முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்துமலை பகுதி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வாத விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் கொழும்பிலுள்ள பௌத்தாலோக பவுண்டேசன் என்ற அமைப்பு குருந்துமலை தாது கோபுரத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
வரலாற்றுப் புகழ்மிக்க தொல்பொருள் பிரதேசமான குருந்துமலை பகுதியின் தற்போதைய நிலைமையை நேரில் கண்டறியும் வகையில் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்றை மேற்படி பௌத்தாலோக பவுண்டேஷன் அமைப்பினர் முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
தொல்பொருள் பிரதேசமாக குருந்து மலைப்பிரதேசம் விளங்குகிறது. எனினும் இது பௌத்தர்களுக்கு சொந்தமான தா? அல்லது இந்துக்களுக்கு சொந்தமானதா? என்ற சர்ச்சையும் வாதப் பிரதிவாதங்களும் இன்றைக்கும் நீடித்து வருகிறது. எனினும் இரண்டு மதத்தவர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் வந்து போகக் கூடிய தொல்பொருள் இடமாகவும் இது விளங்குகிறது.
குருந்துமலையின் தாதுகோபுரம் மன்னர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது என்பதற்கு சான்றாக அதன் அனைத்து கட்டட நிர்மாண அமைப்புகளும் அக்காலத்து கட்டடக் கலையை பின்பற்றியதாக அமைந்துள்ளது. தாதுகோபுரம் 'கபுக்கல்' என்ற மண் கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் தொல்லியல் துறையின் புனர்நிர்மாணம் அல்லது மீள் நிர்மாணப்பணிகள் பெரும்பாலும் சிதைவுற்றுள்ள அந்த கற்களை பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருவதை காணமுடிந்தது. நிர்மாணப் பணிகளில் பெருமளவிலானோர் பங்கேற்றுள்ளதுடன் இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் அதில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை அவதானித்தோம். ஒரு மீள் நிர்மாணப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற கேள்வியும் எழவே செய்கிறது. எதிர்த்தரப்பின் வாயை மூடச் செய்வதற்காகவா? என்று ஒருவர் கேள்வி எழுப்பவும் செய்தார்.
இந்த வருடத்தின் பொசன் பண்டிகைக்கு முன்னர் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். அதாவது ஜூன் மாதத்துக்கு முன்னர் ஊடகவியலாளர்களோடு தொல்பொருள் அதிகாரி கபில சேனாதீர, பௌத்தாலோக பவுண்டேஷன் அமைப்பின் ஊடகச் செயலாளர் மகேஷ் சேனாதீரவும் இப் பயணத்தில் இணைந்துகொண்டனர்.
நிர்மாணப் பணிகள் மற்றும் அங்குள்ள தொல்பொருள் முக்கியத்துவம் தொடர்பில் இருவரும் தெளிவுபடுத்தியதுடன் குருந்துமலை தாதுகோபுரம் மற்றும் அதனை அண்டிய தொல்பொருள் பிரதேச பகுதிகளுக்கும் அவர்கள் எங்களை அழைத்துச் சென்றனர்.
வவுனியா பிரதேச தொல்பொருள்அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரியும் குருந்துமலை புனரமைப்பு திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரியுமான கபில சேனாதீரவோடு நாம் உரையாடியபோது அவர் சில விஷயங்களைத் தொட்டுப் பேசினார்.
குருந்துமலை பகுதியில் அகழ்வுப் பணிகளை கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் திகதிதான் ஆரம்பித்தோம். தற்போது குருந்துமலை தாதுகோபுர புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு
மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
புனரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த தாது கோபுரத்தின் முழுமையான உயரம் 35அடிகளாகும். ஏற்கனவே இந்த தாதுகோபுரம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டிருந்ததோ அதில் எந்த வித்தியாசமும் ஏற்படாமல் அதேபோன்று இதனை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான காணி விஸ்தீரணம் 25ஏக்கராக உள்ள நிலையில் இதனை அண்டிய குருந்து மலை வனப்பகுதி சுமார் 400ஏக்கர்களைக் கொண்டுள்ளது.
இந்த புனரமைப்பு திட்டத்தில் தொல்பொருள் தரப்பு அதிகாரிகள் ஐந்து பேர் பணிபுரிகின்றனர். நிர்மாணப் பணிகளுக்கு நிதி உதவி வழங்கும் ஜகத் சுமதி பாலவின் அதிகாரிகளும் உள்ளனர். அதனைவிட இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புக்களும் எமக்குக் கிடைக்கின்றன.
