![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/04/10/a35.jpg?itok=Kmtdtyot)
நண்பர் பேராசிரியர் சந்திரசேகரனின் மறைவு மலையின் பாரம் போல மனதைத் அழுத்துகிறது. இன்று காலையில் குமரன் போன் பண்ணி இச்செய்தி கூறினார். மரணம் நிரந்தர உண்மை. அதிலும் முதுமை மரணத்தின் வாசற்படி என்பதும் நாம் அறிவோம். எனினும் மிக நெருக்கமானவர்களின் மரணம் மனதை ஒரு தடவை ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறதே ஏன்?
நானும் அவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முன் பின்னாகப் பயின்றவர்கள். 1960களின் முற்பகுதி அது இற்றைக்கு 60வருடங்களுக்கு முந்திய கதை அது நான் அவருக்கு இரண்டு வகுப்புகளுக்கு மூத்தவன். எனக்கு மலையகம் பற்றிய அறிமுகமும் மலையக மாணவருடனான அறிமுகம் கிடைத்தது பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற பின்தான் 1961 இல் நான் அங்கு செல்கிறேன் என்னுடன் மலையக மாணவர்களான காலம் சென்ற சின்னத்தம்பி, தம்பையா, றாகல சந்திரன் ரங்கன், லலிதா ஹம்சவல்லி, முத்துலக்சுமி ஆகியோர் உடன் கற்றனர். இவர்கள் மலையக மாணவர்கள் அதன்பின்னர் வந்து க.பி முருகேசு, சண்முகம் போன்ற மலையக மாணவர் வருகின்றனர்.
மூன்றாவது தொகுதியாக அதன்பின் வந்த மலையக மாணவர்களுள் ஒருவர்தான் நமது இந்தச் சந்திரசேகரன்.
அவரும் சபா ஜெயராஜாவும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு சாலை மாணாக்கர் இருவரும் ஒரு அறையில் வாழ்ந்த தோழர்கள் சந்திரசேகரனின் கலகலப்பும் அழகாக அவர் பாடும் சினிமாப்பாடல்களும் எவருடனும் உடன் நெருக்கமாக இணைந்து விடும் பாங்கும் அவரை மாணவர் மத்தியில் பிரபல்யமாக்கின.
சந்திரசேகரன் இருக்கும் இடத்தில் ஒரு மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்திருக்கும்.
பெரிய பெரிய கூட்டங்களின் போது சபையிலிருந்து திடீரெனப் பீறிட்டு உரத்த தனிகுரலில் கேட்கும் அவர் கொமன்ட் சபை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தும், ஆனால் அவர் கிண்டல்கள் நாகரீகமான புத்திசாலித்தனமான கிண்டல்கள். அவை யாரையும் மனம் நோகப்பண்ணாது , அது அவரது பாணி.
இருவரும் பேராதானைப் பல்கலைக்க்ழகத்தில் மாக்ஸிஸ சிந்தனைகளினால் கவரப்பட்டோம். இன்னும் பலரும் அந்தப் படிப்பு வட்டத்தில் இணைந்திருந்தனர் மாக்ஸிஸ நூல்களை வாசித்தல், வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளல் கருத்துப் பரிமாறல் செயற்படுதல் என பல்கலைக்கழக மாணவ வாழ்வு கழிந்தது’. சபா ஜெயராஜா இடதுசாரி நெறியின் பால் ஈர்க்கப்பட சந்திரசேகரன் எனும் அவரது இந்த அறைத் தோழர்களாயிருந்தார் என நினைக்கிறேன்.
அக்காலத்தில் மாணவரின் அதிகமான பொழுதுகள் நூல் நிலையத்திலும் விரிவுரை மண்டபங்களிலும் கழியும் அப்படி அமைக்கப்படிருந்தது பேராதனைப் பல்கலைக் கழக வளாகமும் சூழலும் , அன்றைய எமது விரிவுரையாளர்களும் நாம் கண்முன் கண்ட நம் முன் நடமாடிய அத்தனை விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மிக மிக ஆழமானவர்கள் தத்தம் துறையில் துறைபோனவர்கள்.
அவர்கள் அதிகம் காட்சி தருவது விரிவுரை மண்டபங்களிலும் பல்கலைக்க்ழக நூல் நிலையத்திலும் தான் அவர்களைப் பார்த்தே அன்றைய தலைமுறை வளர்ந்தது சந்திரசேகரனும் இவ்வாறு அங்கு வளர்ந்தார்.
நூல் நிலையத்துள் அவரும் கிடந்தார் அவர் பதுளையில் படித்து பின்னர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரில் படித்து அங்கிருந்து பல்கலைக்க்ழகம் வந்தவர் இதனால் அவர் பல பிரதேசப் பண்பாடுகளுக்கும் பழக்கப்பட்டிருந்தார்
அன்றைய பல்கலைக்க்ழகக் கல்வி அவரைப் புடமிட்டது.
