![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/04/24/a26.jpg?itok=id-pNeOM)
நுவரெலியாவில் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் நடைபெறுவது ஒரு பாரம்பரிய நிகழ்வு எனினும் இவ்வருடம் நடைபெற்ற ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் சோபிக்கவில்லை.
ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமானபோது இனம் தெரியாத ஒரு குழுவினரால் குழப்பிப்போனது. ஏப்ரல் வசந்தகால நிகழ்வின் ஆரம்ப வைபவம் இடையில் நின்று போனதாலும் மற்றும் எரிபொருள் தட்டுபாட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெறத் தொடங்கியிருந்ததாலும் இங்கு வருவதற்கான உற்சாகத்தை பயணிகள் இழந்திருக்கலாம். போராட்டங்கள் நடைபெறுவதாலும் மற்றும் உணபொருட் களின் விலை உயர்வு நுவரெலியாவில் தங்குவதற்கான அறைகள் மற்றும் வாடகை விடுதிகளின் வாடகை அதிகரிப்பு என்பனவும் சுற்றுலா பயணிகள் வருகை வீழ்ச்சிக்கு காரணம் எனலாம்.
நுவரெலியா மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளும் சோபிக்கவில்லை. நுவரெலியாவில் டீசல், பெற்றோல் தட்டுப்பாட்டால் மக்கள் டீசல், பெற்றோல் பெற்றுகொள்வதற்காக காலை முதல் மாலை வரை வரிசையில் காத்திருந்தும் பெற்றோல், டீசல் பெற்றுகொள்ளள அவர்களால் முடியவில்லை. இதுவும் சுற்றுலா பயணிகளின் வரவு குறைந்தமைக்கு ஏதுவாகலாம்.
இது இவ்வாறிக்க, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு தட்டுபாடு, பால் மா தட்டுபாடு காரணமாக உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டன. மேலும் பஸ் கட்டணம் ஆட்டோ கட்டணம் உட்பட வாடகை வாகன கட்டணம் மற்றும் தங்குமிட கட்டண அதிகரிப்பால் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவைத் தவிர்த்தனர்.
நுவரெலியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகள் நடைபெறாததால் இவ் வருடம் பெருந்தொகையான பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்டோர் எதிர்பார்த்திருந்தனர். இதை மனதில் இருத்தி சுற்றுலா ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் உணவு பொருட்களை அதிகமாக கொள்வனவு செய்து தயாராக வைத்திருந்தார்கள். ஆனால் அந்தப் பொருட்கள் பயன்படுத்தப்படாததால் இக்கட்டான நிலையை வர்த்தகர்கள் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.
இதேவேளை ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட வசந்தக்கால தற்காலிக கடைகளிலும் எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறவில்லை. நுவரெலியாவில் கடந்த 15, 16ஆம் திகதிகளில் மாத்திரம் ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பைக் காண முடிந்தது.
வெளி மாவட்ங்களில் வருகை தந்தவர்கள் இங்குள்ள இரண்டு எரிப்பொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நின்று வாகனங்களுக்கு பெற்றோலையும், டீசலையும் வயிறு நிறைய நிரப்பிகொண்டதால் நுவரெலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருந்தது.
அதேவேளை நுவரெலியா மாநகரசபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகளும் முறையாக நடைபெறவில்லை. வசந்தக்காலத்தை முன்னிட்டு நுவரெலியா பொது மைதானத்திலும் நுவரெலியா கிரகறி வாவிக் கரையிலும் அமைக்கப்பட்டிருந்த கார்ணிவேல் களியாட்ட நிகழ்களிலும் எதிர்பார்த்த மக்கள் தொகையைக் காண முடியவில்லை. செல்லவில்லை. நுவரெலியா குதிரைப்பந்தய திடலில் நடைபெற்ற குதிரைப்பந்தய போட்டியை பார்ப்பதற்குக்கூட மிகவும் குறைவாகவே வருகை தந்திருந்தனர்.
