மெய்யான பிரச்சினையை உணரத் தயாராவது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

மெய்யான பிரச்சினையை உணரத் தயாராவது எப்போது?

அரசியற் கொந்தளிப்பு, பொருளாதார  நெருக்கடி என நாடு பெரும் பிரச்சினைச்  சூழலுக்குள் சிக்குண்டிருக்கிறது. பலரும் கருதுவதைப்போல இது இப்பொழுது – இந்த ஆட்சியில் – ஏற்பட்ட திடீர் நெருக்கடியல்ல. அல்லது இந்த நெருக்கடிக்கு ராஜபக்ஸவினர் மட்டும் காரணமும் அல்ல. ஆனால் இந்தத் தரப்புக்குக் கூடுதல் பொறுப்புண்டு. இவர்கள் முன்னரும் அதிகாரத்தில் இருந்தனர் என்பதோடு இப்பொழுதும் ஆட்சியில் இருக்கும் தரப்பாக உள்ளனர் என்பதால்  இந்தப் பொறுப்புக் கூடுதலாகச் சேருகிறது. இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தரப்பு என்பதே இங்கே கவனத்திற்குரியது. ஏனென்றால் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டியவர்கள் ஆட்சியில் இருப்பவர்களே. ஆகவே அவர்கள் மீதே கவனம் குவிகிறது. அதுவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  

கடந்த காலத் தவறுகள் என்பதைப் பட்டியலிட்டால் அதில் பல காரணங்கள் வந்து சேரும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமை, அதன் விளைவான 30ஆண்டுகாலப் போர், போரினால் ஏற்பட்ட மனித வள இழப்பு, பொருளாதார இழப்பு, இயற்கை வள இழப்பு போன்றவை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையில் ஏற்பட்ட தவறுகள், திறந்த பொருளாதாரக் கொள்கை, வரவு செலவுத்திட்டங்களில் தொடர்ந்த துண்டு விழும் தொகை, அதற்கு மேற்கொள்ளப்பட்ட தொடர் வெளிநாட்டுக் கடன்கள், ஊழல், அரசியல் நியமனங்கள், அளவுக்கதிகமான நிவாரணமளித்தல்களும் வரிச்சலுகைகளும் என பெரியதொரு பட்டியல் நீள்கிறது. 

இந்தத் தவறுகளில் கடந்த 40ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஐ.தே.க, சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்குக் கூடுதல் பங்குண்டு. அதேயளவுக்கு மக்களுக்கும் இதில் பொறுப்புண்டு. தெரிந்து கொண்டே தவறிழைக்கும் தரப்புகளாகிய இவற்றை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர். இதேயளவுக்கு அல்லது அதற்கும் கூடுதல் பொறுப்பு, இந்த நாட்டின் படித்த உயர் பதவிகளில் இருந்த – இருக்கின்ற புத்திஜீவகளுக்கும் உண்டு.

ஒரு நாட்டின் நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் அறிஞர்களே. அதற்காகத்தான் அவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகளும் சலுகைகளும் சிறப்பு ஏற்பாடுகளும் அளிக்கப்படுகின்றன. மேற்படிப்பு, வெளிநாட்டுக் கற்கை, வாகன இறக்குமதிக்கான வரிச்சலுகை எனப் பலவும் வழங்கப்படுவது இவர்கள் நாட்டுக்கு புத்திபூர்வமாக ஆற்றக்கூடிய பங்களிப்புகளுக்காகவே.

