பனைசார் உற்பத்திகளை எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகப்படுத்துவோம் | தினகரன் வாரமஞ்சரி

பனைசார் உற்பத்திகளை எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகப்படுத்துவோம்

மேரி உதயகுமாரி பற்றிக்

தற்போது  பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை அதிகமாகக் காணப்படும் போதிலும், அவை  ஒருவகையில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு பயப்பவையே. ஆனால் பனைசார்  மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கைப்பணிப் பொருட்கள் என்றைக்கும்  மனித ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பவையாக காணப்படுகின்றன என, பனைசார்  கைப்பணி போதனாசிரியர் திருமதி மேரி உதயகுமாரி பற்றிக் தெரிவித்துள்ளார். 

பழந்தமிழர்  வாழ்வில் கற்பக விருட்சமாகக் கொள்ளப்படும் பனைமரத்தின் மூலப்பொருட்களைக்  கொண்டு தயாரிக்கப்படும் கைப்பணிப் பொருட்களினால் கிடைக்கும் நன்மைகளோ  ஏராளமானவை, ஆரோக்கியமானவை, இயற்கையானவை. பனையின் மூலப்பொருட்கள் தேக  ஆரோக்கியத்திற்கு ஊட்டத்தை அளிப்பது, குளிர்ச்சி தருவது, வெப்பத்தை  தணிப்பது என்று பனையின் பெருமைகளை அவர் அடுக்கிக்கொண்டே போகின்றார்.

அத்துடன்,  பிளாஸ்டிக் பொருட்கள் பழுதடையும் பட்சத்தில் சூழல் மாசடையும் நிலை  காணப்படுகின்றது. ஆனால், பனைசார் கைப்பணிப் பொருட்கள் பழுதடையும்  பட்சத்தில் அவை நிலத்திற்கு உரமாக மாறுவதாகவும் அவர் கூறுகின்றார்.

மட்டக்களப்பு,  தாழங்குடாக் கிராமத்தைச் சேர்ந்தவரான திருமதி மேரி உதயகுமாரி பற்றிக்,  பெற்றோருடன் இருந்த காலகட்டத்தில் குடும்ப வறுமை காரணமாக, தனது க.பொ.த.  உயர்தரக் கல்வியை இடைநடுவில் கைவிட்டதுடன், தொழில் வாய்ப்பை  நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அவரது 19ஆவது வயதில்  பனைசார் கைப்பணி உற்பத்திகளை பழகுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அப்பனைசார்  கைப்பணி உற்பத்திகளை பழகி, தனது வாழ்வாதாரத்திலும் தொழிலிலும் முன்னேறிய  விதம் பற்றி அவர் தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

1989இல்  பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில், பனைசார் கைப்பணி வேலை தொடர்பான 6  மாத இலவச பயிற்சிநெறி தாழங்குடாவில் 20பெண்களுக்கு வழங்கப்பட்டதுடன்,  அதில் நானும் ஒருவராக இணைந்துகொண்டேன். இப்பயிற்சியினால் பனைசார்  கைப்பணிகளை தயாரிக்கத் தொடங்கியதுடன், அதன் மூலம் வருமானம் ஈட்டி, எனது  பெற்றோருக்கு பண ஒத்தாசை புரிந்தேன். 

பின்னர் திருமண  பந்தத்தில் இணைந்த நான், பனைசார் கைப்பணி வேலையை கைவிடாது தொடர்ந்தேபனைசார் கைப்பணி உற்பத்திகளை தயாரிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்ற நான்,  அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் ஏனைய பெண்களுக்கு பனைசார் கைப்பணி  வேலையை பழகத் தொடங்கினேன்.

இவ்வாறிருக்கையில், கடந்த1994ஆம் ஆண்டில்  பனைசார் கைப்பணி போதனாசிரியராக பனை அபிவிருத்திச் சபையால் நான் தெரிவு  செய்யப்பட்டேன். இந்நிலையில் நான் நிரந்தர வருமானத்தை ஈட்டத் தொடங்கினேன்.

மேலும்,  கடந்த 2015ஆம் ஆண்டில் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, பண்டாரியாவெளி, கடுக்காமுனை, வாள்கட்டு ஆகிய  பகுதிகளில் பனைசார் கைப்பணி வேலை தொடர்பான பயிற்சி நிலையங்கள்  அமைக்கப்பட்டதுடன், அந்நிலையங்களில் போதனாசிரியராக கடமையாற்றும் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது என்கிறார் அவர்.