இம்முறை ஏப்ரல் வசந்தக்கால நிகழ்ச்சி நிரல் புத்தகம் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே அச்சிடப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் இல்லை. இது குறித்து நுவரெலியா மாநகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்த கூட்டம் கடந்த 3ஆம் திகதி நுவரெலியா மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி மற்றும் மாநகரசபை உறுப்பினர் இராமையா கேதீஸ் ஆகிய இருவரும், ஏப்ரல் வசந்தக்கால நிகழ்ச்சி நிரலில் தமிழ் மொழி அச்சிடப்படாதது தங்களுக்கு கவலையாக இருப்பதாகவும் 23உறுப்பினர்களைக் கொண்ட நுவரெலியா மாநகரசபையில் 9தமிழ் உறுப்பினர்கள் இருப்பதாகவும் மாநகரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட வசந்தக்கால நிகச்சி நிரல் புத்தகத்தில் தமிழ் மொழி அச்சிடப்படாதது தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயலாகும் என்றும் எடுத்துச் சொல்லியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன, இம் முறை ஏப்ரல் வசந்தக்கால நிகழ்ச்சி நிரல் புத்தகம் மாநகரசபையால் அச்சிடப்படவில்லை என்றும் அனுசரணையாளர்கள் மூலம் அச்சிடப்பட்டது என்றும் குறிப்பிட்டதோடு இனிமேல் இவ்வாரான தவறு நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம் என்று உறுதியளித்தார்.
நுவரெலியா மாநகரசபைக்கும் நகர அபிவிருத்தி சபைக்கும் பணம் செலுத்தி அமைக்கப்பட்ட தற்காலிக வசந்தக்கால கடைகளில் செலுத்திய பணத்தைக்கூட தேட முடியவில்லையாம்! அந்தளவிற்கு வியாபாரம் நடைபெறவில்லையென கடை வைத்திருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வு தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஷ் கிருசாந்தவுடன் பேசினோம். இந்த நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர் விடுமுறையை கழிப்பதற்காக
நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் வசந்தக்கால. கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர். (நுவரெலியாவிலுள்ள சுற்றுலாத்துறை யினரும் பொது மக்களும் வியாபாரிகளும் வருமானம் தேடும் மாதமாகும்.ஆனால் இந்த மாதத்தில் அந்த வருமானம் தேடமுடியவில்லை.
ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் ஒரு தனி மனிதன் வருமானத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வசந்தக்கால நிகழ்வுகளாக நடத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகரமுதல்வர் தன்னிச்சையாக வசந்தக்கால நிகழ்வுகள் தொடர்பாக ஒருசில முடிவுகளை எடுத்திருந்தார். இதனால் மாநகரசபை உறுப்பினர்களும் மாநகர முதல்வருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.' என்றார் இவர்.
இந்த வருட வசந்தக்கால கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை என்றுதான் கூற வேண்டும். வசந்தக்கால நிகழ்ச்சி நிரிலில் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளில் குதிரைப்பந்தய போட்டி, கிரிக்கெட் போட்டி மற்றும் மலர்கண்காட்சி மாத்திரமே நடைபெற்றன. இதில் குதிரைப்பந்தய போட்டியைபார்பதற்கு மிகவும் குறைந்தளவிளான மக்களே வருகை தந்திருந்தார்கள். அதேபோல நுவரெலியா விக்டோரியா பூங்காவில் கடந்த 17,18ஆம் திகதிகளில் மலர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியிலும் பெரிய அளவில் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை.
அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்களும் வாடிய நிலையில் காணப்பட்டன. ஆரம்ப வைபவத்திலும் பரிசளிப்பு வைபவத்திலும் 23மாநரசபை உறுப்பினர்களில் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக்கொண்டனர். இதனை பார்க்கும் பொழுது மாநகர முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுபினர்களின் ஒத்துழைப்பு இல்லை என்பதை அறிய முடிந்தது. எது எப்படியானாலும் நுவரெலியா சுற்றுலாத்துறையினருக்கும் நுவரெலியா வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கும் எதிர்பார்த்தளவு வருமானம் கிடைக்கவில்லை. எனவே எதிர்வரும் வசந்தக்கால நிகழ்வுகள் அனைவரினதும் ஆலோசணைகளை பெற்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட வேண்டியது அவசியம். ஒரு நகரத்துக்குக் கிடைக்கும் பெருமளவு வருமானத்தை இழந்துவிட முடியுமா?
நூரளையூரான்