புனரமைப்புக்கான அகழ்வின்போது சில பொருட்கள் எமக்கு கிடைத்தன. யானையின் முகம் போன்ற சிலைகளும் காணப்பட்டன. அத்துடன் இது பௌத்த வழிபாட்டு தலம் என்பதற்கான சில புராதனப்பொருட்களும் கிடைத்துள்ளன.இதனை அண்டிய பகுதிகளில் பாரிய கட்டடங்கள் இருந்ததற்கான சிதைவு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனினும் அதை வைத்து எவ்வளவு மக்கள் இங்கு அக்காலப்பகுதியில் வசித்திருக்கக் கூடும் என்பதை அனுமானிக்க முடியாது.
இதனை அண்டியதாக குருந்துமலை குளம் தண்ணிமுறிப்பு குளம் ஆகியன காணப்படுகின்றன.நாக தீபவுக்கு அடுத்தபடியாக இந்த இடம் ஒரு வழிபாட்டு தலமாக இருந்துள்ளது. அனுராதபுர வரலாற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
புராதன எழுத்துச் சுவடிகள் காணப்பட்டன. அதில் மத்திய கால சிங்கள எழுத்துக்களை ஒத்ததான எழுத்துக்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. அவை 1700வருடங்களுக்கு முற்பட்டவை என குறிப்பிட முடியும். அவை நான்காவது உதய மன்னனுடையதாகும். கிறிஸ்து வருடம் 946-954காலத்தை அது குறிக்கின்றது மகாவம்சத்தின் பிரகாரம் விஜயன் இலங்கை வந்து திருமணம் செய்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கியபோதே சிங்கள மொழியும் படிப்படியாகத் தோன்றியிருக்க முடியும். கி.பி. 946காலத்தல் அம்மொழி எவ்வளவு தூரத்துக்கு வசனங்களை எழுதும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்குமா? என்ற கேள்வியும் உள்ளது என்றார் அவர்.
குருந்துமலை தொல்பொருள் பிரதேசத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அது இந்து, பௌத்த மதங்கள் மற்றும் மன்னர்களை அடிப்படையாகக் கொண்டவை. அசோக மன்னன் தேவநம்பிய தீசன் உள்ளிட்ட மன்னர்கள் அதனோடு சம்பந்தப்படுகின்றார்கள்.
இத் தாதுகோபுரத்துக்கு வருவோமானால் (கி.மு. 571-604)ல் முதலாவது அக்கபோ மன்னனால் அமைக்கப்பட்டதாகவும் நான்காவது அக்கபோ (கி.மு 667- 683)மன்னரின் காலத்தில் அது முறையாக ஸ்தாபிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மகாவம்சத்தில் முதலாவது விஜயபாகு மன்னன் காலத்தில் (1055-1110) அது ஸ்தாபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (மகாவம்சம் 1963: 41,16)
குருந்துமலை அடிவாரத்திலுள்ள குருந்து மலை குளம் அங்கு நிலவிய தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக மூன்றாவது மகிந்த மன்னன் அவரது மனைவி மற்றும் மகளுடன் அப் பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பின்னர் அமைக்கப்பட்டதாகவும் அது தொடர்பான கல்வெட்டு பற்றி 1905தொல்பொருள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் இந்த பகுதியில் சிதைந்த நிலையில் மேலும் ஒரு கல்பட்டு கிடைத்திருப்பதாக தொல்பொருள் அதிகாரி கூறுகிறார்.
மகிந்த தேரின் காலத்திற்கு முன்னரே குருந்து மலையில். விகாரைகள் தொகுதி அமைந்திருந்த தடயங்கள் உள்ளதாகவும் அங்கு பௌத்த பிக்குகள் நூற்றுக்கணக்கில் வருகை தந்து வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
என்னும் இடைப்பட்ட காலத்தில் இந்து பக்தர்கள் அதனை கோவிலாக உபயோகித்து வழிபாடுகளை மேற்கொண்டதற்கான தடயங்களும் அங்கு காணப்படுகின்றன என்பது அவர் கூறும் முக்கிய விடயம்.
யுத்த காலத்தில் முல்லைத்தீவு பகுதியை விடுதலைப் புலிகள் வசப்படுத்திக் கொண்டிருந்த போது இந்த பிரதேசத்தில் புதையல் தோண்டப்பட்டிருக்கலாம் என்பதை ருசுப்படுத்தும் வகையில் ஆழக் குழிகள் காணப்படுகின்றன.
சிலவேளை மேற்படி விகாரைக்கு அசோக மன்னனின் அனுசரணை கிடைத்திருக்கலாம் எனவும் கற்பனைகள் நிலவுகின்றன. அதேவேளை அவரை நினைவு கூரும் வகையில் இந்த விகாரை நிர்மாணிக்கப் பட்டதாகவும் கற்பனைகள் நிலவுகின்றன.
