இலங்கைக்குத் தோள் கொடுக்கும் இந்தியாவுக்கு குவியும் பாராட்டுகள்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்குத் தோள் கொடுக்கும் இந்தியாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இலங்கையில் மாத்திரமன்றி, பாகிஸ்தான் நாட்டிலும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. இருநாடுகளிலும் இவ்வாறானபொருளாதார நெருக்கடியொன்று தோன்றுவதற்கு சீனா கடைப்பிடித்து வருகின்ற கடுமையான பொருளாதாரகொள்கைகளும் ஒருவிதத்தில்காரணமென்று சர்வதேசபொருளாதார நிபுணர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

உலக நாடுகளைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளுக்கு அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்ற ஒரு நாடாக சீனா உள்ளது. சீனா கடைப்பிடிக்கின்ற 'அதிக வட்டி கொள்கை' காரணமாகவே அந்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து நிற்கின்றது. அது ஒருபுறமிருக்க சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கிய பல நாடுகள் கடனை மீளச்செலுத்தும் விடயத்தில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றன. கூடுதல் வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால் அந்நாடுகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் சீனாவுக்குத் தேவை தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

பாகிஸ்தான், இலங்கை உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக வட்டியில் கடன் தொகையை வழங்கியுள்ளது. சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளில் வறிய நாடுகளும் அடங்குகின்றன. அதிகளவு வட்டிக்கு கடன் வாங்கிய இந்நாடுகள் வட்டியும் முதலுமாக பெருந்தொகை நிதியை செலுத்த வேண்டியிருப்பதால், தமது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றன. சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகள் எதிர்கொள்கின்ற முக்கியமான பிரச்சினையே இதுதான்.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மாத்திரமன்றி அரசியல் நிலைமையும் சரியானதாக இல்லை. பாகிஸ்தானை பொறுத்த வரை பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமராக குல்சார் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பாகிஸ்தானில் எவரது ஆட்சி வந்தாலும் சீனாவிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும் என்பதே உண்மை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், இலங்கைக்கு வழங்கிய கடனின் ஒரு பகுதியை சீனா மீளக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழங்கிய கடனின் ஒரு பகுதியை ஒருநாடு திருப்பிக் கேட்கின்ற போது சிக்கல்களே உருவாகும். கடனுக்கு ஈடாக ஏதேனுமொன்றை அந்நாடு கேட்பதற்கு இடமிருக்கின்றது.

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளுக்கு சீனா அதிக தொகை கடனை வழங்கியுள்ளது. முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கே சீனா அதிகமாக கடன் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளது.

'பெல்ட் அண்ட் ரோட்' திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கென கடனாக பல மில்லியன்களை சீனா அந்த நாடுகளுக்கு கடனாக கொடுப்பது வழக்கம். அந்த நாடுகள் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அந்த நாடுகளின் பல்வேறு வளங்களை சீனா மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் என்பது தெரிந்த விடயம். சீனாவின் இந்தச் செயலை debt trap policy என்று கூறுவர்.

சீனாவின் இவ்வாறான பொருளாதாரக் கொள்கையை வைத்துப் பார்க்கின்ற போது இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனாவும் ஒருவகையில் காரணமென சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி, அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி தற்போது பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து இலங்கைக்கு இந்தியா 2.4பில்லியன் ெடாலர் கொடுத்து உதவி உள்ளது. அத்தோடு 400மில்லியன் ெடாலர் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது.மேலும் 500மில்லியன் ெடாலர் கடனை பின்பு செலுத்தும்படி ஒத்திவைத்துள்ளது. அதாவது இலங்கைக்கு கொடுத்த கடனை இப்போது திருப்பிச் செலுத்த வேண்டாம் என்று இந்தியா பெருந்தன்மையாகக் கூறியுள்ளது. இன்னொரு பக்கம் 1பில்லியன் ெடாலருக்கு மருந்து, உணவு உட்பட பல்வேறு உதவிகளை வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கைக்கு அதிக கடன் கொடுத்து வந்த சீனா தற்போது கடனை மீளக் கேட்பதாக தகவல் வந்துள்ளது. சீனாவிடம் இலங்கை வாங்கிய மொத்தக் கடன் 8பில்லியன் ெடாலர். இலங்கையின் மொத்த கடனே 45பில்லியன்தான். இதில் ஆறில் ஒரு பங்கு சீனாவிடம் வாங்கப்பட்ட கடன் ஆகும். இவையெல்லாம் ெடாலரில் வாங்கப்பட்ட கடன். இவற்றில் ெடாலராக மட்டும் 6பில்லியன் ெடாலரை சீனாவிற்கு இலங்கை கொடுக்க வேண்டும். அத்தோடு தங்கநகை பத்திரமாக 1பில்லியன் ெடாலரை கொடுக்க வேண்டும்.

இந்தியாவைப் போல சீனா "இந்தக் கடனை பின்பு செலுத்துங்கள்" என்று பெருந்தன்மை காட்டும் என்று எதிர்பார்க்கவே முடியாது. இந்த நிலையில் இந்தியாவின் பெருந்தன்மையை இலங்கை மக்களே தற்போது பாராட்டி வருகின்றனர்.

சீனாவிடம் இருந்து இலங்கை, பாகிஸ்தான் அதிகளவில் கடன் வாங்கியதும், சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசினால் உருவான ஊரடங்கும் இந்த 2நாடுகளையும் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானும் சீனாவிடம் இருந்து அதிகளவில் கடன்கள் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு சீன EXIM வங்கி, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 1.6சதவீத வட்டி வீதத்தில் 11பில்லியன் அமெரிக்க ெடாலரையும், சீனா -பாகிஸ்தானின் 'மின்கொரிடோர்' திட்டங்களுக்கு 5-6சதவீத வட்டி வீதத்தில் 15.5பில்லியன் ெடாலரையும் பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அனைத்துக் கடன்களும் அமெரிக்க ெடாலர் மதிப்பீட்டில் குறிப்பிடப்படுகின்றன. இது கடன் வாங்கும் நாடுகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாமென பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். தங்களது நாட்டு கரன்சிகளின் மதிப்பு குறையும்போது ெடாலருக்கு நிகரான மதிப்பு அதிகரிக்கும். இது சிக்கலை ஏற்படுத்தும்.

பாகிஸ்தானில் ஆண்டுக்கு சராசரியாக ஆறு சதவீதம் என்ற அளவில் அந்தநாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் இலங்கை கரன்சியின் மதிப்பும் குறைந்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் சீனா வழங்கிய கடன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால்தான் இருநாடுகளும் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன என ஒரு தரப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க, இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில் மூத்த சகோதராக இருந்து இலங்கைக்கு உதவும் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

24மணி நேரத்தில் 36,000மெட்ரிக் தொன் பெட்ரோல், 40,000மெட்ரிக் தொன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளது என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500மில்லியன் அமெரிக்க ெடாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் இந்தியா சார்பில் இலங்கைக்கு 5வது முறையாக எரிபொருள் உதவி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் உதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும், முன்னாள் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, அதிரடி தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சனத் ஜெயசூர்யா குறிப்பிடுகையில் "மூத்த சகோதரராக இந்தியா அண்டை நாடாக உள்ள நமது நாட்டுக்கு உதவி வருகிறது. இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறோம். இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியேற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு நெருக்கடி வேளையில் கைகொடுத்து உதவுகின்ற இந்தியாவின் நட்புறவுக்கு இலங்கையில் பலதரப்பட்ட மக்களும் தற்போது பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சாரங்கன்

Comments