அப்போது நான் பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தேன் இராவணேசன் நாடகம் முக்கியமாகப் பேசப்பட்ட காலம் அது. நாடகம் பார்த்து விட்டு யூனியரான சந்திரசேகரம் தரும் உற்சாக வார்த்தைகள் எமக்கு மகிழ்ச்சிதரும் அவரது விமர்சனங்கள் சிந்திக்க வைக்கும்.
அவருள் ஒரு கலைஞன் இருந்தான் ஒரு பெரும் ரசிகன் இருந்தான்
சீனியர்ஸ் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர் அவர், பழகுவதற்கு இனியர் பண்பாளர். அறச்சீற்றம் மிக்கவர். அன்று மாணவர் மத்தியில் இடதுசாரிச் சிந்தனைகள் பிரபல்யமாகியிருந்தன. மாக்ஸிசத்தில் ஆழ்ந்த புலமையுள்ள பல் விரிவுரையாளர்கள் அங்கு இருந்தனர் .
அன்றைய இளைஞரான சந்திரசேகரம் மாக்ஸிஸ சிந்தனைகளால் கவரப்பட்டிருந்தமையினால் தொழிலாளர் வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் என எப்போதும் அவர் பேசுவார்.
ஒரு நாள் இரவு நேரம் நூல் நிலையம் மூடியபின் நூல் நிலையத்திலிருந்து இன்னோர் சுப்பர் சீனியர் நண்பர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொன்டிருந்தார் அவர் சந்திரசேகரத்தை நன்கு அறிந்தவர்
அன்று சந்திரசேகரனின் Batch மாணவர் குழாம் ஒரு பார்ட்டி வைத்திருந்தது,பார்ட்டி என்றால் தெரியும்தானே
பார்ட்டி முடிய சிலர் நிலை தடுமாறும் நிலை வரை சென்று விட்டனர். இந்த நிலை தடுமாற்றம் அங்கு பெரிதாக எடுக்கப்படுவதில்லை காரணம் அது சகஜம் சீனியர் நண்பருக்கு பார்ட்டி நடந்தது எல்லாம் தெரியாது.
அந்த நண்பர் pillaring section னுக்கூடாக அதாவது தூண்கள் தொகுதிக்கூடாக வருகையில் சந்திரசேகரன் எனும் இம்மாணவன் ஒரு தூணில் முட்டிகொண்டு நின்றான் சந்திர சேகரத்திற்கு என்னவோ ஏதோ எனப் பதறிப்போன வந்த சீனியர் நண்பர் சந்திரசேகரன் அருகில் சென்று அவன் முதுகில் கைவைத்து சந்திரசேகரம் என்ன விடயம் என்ன நடந்தது என்றிருக்கிறார்.
தூணோடு முட்டிகொண்டு நின்ற சந்திரசேகரம் தலையை நிமிர்த்தாமல் தனக்குள் தொழிலாளி வர்க்கம் இப்போது நல்ல நிலையில் இல்லை என்றிருக்கிறார்.
அக்காலகட்டத்தில் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்வு நிலையும் அதுதான் தன்நிலையையும் அன்றைய தொழிலாளி வர்க்கத்தையும் உள்ளடக்கி நானும் தொழிலாள வர்க்கமும் நல்ல நிலையில் இல்லை எனக்கூறிய இந்த வார்த்தை அவரின் அதி புத்தி சாலித்தனத்திற்கு ஓர் உதாரணம் என அந்த நண்பர் அன்று சொன்னார்.
சந்தர்ப்பம் அறிந்து witty யாகபேசும் இந்த ஆற்றல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அந்த நண்பரும் இன்று வெளிநாட்டுப்பல்கலைக் கழகமொன்றின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சந்திரசேகரனின் இந்த அங்கத வார்த்தை அன்று தோழர்களிடையே வெகு பிரபல்யமாகிவிட்டது எப்போதும் நான் அவரைக் கண்டதும் அவரிடம் தொழிலாளவர்க்கம் என்ன நிலையிலுள்ளது? என்று இன்று வரை கேட்பதும் அவர் அட்டகாசமாகச் சிரிப்பதும் நான் கேட்க மறந்தாலும் அவரே அதனைச் சொல்லி தொழிலாள வர்க்கம் இப்போது நல்ல நிலையில் இருகிறது என்று கூறி அட்டகாசமாகச் சிரிப்பதும் காதில் கேட்டபடி இருக்கிறது.