இப்படி உயர் வாய்ப்புகளையும் சலுகைகளையும் பெற்ற – பெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவுத்துறையினரும் அறிவுசார் அமைப்புகளும் இந்த நாட்டின் அரசியல் நெருக்கும் (இனப்பிரச்சினை உள்பட) பொருளாதார நெருக்கடிக்கும் ஆற்றிய – வழங்கிய – பங்களிப்பு என்ன) இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பற்றி விழுந்தடித்துக் கொண்டு வந்து பல்வேறு அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். பதிலாக பெறுமதியான ஆலோசனைகளை வைப்பதற்கு இன்னும் தயாரில்லை. அப்படி எதையாவது சொல்வதாக இருந்தாலும் ஐ.எம். எவ்வுக்குச் செல்லுங்கள், வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கான இலகு வழிகாட்டுதல்கள் என்ற மாதிரி பிழையான திசைகளைக் காட்டுவதாகவே இருக்கிறது.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அப்பால் இலங்கையில் நிலையான, உறுதிப்பாடுடைய அரசாங்கம் அமையக் கூடாது என்பதில் “அயலவர்கள்” மிகுந்த கரிசனையாக உள்ளனர். அவர்களுடைய மெகா  திட்டத்தின்படியே இன,மத முரண்களும் உள்நாட்டுப் போரும் தீவிரமடைந்தன. இனக்கலவரங்களை உருவாக்குவதிலும் இனமுரண்பாட்டை வளர்ப்பதிலும் போருக்குத் தூண்டுவதிலும் போரை நடத்தியதிலும் இந்த அயலவர்களுக்கிருந்த பங்கு பெரியது.

இப்பொழுது இன்னொரு வடிவத்தில் இதை வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர். கடந்த “நல்லாட்சி” அரசாங்கத்தை நான்கு ஆண்டுகளுக்குள் குலைத்தனர். இந்த அரசாங்கத்தை இரண்டாண்டுகளுக்குள் தடுமாற வைத்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின்படி ஸ்திரமற்ற இலங்கை ஒன்றே இருக்க வேண்டும். அந்தப் பலவீனமான இலங்கையில்தான் அவர்களால் நினைத்த எதனையும் செய்து கொள்ள முடியும். அதற்கமையவே காய்களை மிக நுட்பமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ராஜதந்திரப் பொறிக்குள் நீண்டகாலமாக இலங்கையர்கள் மடத்தனமாகச் சிக்கி விட்டனர். இதைக்குறித்து நம்முடைய தலைவர்களோ புத்திஜீவிகளோ அறிவுசார் அமைப்புகளோ அரசியல் ஆய்வாளர்களோ முன்னுணர்ந்து சொன்னதில்லை. அப்படி ஒருசில குரல்கள் அங்கங்கே எழுந்திருந்தாலும் அதை எவரும் செவிகொடுத்துக் கேட்டதில்லை.

கேட்கும் நிலையில் யாரும் இருந்ததும் இல்லை. ஏன் இப்பொழுது கூட எந்தச் சிறிய அறிவுரையிலிருந்து பெரிய விசயங்கள் வரையில் சொன்னாலும் அதைக் காது கொடுத்துக் கேட்பதற்கு யாருமே – எந்தத் தரப்புமே இல்லை.

எல்லாமே மூடத்தனத்திலும் அதிகார மமதையிலும்தான் உள்ளன. அதிகார மமதை என்பதே மூடத்தனத்தின் முதல் அடையாளம்தானே!

ஆக மொத்தத்தில் பிற சக்திகள் விரித்த கண்ணிகளில் – பொறிகளில் இலகுவாக இலங்கையர்கள் அனைவரும் சிக்கி விட்டனர்.

இந்தப்பொறியில் முட்டாள்தனமாக நமது தலைமைகளும் மக்களும் விழுந்திருக்கின்றனர் என்பதே மிகப் பெரிய துயரம்.

இப்பொழுது நாடே தெருவில் நிற்கிறது. இருளில் மூழ்குகிறது.

எதை நோக்கி இலங்கையை வெளிச்சக்திகள் வழிநடத்தினவோ அதை அவை அடைந்து விட்டன. இப்பொழுது அந்த வெளிச்சக்திகளின் சந்தையாகவும் கடனாளியாகவும் இலங்கை மாறியுள்ளது.

ஏறக்குறைய இது நாமே நமக்கான புதைகுழியைத் தோண்டியதற்குச் சமம்.

