![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/27/a13.jpg?itok=Ur1IHuY7)
சீனா தனது அளவு கடந்த செல்வத்தைஉலக நாடுகளுக்கு கடனாக கொடுப்பது வழக்கம். உலக நாடுகள் சிலவற்றை கடன் ஊடாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் சீனாவின் திட்டம். தனது எதிரிநாடுகளின் சிநேகித நாடுகளை தனது வலைக்குள் வீழ்த்துவதில் சீனா கண்ணும்கருத்துமாக காய்நகர்த்தி வருகின்றது.
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் நாடுகளை கடன் ஊடாக கவர்ந்திழுத்து, அந்நாடுகளுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, இறுதியில் அந்நாடுகளை தனது பிடிக்குள் வைத்திருப்பதே சீனாவின் தந்திரமான திட்டம். இவ்வாறு சில நாடுகளை சீனா தனது பிடிக்குள் வைத்திருக்கின்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளை தன் வலைக்குள் வீழ்த்தும் தந்திரத்தை நன்கு புரிந்து வைத்துள்ள நாடு சீனா. இந்தியாவுடன் ஏனைய நாடுகள் நெருக்கமான நட்புறவு கொண்டிருப்பது சீனாவுக்குப் பிடிப்பதில்லை. இந்தியாவையும் அதன் நட்பு நாடுகளையும் எவ்வாறாவது பிரித்து விடுவதில் சீனா அக்கறையாக செயற்பட்டு வருகின்றது. அதற்கான உதாரணங்களை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இதுதான் சீனாவின் தந்திரம்.
சீனா தற்போது தனது நாட்டின் வடமேற்கு பக்கத்தில் பாகிஸ்தானில் 4.5இலட்சம் கோடி ரூபாவுக்கு (இந்திய நாணய பெறுமதி) முதலீடு செய்து, தன்வசப்படுத்தி வருகிறது. இதுவும் பாகிஸ்தானுக்கு கடன்தான். பாகிஸ்தானை சீனா தற்போது அதிகளவில் கடன்வலைக்குள் சிக்க வைத்து விட்டது.
சீனாவின் கனவுத் திட்டமான, 'பெல்ட் அன்ட் ரோட்' என்ற நீண்ட பாதையானது சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கூடார் துறைமுகம் வரை செல்கிறது. மேலும் பாலங்கள், அணைகள், கூடார் துறைமுகம் வரை ரயில் பாதை, கனிம தொழிற்சாலை என அனைத்திற்கும் சீனா தனது மிகப் பெரிய வர்த்தக வங்கி வாயிலாக பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்திருக்கிறது. பாகிஸ்தான் தனது மொத்த கடனில் பத்திலொரு பங்கை சீனாவிடமிருந்துதான் வாங்கியுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளது. உலக நாடுகளில் இருந்து அதிக கடமை வாங்கியுள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விரோத நாடான பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக தனது வலைக்குள் வீழ்த்தினால் இந்தியாவை எதிர்ப்பது சீனாவுக்கு இலகுவாக இருக்கும் என்பதுதான் மறைமுகத் திட்டம்.
2050இற்குள் உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அனைத்து முயற்சிகளையும் சீனா மேற்கொண்டு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனது நிலத்தின் கடைக்கோடியில் ஒட்டிக் கொண்டு, தனிநாடாகச் செயல்பட்டு வரும் தாய்வானை கைப்பற்றுவது சீனாவின் நீண்ட காலத் திட்டம்.இப்போது ஆப்கானிஸ்தானை அடிமையாக்கும் முயற்சியில் சீனா இறங்கி இருக்கிறது.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தன் வசத்தில் வைத்துக் கொண்டால் பாகிஸ்தான் வாயிலாக, இந்தியாவுக்கு காஷ்மீரில் தொல்லை கொடுப்பது போல், அருணாச்சல பிரதேசத்தில் தொல்லை கொடுத்து, 2025இற்குள் அதை கைப்பற்றுவது சீனாவின் திட்டம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைக்க, நீண்ட நெடிய திட்டத்தை சீனா வைத்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் வாயிலாக, தென்சீனக் கடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று சீனா திட்டம் தீட்டுகின்றது.
ஆபிரிக்கக் கண்டத்தில் 54நாடுகள் உள்ளன. எல்லா நாடுகளிலும் சீனாவின் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சீனாவின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இவ்விடங்களில் பணியாற்றுகின்றனர். போக்குவரத்துக்கான பாலங்கள், அணைகள், உயர்ரக வீதிகள், ரயில்வே பாதை, பாராளுமன்றம், கட்டடங்கள், அரசு கட்டடங்கள் என அனைத்தும் அந்நாடுகளில் சீனாவின் செலவுதான்.