கடுக்காமுனை பயிற்சி நிலையத்தில்  பனைசார் கைப்பணி உற்பத்திகள் அதிகளவாக காணப்படுவதால், கடந்த 2021ஆம் ஆண்டு  அப்பயிற்சி நிலையமானது சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ்  தெரிவுசெய்யப்பட்டது. தற்போது அந்நிலையத்தில் 120பெண்கள் மாதமொன்றுக்கு  சுமார் 200,000ரூபாய் பெறுமதியான பனைசார் கைப்பணிப் பொருட்களை தயாரிக்கின்றார்கள்.பனைசார்  கைப்பணி உற்பத்திகளுக்கு கேள்வி அதிகம் இருப்பதுடன், உள்ளுர் மற்றும்  வெளியூர்வாசிகள் விரும்பி வாங்குகின்றார்கள். அனைத்து வகையான பிளாஸ்டிக்  பொருட்களுக்கும் ஈடிணையாக பனைசார் கைப்பணிகளை நவீனமுறையில் நாம்  தயாரிக்கின்றோம். பெட்டி, கடகம், பாய், மூடுபெட்டி, சுளகு, இடியப்பத்தட்டு,  தொப்பி, பூச்செண்டு, உணவுப்பெட்டி, கூடை உள்ளிட்ட ஏராளமான கைப்பணிப் பொருட்களை நாம்  தயாரிக்கின்றோம் என்கிறார் அவர்.

தங்களது குடும்ப  வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் சிரமப்பட்ட பெண்களே, இப்பனைசார் கைப்பணி  வேலையை என்னிடம் பழக வந்தார்கள். தற்போது அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தில்  ஓரளவேனும் முன்னேறியுள்ளார்கள்.

பெண்களாகிய நாம் என்னதான் படித்து  உத்தியோகத்திற்கு சென்றாலும், ஏதோவொரு கைத்தொழிலை பழகியிருக்க வேண்டும்.  அவ்வகையில் இயற்கையோடிணைந்த பனைசார் கைப்பணிகளை நாம் பழகி, அவற்றின்  தாற்பாரியங்களை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்வோம்என்கிறார் திருமதிமேரி உதயகுமாரி பற்றிக்.

த.விஜயன் 

கிழக்கு  மாகாணத்தில் 4,000இற்கும் மேற்பட்ட பெண்கள், பனைசார் கைப்பணி வேலையை  தங்களது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளதாக, பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான முகாமையாளர் த.விஜயன்  தெரிவித்துள்ளார்.

பனைசார் கைப்பணி வேலையில்,  மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் சுமார் 3,500பெண்கள்; ஈடுபடுகின்றமை  தெரியவந்துள்ளது. இதில் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்களே அதிகமெனவும் அவர்  தெரிவித்துள்ளார்.  பனைசார் கைப்பணியில் மட்டக்களப்பில் சுமார் 1,500பெண்களும் அம்பாறையில் சுமார் 500பெண்களும் ஈடுபடுகின்றார்கள்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் பனைவளம் மிக்க மாகாணங்களாகக் காணப்படும் நிலையில்,  வடமாகாணமானது பனைசார் உணவு உற்பத்தியில் முன்னணியில் திகழ்வதுடன், கிழக்கு  மாகாணமானது பனைசார் கைப்பணி வேலையில் முன்னணியில் திகழ்கின்றது.

வடமாகாணத்தில்  பனைசார் உணவு உற்பத்திகள், பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில்  அமைக்கப்பட்ட சங்கங்கள் மூலம் முன்னெடுக்கப்படுவதுடன், அங்கு ஆண், பெண் என  இருபாலாரும் பனைசார் உணவு உற்பத்திகளில் ஈடுபடுகின்றார்கள். இப்பனைசார்  உணவு உற்பத்திகளினால் வடமாகாணத்தில் அதிகளவு வருமானமும் ஈட்டப்படுகின்றது.

