முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்! | தினகரன் வாரமஞ்சரி

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்!

வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்ஒன்றாக காணப்பட்டாலும் கல்வியிலும்பொருளாதாரத்திலும் வளர்சிகண்டு வரும்மாவட்டமாக முல்லைத்தீவு  காணப்படுகின்றது.

இதேவேளை இலங்கையின் வறுமையின் இரண்டாவது இடத்தில் உள்ள மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது.

இவ்வாறான மாவட்டத்தில் போரின் பின்னரான பின் விளைவுகள் கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்துள்ளன.

மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின் படி (அண்ணளவாக) ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரிந்துவாழும் குடும்பங்களும், இரண்டாயிரத்து ஐநூறுக்கும்  மேற்பட்ட அங்கவீனர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த மக்கள் 2009ஆம் ஆண்டு போரின் பின்னர் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட பின்னரோ நவீன தொலைபேசிகள்,தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் பாவனைக்குள் சென்றார்கள் என்பது உண்மை.

இவ்வாறான நிலையில் தற்போது பதின்ம பருவத்தில் வாழ்கின்ற சிறுவர்கள், சிறுமிகள் பாலியல் ரீதியாக மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்பது அண்மைய நாட்களில் கிடைக்கப்பெற்ற சம்பவங்கள் ஊடாக அறிய முடிகிறது.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண கொரோனா நிலையினால் வீடுகளில் இருந்து மாணவர்கள் இணையவழி கல்வியினை மேற்கொண்டு சிறந்த பெறுபேற்றினையும் எடுத்துள்ளார்கள். அவ்வாறு இணைய வழியினை தவறாக பயன்படுத்திய சிலர் பாதை மாறி சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்களைக் காணவில்லை என்றும் சிறுமிகள் துஷ்பிரயோகம் என்றும் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றமை கவலையளிக்கிறது.

இவ்வாறுதான் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வசித்துவரும் இரண்டு பதின்ம வயது சிறுமிகள் கடந்த 16.03.2022மாலை கல்வி கற்பதற்காக சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. புதுமாத்தளன் பகுதியினை சேர்ந்த 14மற்றும் 15வயதான இருவரும் காணாமல் போன நிலையில் 19.03.2022அன்று மீட்கப்பட்டுள்ளார்கள்.

இவ்விரு சிறுமிகளும் தந்தையினை இழந்து  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தவர்கள்.

கல்விக்காக வாங்கிக்கொடுத்த தொலைபேசியினை பயன்படுத்தி தவறான தொடர்புகளை வளர்த்துள்ள இவர்கள், மட்டக்களப்பு செங்கலடிப்பகுதி இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். வீட்டில் இவர்களுக்கு இருந்த முரண்பாடான நிலையினால் வீட்டினை விட்டு வெளியேறத் தூண்டிய மனம் மட்டக்களப்பு நண்பனை நோக்கி அழைத்துச் சென்றது.

நண்பன் தொலைபேசியில் அழைத்து வாங்கள் என்று சொன்னதும் இரண்டு சிறுமிகளும் எவருக்கும் சொல்லாமல் மாலைநேர கல்விக்காகச் செல்வதாகக் சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காடு ஒன்றில் போட்டுவிட்டு மட்டக்களப்பு நோக்கி பேருந்தில் ஏறி சென்றுள்ளார்கள்.

அங்கு சிறுமிகள் இருவரையும் கார் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்று ஒரு வீட்டில் விட்டிருக்கிறார்கள். அந்த வீட்டில் பெண் ஒருவர் வசித்துவந்துள்ளார். இருவரையும் அங்கு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்கள் பின்னர் இரவு வேளையில் அவர்களை முல்லைத்தீவு செல்வதற்காக யாழ்ப்பாணம் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் அதிகாலையில் வந்திறங்கிய சிறுமியர் கடை ஒன்றில் பொருட்களை  வாங்கியவேளை அங்கு நின்ற இளைஞர்கள் சிறுமிகளிடம் இந்த நேரத்தில் எங்கு போறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். வீடு போக விரும்பம் இல்லை எங்காவது போகப் போகின்றோம் தங்குவதற்கு இடம் இருந்தால் சொல்லுங்கள் என சிறுமிகள் பதில் சொன்னதும் இளைஞர்களும் தங்களுக்கு தெரிந்த வீடொன்றுக்கு அவர்களை அழைத்து சென்றுள்ளார்கள். அந்த வீடு யாழ் நகரப்பகுதியில் பெண் ஒருவர் வசித்துவந்த வீடு. அந்த வீட்டின் ஆண் போதைப்பொருள் வியாபாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்.