இவ்வளவும் நடந்த இப்படியொரு நிலை வந்த பிறகும் கூட நடந்த கடந்த காலத் தவறுகளுக்கோ நடந்து கொண்டிருக்கும் நிகழ்காலத் தவறுகளுக்கோ யாரும் பொறுப்புக் கூறவும் தயாரில்லை. பொறுப்பெடுக்கவும் தயாரில்லை.

பதிலாக பிறரை நோக்கி கையைக் காட்டித் தம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள (தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே) விரும்புகின்றனர்.

2009இல் யுத்தம் முடிந்த போது, இனிப் பிரச்சினையில்லை. நாடு மெல்ல மெல்ல புதிய வளர்ச்சியைப் பெற்று விடும் என்று பலராலும் நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையை வலுப்படுத்தக் கூடியமாதிரியே “அபிவிருத்தித்திட்டங்கள்” என்ற பேரில் பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வீதிகள் மேம்படுத்தப்பட்டன. துறைமுகங்கள் விருத்திசெய்யப்பட்டன. பாடசாலைகள், மருத்துவமனைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் எல்லோருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்போடு அனைவருக்கும் மின்விநியோகம் செய்யப்பட்டது.

வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. இப்படி எல்லாமே முன்னேற்றகரமாக இருந்தன. இந்த மகிழ்ச்சியில் பலரும் சுற்றுலாவில் நாடுலாவினர்.

ஆனால், இந்த மகிழ்ச்சிக் காலத்துக்கு ஆயுள் நீடிக்கவில்லை. ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுக்குள் கண்பட்டதைப்போல எல்லாமே நாசமாகி விட்டன. இப்பொழுது  நாளில் பெரும்பகுதியும் மின் வெட்டாகியுள்ளது.

எரிபொருள் தொடக்கம் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு மக்கள் க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. சனங்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் பொய்த்து விட்டன. அதனால்தான் மக்கள் தெருவில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

சிறு நெருக்கடி ஏற்பட்டாலும் அதையிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் வழமை. மக்களின் இயல்பு. இப்பொழுது ஏற்பட்டிருப்பது பெரியதொரு பொருளாதார நெருக்கடி. ஆகவே மக்களின் கொதிப்புணர்வும் அதற்கு ஏற்றமாதிரி உச்சமாகவே இருக்கும்.

இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் மக்களுடைய உணர்வுகளின் பின்னால் நின்று தமது அரசியல் லாபத்தை அடைவதற்கே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. ஏற்பட்டிருக்கும் தேசிய நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கோ மாற்று உபாயங்களை முன்வைப்பதற்கோ தயாரில்லை.

மட்டுமல்ல, இவ்வளவு நெருக்கடிச் சூழலில் நிற்கின்றபோது கூட மக்களும் சரி அரசியற் தரப்பினரும் சரி இனமுரணை எப்படித்தீர்த்துக் கொள்வது? நாட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து எப்படி இந்த நெருக்கடியைக் கடப்பதற்காக செயற்படுவது, அதற்குரிய பன்மைத்துவச் சூழலை உருவாக்குவது எப்படி, ஜனநாயக அடிப்படைகளை வலுவாக்கம் செய்து பேணுவது எவ்வாறு என்று சிந்திக்கவும் இல்லை.

இதெல்லாம் எதைக் காட்டுகின்றன?

இன்னும் மெய்யான பிரச்சினையை உணரத்  தயாரில்லை என்பதைத்தானே!

இனியும் நெருக்கடிகளிலிருந்து மீளத் தயாரில்லை என்பதைத்தானே!

அப்படியென்றால் வெளியாரின் பொறிகளில் வீழத் தயார். உள்ளே நமக்குள் உடன்பாடு காணவும் ஒன்று படவும் நெருக்கடிகளிலிருந்து மீளவும் தயாரில்லை என்பதுதானே!

அப்படியென்றால் நாம் இன்னும் நீண்ட காலத்துக்கு தெருவில் நிற்கத்தான் போகிறோம். இருளில் மூழ்கத்தான் போகிறோம். கடனில் சாகத்தான் போகிறோம்.

வாழ்க இலங்கை மணித் திருநாடே!

கருணாகரன்

Comments