வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெற்று காண்டா மிருகம் என பெயர் வைத்த கதையாகியுள்ளது இலங்கையின் 13வதுஅரசியலமைப்பு திருத்தம்.
இலங்கையில் தமிழர்கள் உரிமை கோரி போராட்டம் ஆரம்பித்து யுத்தம் உக்கிர நிலையை அடைந்திருந்த நிலையில் 1987ஆம் ஆண்டு இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய மாநில அரசுகளுக்கு ஒப்பான சட்டமாகா தமிழ் மக்களுக்கான தீர்வாக, அப்போதைய இந்தியப்பிரதமர் இராஜீவ்காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆகியோரால் தமிழ் மக்களின் சம்மதம் இல்லாமல் உருவாக்கப்பட்டது 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்.
இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அன்று விடுதலைப்புலிகளால் அம்முறைமை நிராகரிக்கப்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டதன் காரணமாக தமிழ் மக்கள் பாரிய உயிர், உடைமை அழிவுகளை சந்தித்தனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தம் தொடர்பான எந்தவிதமான விளக்கங்களும் தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்தியா மற்றும் அமெரிக்க வல்லாதிக்க சக்திகளுக்கு இடையில் ஏற்பட்ட பனிப்போர் தமிழ் மக்களை பகடைக்காயாக்கியதுடன், கடந்த 30வருடங்களாக இலங்கை தேசம் போர்க்களமாக மாற்றப்பட்டு, இலங்கை மைந்தர்கள் மோதிக்கொண்டு மடிந்துபோனார்கள்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கிய இந்திய அரசு இலங்கையில் தனது நலனுக்காக பெரும் போர்களத்தை உருவாக்கி இளைஞர்களை பலியிட்டது.
வல்லாதிக்க சக்திகளின் சர்வதேச அரசியலை, இலங்கை மக்களுக்கு அறிவுறுத்த முடியாத தேசிய அரசியல் தலைமைகள் தங்கள் இருப்பைத் தக்க வைப்பதற்கான சுயநல அரசியலுக்காக. இனவாதம் எனும் எண்ணையை ஊற்றி இலங்கை தேசத்தை எரிய விட்டனர்.
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் அரசியல் தோல்வியாக மாறி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு கொண்டுவரப்படவிருந்த தருணத்தில், அமெரிக்க கப்பல் தமிழ் மக்களை காப்பாற்ற வரும் என்ற விடுதலைப்புலிகளின் அறிவிப்பு தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறாக சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் போராட்டகளமாக மாற்றப்பட்ட இலங்கை தேசம் அவர்களின் நலனுக்காக சின்னாபின்னப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் இலங்கையில் உருவாக்கப்படும் அரசியல் போராட்டங்களை பார்க்க முடியும்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய தலைமைகள் ஒன்றிணைந்து 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இந்தியாவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தனர். உண்மையில், இந்திய இலங்கை ஒப்பந்தமானது இலங்கையில் பயன்பாட்டிலுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் 13ஐ இல்லாது ஒழிக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அமெரிக்க சார்பு நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 13வது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கையானது இலங்கை அரசாங்கத்துக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.
ஆகவே தமிழ் தேசிய கட்சிகள் 13வது திருத்தச் சட்டத்தை தங்கள் அரசியலுக்காக கையிலெடுத்து உருட்டிவிளையாடி வருகின்றனர். தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் 13ஐ தீர்வாக கோருகிறார்கள் என்கின்ற மாயை கட்டியெழுப்பப்படுகின்றது. தமிழ் தேசிய பரப்பில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒருங்கிணைய வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுத்து அதை ஒரு தீர்வாக இந்தியாவிடம் முன்வைப்பதாக காட்டி தங்கள் மாயஜால வித்தையை ஆரம்பித்துள்ளது கூட்டமைப்பு. இருந்தபோதும் இந்த ஒருங்கிணைவு அரசாங்கத்திற்கு ஒரு தலைவலியாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது இந்தியாவின் 13வது திருத்தம் தீர்வில்லை அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை கூட்டி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாட்டின் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் தமிழருக்கு 13வது திருத்தமோ, தீர்வோ தேவையில்லை அவர்களுக்கு அபிவிருத்தி மாத்திரமே தேவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிங்கள பேரினவாதிகளும் 13ஐ எதிர்த்து வருகின்றார்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் தேர்தல் வந்தால் போட்டியிடுவோம் ஆனால் 13ஐ எதிர்ப்போம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தெரிவித்து வருகின்றது. இது எப்படி இருக்கிறது என்றால் 'நானும் ரவுடிதான் ஜெயிலுக்கு போறன்' என்ற காமெடிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை கபளீகரம் செய்வதற்கும், தங்கள் சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கும் பாதைகள் தேவைப்பட்டது. சாக்கடையானது ஒரே கால்வாயில் பயணித்தால் என்ன இரண்டாக பிரிந்து பயணித்தால் என்ன சாக்கடை சாக்கடைதானே. அகில இலங்கை தமிழ் காங்கிரசானது, கூட்டமைப்பைபின் செயற்பாடுகளை பிழையாக காட்டி தனது அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர் தேசிய அரசியல் பரப்பில் ஒன்றிணைந்தால் வாக்கு வங்கியில் பிரச்சினை எற்படும் எனவே யார் தமிழர்களை காப்பாற்றுவது என்ற போட்டியில் பொது எதிரியை மறந்து தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்து தமிழ் மக்களை குழப்பி வருகின்றார்கள்.