இந்நிலையில் அந்த வீட்டில் வைத்து இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மறுநாள் காலை முல்லைத்தீவு பேருந்தில் அவர்கள் ஏற்றிவிடப்பட்டுள்ளார்கள்.

இந்த இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 7பேர் முல்லைத்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த 27.03.2022அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான சம்பவங்களுக்கு யார் காரணம் என சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களின் சரியான அரவணைப்பு கண்காணிப்பு இல்லாத சிறுமியர் தவறான பாதைக்கு வலிந்து இழுக்கப்படுகின்றார்கள் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

சில பெற்றோர்களுக்கு தொலைபேசி தொடர்பில் சரியான புரிதல் கிடையாது. தொலைபேசியில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. இணையவழி கற்றலுக்காக அதிக விலைகொடுத்து தொலைபேசிகளை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் தமது பிள்ளைகள்  அவற்றை தவறாகவும் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்திருப்பதில்லை. இவ்வாறு பல சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.

இதனை விட மாணவர்கள் மத்தியில் போதைப் பாவனையும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் கஞ்சா, ஜஸ், போன்ற போதைப் பொருள் பாவனைக்கு ஆளாகி உள்ளனர். இவர்களின் பெற்றோர் நன்கு படித்த அரச உத்தியோகத்தில் இருப்பவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் சரியான புரிந்துணர்வு, கவனிப்பு, கண்காணிப்பு என்பன இல்லாத நிலையே இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைகின்றது சில பெற்றோர்கள் தனது மகன் என்ன செய்கின்றான் என்பதை அறியாதுள்ளனர்.

மொத்தத்தில் பெற்றோர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறையுடனும் கண்காணிப்புடனும் செயற்படவேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டி.ஆர். ​ேஹரத் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றமை பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டறியப்பட்டுள்ளது.  பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடும் வகையில் அது தொடர்பான விழிப்புணர்வினை பாடசாலைகள் தோறும் பொலிசார் எடுத்து வருகின்றனர். அதேவேளை வணிக நிலையங்களில் 18வயதுக்குக் குறைவானவர்களுக்கு புகைத்தல் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய எந்த பொருட்களையும் விற்பனை செய்யவேண்டாம் என ஒலிபொருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பு மாணவர்கள் பெற்றோருக்கு பொய்சொல்லிவிட்டு புதுமாத்தளன் கடற்கரைக்கு சென்று அங்கு போதைபொருள் பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு மாணவர்களை தவறாக வழிநடத்துபவர்கள் தொடர்பில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேசமயம் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அக்கறையுடனும், கண்காணிப்புடனும் செயற்படவேண்டும் பாடசாலை நேரம், அதன் பின்னர் மாலைநேர வகுப்பு, பின்னர் வீடு என மாணவர்கள் காணப்படுகின்றார்கள் பெற்றோர்களின் மெத்தனத்தால் இறுதியில் பொலிஸ் நிலையம், வைத்தியசாலை, நீதிமன்றமும் என்று அவர்கள் அலைய வேண்டியதாகிறது. செல்லவேண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை சரியாக கண்காணித்து வளர்த்தெடுக்கவேண்டும். பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளையும் வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்ப கருவி பயன்பாட்டு செயற்பாடுகளையும் அறிந்து உங்கள் பிள்ளைகளுடன் நல்ல நண்பராக பழகுங்கள். நல்லது எதுகெட்டது எது என்பதை வெளிப்படையாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.

முல்லைக் கீதன்

Comments