து பெறும் பொருட்களும் அடங்கும். காடழிப்பு காரணமாக அவற்றைப் பெற்றுக்கொளள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளன.
அதேநேரம் மனிதன் வாழும் சூழலில் மனிதக் குடியிருப்புக்களில் கூடமைத்து வாழ்ந்து பழக்கப்பட்ட இப்பறவை இனம், அண்மைக் காலம் முதல் கூடுகளை அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை வீடுகளில் இழந்துள்ளன. குறிப்பாக கொங்கிறீட் கட்டடங்களாகவும் கூடுகளை அமைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிராதவையாகவும் வீடுகள் அமைக்கப்படுகின்றன.
அத்தோடு வீடுகள் பெரும்பாலும் மின்வசதியைக் கொண்டிருப்பதால், காற்றாடி, அதிக வெப்பம் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தப்படுபவையாக உள்ளன. அத்தோடு வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகள் உருவாக்குவதால், அதில் குருவிகள் கூடுகட்டி குடியிருக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளன.
இவை இவ்வாறிருக்க, தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களும் சிட்டுக்குருவிகளுக்கு தாக்கம் மிக்கவையாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஸ்பெய்னில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டது. ஆனால் தொலைத்தொடர்பு கோபுரங்களால் சிட்டுக்குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது தெற்காசிய பிராந்திய நாடுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பறவையியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
என்றாலும் தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, இரைதேடும் இடங்களான வயல் வெளிகள் நிரப்பப்பட்டு வீடுகள் அமைக்கப்படுதல், விவசாய நிலங்களுக்கு இரசாயனப் பாவனை அதிகரிப்பு என்பன சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை வட்டத்தில் தாக்கம் செலுத்தவே செய்யும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தாகவே உள்ளது.
இவ்வாறான நிலையில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதை 1990களில் அவதானித்த ஆய்வாளர்கள் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளனர். இதன் அவசியம் பரவலாக உணரப்பட்டுள்ளது. அதற்கேற்ப மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2010மார்ச் 20ஆம் திகதி முதல் வருடாந்தம் உலக சிட்டுக்குருவிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
யாதுமறியா அப்பாவிகளான சிட்டுக்குருவிகள் மனிதனின் தவறான செயற்பாடுகளால் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொருவரும் பங்களாரகளாக வேண்டும். அது சிட்டுக்குருவிகளின் இருப்புக்கு ஆற்றும் பாரிய சேவையாக அமையும்.
மர்லின் மரிக்கார்