அசோக மன்னன் புத்த காயா, தென்னிந்தியா மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளில் விகாரைகளை நிர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே தென்னிந்தியாவுடன் இந்த புனித பிரதேசத்திற்கு நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கக் கூடும். என்பதையும் அந்தத் தொல்பொருள் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இன்னொரு விசேஷம் என்னவென்றால், கபோக் கற்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள தாதுகோபுரம் இலங்கையில் குருந்து மலையில் மட்டுமே உள்ளது என்பதாகும். இவ்வாறான தாதுகோபுரம் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பதும் முக்கியமானதாகும். மண் குன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தாதுகோபுரம் நீண்ட காலமாக காடாகக் காணப்பட்டது. நான் பௌத்த மகா சம்மேளனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில் எல்லாவல மேதானந்த தேரர் மூலமே குருந்துமலை தொடர்பில் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடினேன்.
இந்த வரலாற்று பிரசித்தி பெற்ற குருந்துமலை தாதுகோபுரத்தை எமது அடுத்த பரம்பரைக்கு எடுத்துச் செல்வது அவசியம் எனக் கருதினேன். அதனால் அதனை புனரமைப்புச் செய்யும் பணிகளை நான் ஆரம்பித்தேன். அதற்கென 55இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது நிர்மாணப் பணிகள் நிறைவடையும் நிலையில் காணப்படுகின்றன" என்றும் கபிலசேனாதீர தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இத்தகைய தடைசெய்யப்பட்ட வன பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதும் முல்லைத்தீவு வவுனியா மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காடுகளில் மறைந்து உள்ள நூற்றுக்கணக்கான தொல்பொருள் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து அந்த தொல்பொருள் இடிபாடுகள் பௌத்த மதத்திற்கு சொந்தமானவை அங்கு பௌத்த பிக்குகள் வாழ்ந்துள்ளனர். பௌத்த விகாரைகள் இருந்துள்ளன என பௌத்தர்களும், அது பௌத்த தலம் அல்ல.இந்து கோவில்களை கொண்ட தலங்கள் என்றும் அது தமிழர்களுக்கு சொந்தமானவை என்றும் தமிழர்களும் கூறி வருகின்றனர். இந் நிலையிலேயே 2013ஓகஸ்ட் மாதம் இந்த பிரதேசம் ஒரு தொல்பொருள் தலமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
இது இப்படி இருக்க இலங்கைக்கு சங்கமித்திரை வருகைதந்த வரலாறு முல்லைத்தீவையே அடிப்படையாக கொண்டிருப்பது பற்றி முல்லைத்தீவிலுள்ள ஆசிரியர் ஒருவருன் பேசினோம்.
"பௌத்தமதம் சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் தமிழர்கள் இன்றும் இந்தியாவில் வாழ்கின்றனர். சங்கமித்திரை மற்றும் அவரோடு வந்தவர்கள் இந்துக்களாகவே இருந்தனர் வடக்கில் இந்துமக்கள் வாழ்கின்ற பிரதேசத்திற்கு அவர்கள் வந்ததற்கான காரணம் இந்துக்கள் பௌத்தத்தை பாதுகாப்பர் என்ற நம்பிக்கையில்தான். அவர் ஒரு போதும் தென் பகுதிக்குச் செல்ல வில்லை.
மேற்படி குருந்துமலை பகுதி தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளிலேயே உள்ளது. சோல்பரி காலத்திலேயே அந்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இத்தகைய தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதில் இந்து மக்களுக்கு பொறுப்பு உள்ளது. அவர்கள் அதனை செய்வார்கள். அதை விடுத்து தொல்பொருள்களை பாதுகாப்பதற்காக அங்கு விகாரைகளை அமைத்து அதன் பின்னர் அங்கு சிங்கள பௌத்தர்களை குடியேற்றும் நோக்கத்தையே தமிழ் மக்கள் எதிர்க்கின்றார்கள். அனைத்தும் இந்தியாவில் இருந்தே இலங்கை வந்தன. வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் தொல்பொருள் பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவை தொல்பொருள் பிரதேசங்களாக மட்டும் பாதுகாக்கப்பட்டால் எந்த எதிர்ப்புகளும் எழ வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதனையே தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர்" என்பது இவர் தரப்பு வாதம். 1919காலங்களில் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அதன்பின்னர் எதிர்கொள்ள நேர்ந்த கொரோனா வைரஸ் சூழ்நிலை அதனோடு இணைந்த பல்வேறு காரணங்கள் காரணமாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தற்போது குருந்துமலை தாதுகோபுரம் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதனை அண்டிய பிரதேசங்களில் அடுத்தடுத்து புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான நிதி யுதவியை கொழும்பில் பௌத்தாலோக பவுண்டேஷன் வழங்குவதுடன் அதன் தலைவர ஜகத் சுமதிபால இது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
இந்த கட்டுரையில் மேலும் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இடப்பற்றாக்குறை காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை மற்றொரு சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக பேசலாம்.
நேரடி ரிப்போர்ட் :
லோரன்ஸ் செல்வநாயகம்
படங்கள்:
துஷ்மந்த மாயாதுன்னே