ஆனால்,  கிழக்கு மாகாணத்தில்பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டிலான சங்கங்கள்  இன்மையால், பனைசார் உணவு உற்பத்திகள் மிகக் குறைவாக காணப்படுகின்றன.  அவ்வகையில் இம்மாகாணத்தில் பனைசார் உணவு உற்பத்திகளை அதிகரிப்பதற்கான  வேலைத்திட்டங்கள் எமது சபையால் இவ்வருடத்தில் (2022)  முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், பனைசார் உணவு உற்பத்திகள் மற்றும்  பனைசார் கைப்பணி வேலைகளை வலுவூட்டுவதற்காக கிழக்கு மாகாணத்தில் பனை  அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் சங்கங்களையும் நிறுவவுள்ளோம். மேலும்,  சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ், பனைசார் உற்பத்திகளை பெருக்குவதற்காக  மட்டக்களப்பில்; பட்டிப்பளை மற்றும் மண்முனை வடக்கு பிரதேசசெயலகப்  பிரிவுகளும் அம்பாறையில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவும் தெரிவு  செய்யப்பட்டுள்ளன.

இதற்குரிய பணிகளில் ஈடுபடுவதற்காக  மண்முனை வடக்கில்; 127பெண்களும் பட்டிப்பளையில் 120பெண்களும்;  நாவிதன்வெளியில்; 300பெண்களும்தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு  மாகாணத்தின் மட்டக்களப்பிலிருந்தே அதிகளவான பனைசார் கைப்பணி பொருட்கள்  ஏனைய மாவட்டங்களுக்கு பனை அபிவிருத்தி சபையால் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கிழக்கு  மாகாணத்தில் பனைசார் உற்பத்திகளில் ஈடுபடும் பெண்களுக்காக பனை அபிவிருத்தி  சபையால் 6மாத பயிற்சி வழங்கப்படுவதுடன், அவர்களின் உற்பத்திகளுக்கு சந்தை  வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்கின்றோம். பனை அபிவிருத்தி சபையின் ஊழியர்கள்,  பனைசார் உற்பத்திகளில் ஈடுபடும் பெண்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின்  உற்பத்திகளை கொள்வனவு செய்வதுடன், அவர்களுக்கான கொடுப்பனவை அவர்களின்  வங்கிக் கணக்கில் வைப்பிலிடுகின்றார்கள்.

மேலும்,  கிழக்கு மாகாணத்தில் பனை வளத்தை அதிகரிப்பதற்காக பனை விதை நடுகை  வேலைத்திட்டமும்; எமது சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பனை  வளம் குறைவாகவுள்ள மாவட்டங்களிலும் பனை வளத்தை அபிவிருத்தி செய்ய  எண்ணியுள்ள மாவட்டங்களிலும் பனை விதைகளை நடுகின்றோம். கடந்த வருடத்தில்;  மட்டக்களப்பில் 195,000பனை விதைகளையும் அம்பாறையில் 50,000பனை  விதைகளையும் நடுகை செய்துள்ளோம்.

இதனைத் தவிர,  இவ்வருடத்தில் பனங்கன்றுகளை நடுவதற்கு பனை அபிவிருத்தி சபை  உத்தேசித்துள்ளது. அவ்வகையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் தோறும்  20,000பனங்கன்றுகளை நடுவதற்கு உத்தேசித்துள்ளோம். இதற்காக  பயனாளிகளிடமிருந்து தலா பனங்கன்று 40ரூபாய்க்கு கொள்வனவு செய்யவுள்ளோம்.

இலங்கையில்  பனைசார் உற்பத்திகளுக்கு அதிகளவான கேள்வி இருக்கின்றது. ஆனால் அதன்  உற்பத்திகள் போதாமல்; உள்ளன. உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்பதே எனது  எதிர்பார்ப்பாகும் என்கிறார் அவர்.

பனைசார் உணவு  உற்பத்தி மற்றும் கைப்பணி வேலைகளை பழகி அத்தொழில்களில்; ஈடுபடுவதற்கு  பெண்கள் முன்வர வேண்டுமென்று அழைப்பு விடுக்கின்றேன். பெண்கள் தங்களது  வீடுகளிலிருந்தவாறே பனைசார் உணவு உற்பத்திகள் மற்றும் கைப்பணி வேலைகளில்  ஈடுபட்டு வருமானத்தை ஈட்ட முடியும் என்கிறார் அவர்.

பனைசார்  உற்பத்திகளில் ஈடுபட விரும்பும் பெண்கள், பனை அபிவிருத்தி சபையுடன்  தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கான வசதிகளை எமது சபை செய்து  கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.சுகந்தினி

Comments