கனிம வளங்கள், சுரங்கங்கள் வெட்டி எடுப்பது, ஆபிரிக்க மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து சீனாவில் உள்ள கல்லுாரியில் படிக்க வைப்பது, ஆபிரிக்க நாட்டை 'பெல்ட் அன்ட் ரோட்' (அன்றைய பட்டுப்பாதை) வாயிலாக, மத்திய ஆசியாவிலிருந்து இணைப்பது என பலதரப்பட்ட வேலைகளில் சீனா ஈடுபட்டுள்ளது. இதன் வாயிலாக, சீனாவிலிருந்து ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளான கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாயிலாக பாகிஸ்தான் வரை மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் எளிதாக சென்று விடலாம்.
இது சீனாவின் உயிர்நாடித் திட்டம். ஆபிரிக்காவில் உயர் ரக 'கம்ப்யூட்டர் சேர்வர்களை’ சீனா தன் பொருளாதார முன்னேற்ற வேலைகளை கண்காணிக்க அமைத்தது. இந்த சேர்வர்கள், சீனாவிலுள்ள ஷங்காய் தலைமை சேர்வரோடு இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தென் அமெரிக்காவில் உள்ள 12நாடுகளில் கூட, சீனா கால்பதித்துள்ளது. பிரேசில், ஆர்ஜென்டினா, ஒலிவியா, சிசில், மெக்சிகோ, வெனிசுலா, கொலம்பியா முதலிய நாடுகளில் பெருந்தொகை நிதியில் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு பெரும்பாலும் புதிய ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கேயாகும். அதாவது, 'பெல்ட் ரோட்' அமைப் பதற்கே! இது அமெரிக்காவுக்கு பெரும் ஆத்திரத்தையும், அச்சத்தையும் மூட்டியுள்ளது என்பது வேறு விடயம்.
தென் அமெரிக்க வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லும் வெளிப்படைத்தன்மை இல்லாத நாடாக சீனா உள்ளதென அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
தன் பொருளாதார வளத்தை மேலும் மேம்படுத்தி, 60சதவீத உலக நாடுகளை தன்வசப்படுத்தி வைக்கவும், ஆசியாவையும் தென்னமெரிக்காவையும் இணைக்கப் போடப்படும் ‘சில்க் ரோட்’ திட்டத்தை முழுமூச்சாக நிறைவேற்றவும் வேகமாக செயல்பட்டு வருகிறது சீனா.
இதுஇவ்விதமிருக்க பொருளாதார முதலீடுகளால் இந்தியாவையும் கைக்குள் போட்டுக் கொள்ளும் தந்திரத்தைக் கையாள முயன்ற சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து கொண்டதும், சீன இறக்குமதிக்கு பல தடைகளை விதித்தார். அதன் மூலம் சீனாவின் ஆதிக்கத் திட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த 2014வரை சீனாவுக்கு இந்தியா கடன்பட்ட தொகை 27இலட்சம் கோடி ரூபா; 2021இல் அந்தத் தொகை 31ஆயிரம் கோடி ரூபாவாகக் குறைந்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியா இப்போது மின்சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்கின்றது. இந்தியாவிலிருந்து இரும்பு தாதுக்கள், பருத்தித் துணிகள், அலுமினியம், ஓர்கானிக் இரசாயனங்களை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பிரதமராக மோடி ஆட்சியில் இருக்கும் வரை, சீனாவைப் பற்றி இந்தியா கவலைப்பட தேவையில்லை என்றார்கள் இந்திய பொருளாதார நிபுணர்கள்.
இந்நிலையில் சீனா மீதான வெறுப்பினால், அங்கிருந்து இடம்பெயர்ந்து தங்கள் தொழில் நிறுவனங்களை இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் நிறுவுவதற்கு அமெரிக்க, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.
இந்நாடுகளில் முதல் தெரிவாக இந்தியாதான் உள்ளது. சீன பொருட்களையோ, சீன வர்த்தகத்தையோ உலக நாடுகள் அறவே ஒதுக்க முடியாது. ஆனால், சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகளால், எதிர்காலத்தில், கணிசமாக பொருளாதார பலமடைய, பலனடையப் போவது இந்தியாதான்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில், இந்தியாவில் இருந்து உருக்கு உட்பட மூலப்பொருள் ஏற்றுமதி சீனாவுக்கு அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கொரோனாவுக்குப் பிறகு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருக்கும் தங்கள் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு இடப் பெயர்ச்சி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. அவ்வாறு வெளியேறும் நிறுவனங்கள் பல,இந்தியாவிற்கு வருவதற்குதான் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்திய மூலப் பொருட்களை, சீனா அதிக அளவில் வாங்கி குவிப்பதற்கு இதுதான் காரணம்.