உண்மையில் இலங்கை அரசாங்கமானது இரண்டில் மூன்று பெரும்பான்மையை கொண்டுள்ளது. அதனால் அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும், இதன்காரணமாக தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாகும். கடந்த தேர்தலில் இனவாதத்தை முன்வைத்து ஆட்சியை பிடித்த அரசாங்கம், தொடர்ந்து சிங்கள மக்களை தன்பக்கம் வைத்திருக்க அரசியல் யாப்பில் மாற்றத்தை உண்டுபண்ண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அரசியல் யாப்பை மாற்றவேண்டுமானால் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ள 13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும். 13வது திருத்தச்சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு அப்பால் தமிழ் தலைமைகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் தமிழ் மக்கள் இந்த நாட்டின் மரபுவழி வந்த ஒரு தேசிய இனம் ஆகவே தமிழ் மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படாமல் தமது அரசியல் கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டு 'ஆர்றா ராமா ஆர்றா' என குரங்காட்டம் போடக்கூடாது.
இந்தியா தனது குழந்தையான 13வது திருத்தச்சட்டம் ஒரு போதும் இலங்கையிலிருந்து நீர்த்து போவதற்கு அனுமதிக்காது. ஏனென்றால் இந்தியா இந்துசமுத்திர பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பதனை முதலில் உணர வேண்டும். மற்றது இந்தியாவின் இருப்புக்கு ஆபத்து வரும் என்றால் உலக வல்லரசு நாடுகள் பார்த்துக்கொண்டிருக்காது காரணம் பொருட்களை இறக்குமதி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் மிகப்பெரும் சந்தையாக திகழ்கிறது இந்தியா. அடுத்து இந்தியாவை தாண்டி தென்னாசியாவில் அரசியல் நகராது எனவே 13வது திருத்தத்தை இந்தியாவின் அனுமதி இல்லாமல் செயலிழக்க செய்ய முடியாது. இலங்கை அரசானது ஒரு நெருக்கடியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில் தொடர்ச்சியாக இந்திய அரசானது நிதி உதவிகளை செய்து வருகின்றது. தமிழர்களின் அரசியலில் சலசலப்பை உண்டு பண்ணுவதற்கும், அவர்களை பிரித்து கையாள்வதற்கும், சிங்கள எதிர்க்கட்சிகள் மற்றும் இனவாதிகளை திருப்திபடுத்த கையிலெடுக்கப்பட்டுள்ள ஆயுதம்தான் 13வது திருத்தம் ஆக இந்த நிகழ்ச்சி நிரல் யாருடையது என்பது வாசகர்களின் சிந்தனைக்கு.
இந்தியா போன்ற வல்லாதிக்க சக்திகளினால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பின்னால் பயணிக்கும் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளைவே பெற்றுத்தருவார்கள். இந்தியா ஒருபோதும் ஈழத்தமிழர்களை அரவணைத்து பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை, இலங்கை அரசாங்கத்துடன் புதிய ஒப்பந்தங்களை எதிர்காலத்தில் கைச்சாத்திடுவதற்கான வாய்ப்புக்களும், சர்வதேச நாடுகளால் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும், நீதியையும் இந்தியா தடுக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுவதால் இலங்கை அரசானது இந்தியா குறித்தோ அல்லது தமிழ் தேசிய தலைமைகளின் கூக்குரல் குறித்தோ அலட்டிக்கொள்ளாது.
இலங்கையில் குறிப்பாக தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒன்றாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்தின் முன் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அடிப்படையாக நடைபெறும் தேர்தல்களில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி ஒற்றுமையாக தேர்தலில் வெற்றிபெற்று சர்வதேச சக்திகளுக்கு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அவர்களுக்கான உரிமைகள் வழங்கியே ஆக வேண்டும் என்ற கோசத்தை முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்கி விடும் என நினைத்தால் அது அரசியல் அறியாமை அல்ல தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் மோசடியாகவே இருக்கும்.
எம்.ஜி.ரெட்ன காந்தன்