நான் பல்கலைக்கழகம் விட்டுப் புறப்பட்டதும் ஆசிரியராகிவிடுகிறேன் அவர் அங்கும் இங்கும் பல பணிகள் புரிந்து இறுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கல்வித் துறை உதவி விரிவுரையாளரானார், கல்வி டிப்ளோமா செய்யும் பட்டதாரி ஆசிரியர்கள் அவரின் கீழ் பயிலும் சந்தர்ப்பம் வாய்க்கிறது
தொழில் நிமித்தம் நானும் டிப்ளோமா செய்ய வேண்டும், கொழும்புக்குத் தெரிபடுகிறேன். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வகுப்புக்குப் போகிறேன் வகுப்பு எடுக்க ஆசிரியராக வருகிறார் இளைஞர் சந்திரசேகரர்,
எங்கள் வகுப்பில் இருந்தோரில் பலர் வயது போன ஆசிரியர்கள் இப்போது அவர்களில் மிக அதிகமானோர் இறந்தும் விட்டனர்.
வகுப்புக்கு வந்த சந்திரசேகரம் என்னைப் பார்க்கிறார் சடாரென வந்த வழியே சென்று வாசலில் நின்று என்னைக் காட்டி என் பெயரைக் குறிப்பிட்டு இவர் எமக்கெல்லாம் சீனியர் இவருக்கு நான் படிப்பிப்பதா என நாடகத் தன்மையுடன் கேட்கிறார்.
உடனே அவர் என்னைக்கண்டு ஓடியதும் ஓடி நின்று கூறியதும் அவரது நகைச்சுவைபாணி நினைக்க நினைக்க அவர் பகிடிகள் செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகம் வருகின்றன. ஒரு நாள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்குகின்றார்.
டாகஸி கிடைக்கவில்லை ஒர் ஆட்டோ அமர்த்திக்கொள்கிறார் பேரம் பேசியதில் அவ்ன் 350ரூபா என்கிறான்.
தொகையைக் குறைக்க அவ்ர் ஆட்டோக்காரனிடம் உரையாடுகிறார்.
அவனோ தன் கட்டணத்தில் கறாராக இருக்கிறான், உரையாடுவதில் பலன் இல்லை எனக்கண்டு உரையாடலை நிறுத்திகொள்கிறார், வரும்போது வழமைபோல அவர் சத்தமிட்டுப் பாடிக்கொண்டே வருகிறார். அவ்ருக்குக் குசி என்றால் பாட ஆரம்பித்து விடுவார்.
அவர் சேர வேண்டிய இடம் வந்து விட்டது. ஆட்டோவிலிருந்து இறங்கியதும் அவனுக்கு 400 ரூபா கொடுக்கிறார், அவனோ 50ரூபாவைத் திருப்பித் தருகிறான் அவர் மீதி உனக்குத்தான் என் பாட்டைக் கேட்டுகொண்டு வந்தமைக்கு எனக் கொடுக்கிறார் அவனோ இந்த விந்தை மனிதனைப் ஆச்சரியத்துடன் பார்க்கிறான் இந்நிகழ்வை என்னிடம் அவர் கூறி நமக்கு 50ரூபா மௌனகுரு. ஆனால் அவனுக்கோ அது பெரும் ஆச்சரிய மகிழ்ச்சி என்று கூறுகிறார். இதுதான் சந்திரசேகரம்
பகிடியான சிரிப்பு விழைவிக்கும் ஒன்றாக இந்நிகழ்வு தோன்றினும் இந்தப் பகிடிக்குப் பின்னாலுள்ள தத்துவம் அதன் பின்னாலுள்ள மனிதபிமானம் நினைந்து மகிழ்தற்குரியது.
ஒருவரின் வார்த்தைகளும்செயல்கலும்தானே அவரை எமக்கு காட்டுகின்றன.
அவர் பின்னால் பீடாதிபதியானதும் கல்விசார் நிலையங்களில் உயர் நிலையிலிருந்ததும் என அவர் உயர்ச்சிகள் அதிகம் அவற்றை எழுதப்பலர் உண்டு.
ஆனால் அவரது பட்டம் பதவி உயர்ச்சிகளுக்கும் அதற்கப்பால் அவர் வாழ்வும் அவர் வார்த்தைகளும்தானே அவரது உண்மையான உளத்தை எமக்குக் காட்டுகின்றன, போலித்தனம் சிறிதும் இல்லாதவர் அவர் எதனையும் புற நிலை நின்று பார்த்து ஒரு கிண்டல் அடிப்பது அதுவும் நோகாமல் கிண்டல் அடிப்பது அவரது பாணி இத்தகைய அனுபவங்கள் பலருக்குக் கிடைத்திருக்கக்கூடும்.
அவை எழுதப்படுகையில் அவரது முழுக் குணாம்சத்தையும் தரிசிக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.
நண்பரே
சென்று வாருங்கள்
வரிசையில் நிற்போர் ஒவ்வொருவராகப் போகிறார்கள்
நீங்களும் போய் விட்டீர்கள் அதுதானே நியதியும் கூட.
உங்கள் நண்பர் மௌனகுரு