![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/04/10/a13.jpg?itok=HY_LUd7G)
நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண நிலைமையைமுடிவுக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தின்ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது மற்றும்மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமானபொருட்கள், சேவைகளின் விநியோகத்தை இயல்புநிலைக்குக் கொண்டு வருவது ஆகிய இரட்டை சவால்களுக்குஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதலைமையிலான அரசாங்கம் தற்போது முகங்கொடுத்துள்ளது.
இந்தச் சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுத்து நாட்டில் மீண்டும் இயல்புநிலையை கொண்டு வருவது மிகவும் அவசியமாகும். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதன் அடிப்படையிலேயே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
எதிரணியின் தூண்டுதல்களின் பேரில் நாட்டில் ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துவதாலோ, வன்முறைகளை நிகழ்த்துவதாலோ இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
முதலாவதாக, இலங்கை அரசியலமைப்பில் இடைக்கால ஜனாதிபதித் தேர்தலுக்கான எந்த ஏற்பாடும் இல்லை. மற்றைய விடயம், 2024ஒக்டோபர்-நவம்பர் மாதங்களிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லலாம். அதற்கிடையில் எதிரணி கூறுவதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்த வழியில்லை. எதிரணியின் கூற்றுக்கேற்ப அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது.
எவ்வாறாயினும், பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சபை வாக்களித்தால் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். இருந்தபோதும் பொருளாதார நெருக்கடி, எரிசக்தி பற்றாக்குறை என்பன காரணமாக தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது.
பாரிய நிதிப் பற்றாக்குறை காரணமாக நாட்டில் தற்போதைய சூழ்நிலை தேர்தலை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என்று பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தெளிவாகக் கூறியுள்ளன. ஒரு தேசிய தேர்தலுக்கு பொதுவாக ரூபா 800மில்லியன் செலவாகும்.டொலர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தலொன்றுக்குச் செல்வது பொருத்தமானதாகவும் இருக்காது.
இந்த வார ஆரம்பத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 42பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சுயேச்சையாக செயற்படப் போவதாக அறிவித்தனர். எவ்வாறாயினும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தாலும், தனிப்பெரும்பான்மையுடனேயே காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தமக்குப் பலம் இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். முன்னர் இருந்த அமைச்சரவை பதவி விலகி, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் விரும்பினால் 113பேரின் ஆதரவைக் காண்பித்தால் அவர்களுக்கு அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பளிப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் எவரும் இதுவரை முன்வரவில்லை. எதிரணி இன்னும் தயங்குகின்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ள மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து அரசியல் ஆதரவு நிலையை மதிப்பிட இயலாது.
இவ்வாறான நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றன. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், பாராளுமன்றத்தில் உரையாற்றிய உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதைய பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கருத்துகளை முன்வைக்கவில்லை என்பது பொதுமக்களின் மனக்குறையாக உள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் சபையில் விடுத்த அறிவிப்பிலும் கவலையைத் தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் தனது அறிவிப்பில், 'பொருளாதார நெருக்கடி குறித்து நடத்திய விவாதத்தில் கருத்துகளைத் தெரிவித்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். இருந்தபோதும் இந்த விவாதத்தில் தற்போதை நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பது தொடர்பில் சாதகமான கருத்துகளோ அல்லது தீர்வுகளோ முன்வைக்கப்படாமை கவலைக்குரியதாகும். விவாதத்தை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கும் போது அதனைக் குழப்பியமை, இரண்டு தடவைகள் சபையை ஒத்திவைக்க நேர்ந்தமை தற்போதைய சூழலில் இடம்பெறக் கூடாத நிகழ்வுகள் என நான் பார்க்கின்றேன்.
ஊடகங்களில் பிரசாரம் வழங்கப்படாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. சபை இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என நான் கருதுகின்றேன். நாம் சகலரும் கட்சி பேதங்கள் இன்றி அரசியல்குறிக்கோள்களைப் பின்தள்ளி வைத்து விட்டு இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன், சகல உறுப்பினர்களும் சபையில் வழமை போன்று அரசியல் குறித்த பிரச்சினையை முன்வைத்தமை கவலையளிக்கிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்தி, இன்றையதினம் இதனை அனைவரும் மனத்தில் கொண்டு விவாதத்தின் இறுதியில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டமொன்றை முன்வைக்கும் வகையில் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுஒருபுறமிருக்க, இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு விடுத்த அழைப்பையோ அல்லது அரசாங்கத்தைப் பொறுப்பெடுக்குமாறு விடுத்த அழைப்பையோ ஏற்றுக் கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி போன்ற எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை.
அது மாத்திரமன்றி தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான யோசனைகளையும் அவர்கள் முன்வைத்திருக்கவில்லை. இந்த விடயம் அரசியல்வாதிகள் மத்தியில் மாத்திரமன்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடியும்.
இதேவேளை, பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் தலவாக்கலை பகுதியில் அரசியல் கூட்டத்தை நடத்தியிருந்தது.
பொதுமக்கள் தமது பிரச்சினைகளையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துவதற்கு தாமாக முன்வந்த நிலையில், இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதனை அரசியல் கூட்டமாக அவர்கள் மாற்றியிருந்தனர். ஆர்ப்பாட்டம் என்பது வீதியில் அல்லது பொதுவான இடத்தில் நடத்தபடுவதே வழமையாக இருக்கும் நிலையில், மைதானமொன்றில் இதனை நடத்தியமை குறித்து ‘ஒரு நாள் சம்பளத்தைக் கைவிட்டு உண்மையான நோக்கத்தில் போராட்டத்துக்கு வந்தவர்கள்’ அதிருப்தியுடன் தெரிவித்தனர். அரசியல்வாதிகள் தம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர். இவ்வாறான நிலைமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.
பி.ஹர்ஷன்