விலைவாசி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எரிபொருள் விநியோகத்தை வழங்கக் கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன. இவை மக்கள் போராட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை தற்பொழுது வன்முறையை நோக்கி நகர்ந்து வருவதைஆங்காங்கே இடம்பெறுகின்றசம்பவங்கள் உணர்த்துகின்றன.
மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறி பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரம்புக்கண பகுதியில் வீதியை மறித்துப் போராடியவர்களைக் கலைப்பதற்குப் பொலிஸார் மேற்கொண்டு நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்ததுடன் 30இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக இந்த இரு போராட்டங்களையும் எடுத்துப் பார்த்தால் அமைதிப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏதோவொரு சக்தியினால் வன்முறைப் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகங்கள் வலுத்துள்ளன.
அண்மைய எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ரம்புக்கண பகுதியில் மக்கள் வீதியை மறித்தும், ரயிலை மறித்தும் நீண்ட நேரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 15மணித்தியாலங்களாக வீதியும், ரயில் பாதையும் மறிக்கப்பட்டு போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கும் அப்பால் எரிபொருள் விநியோகிப்பதற்காகச் சென்ற பவுசர் நடுவீதியில் மறித்து வைக்கப்பட்டிருந்தது. அது மாத்திரமன்றி ஆர்ப்பாட்டக் காரர்களில் சிலர் எரிபொருள் பவுசரையும் சேதப்படுத்தியிருந்தனர். இதற்குத் தீயூட்ட முயற்சித்தமையால் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். மக்களைக் கலைப்பதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், பொலிஸார் உட்பட 30இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30,000லீற்றர் எரிபொருளுடன் காணப்பட்ட பவுசருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயூட்ட முயற்சித்தமையால் அவர்களைக் கலைப்பதற்காக குறைந்த பலத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது எனப் பொலிஸ்மா அதிபர் அறிவித்திருந்தார்.
இருந்தபோதும் உயிர் பலி ஏற்பட்டிருப்பதால் இவ்விடயம் மக்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் கடும் கவலையை வெளிப்படுத்தியிருப்பதுடன், சுயாதீனமான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரம்புக்கண பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மறுபக்கத்தில், தற்போதைய அரசாங்கத்துக்கும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இங்கு முன்னெடுக்கப்படும் போராட்ட முறை மற்றும் அதில் கலந்து கொள்பவர்களின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
போராட்டம் என்பதற்கு அப்பால் களியாட்டமாக மாறியுள்ளதை அங்கு இடம்பெறுகின்ற சில காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. போராட்டம் நடத்தப்படும் பகுதியில் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டு உணவு சமைக்கப்பட்டு பரிமாறுவது, குளிர்பானம் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அது மாத்திரமன்றி போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் வாகனங்களில் ஒலிகளை எழுப்பியவாறும், ஊதுகுழல்களைப் பயன்படுத்தி சத்தங்களை எழுப்பியவாறும் கொழும்பு வீதிகளில் பயணிக்கின்றனர். பொதுவாக வொசாக் அலங்காரப் பந்தல்களைப் பார்ப்பதற்கு இளம் வயதினர் மோட்டார் சைக்கிள்களில் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் போல தற்பொழுது காலிமுகத்திடலின் ஆர்ப்பட்டப் பகுதிக்கும் இளைஞர்கள் செல்கின்றனர்.
அது மாத்திரமன்றி மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வதையும் காணக் கூடியதாக உள்ளது. இதற்கும் அப்பால் இசைவாத்தியங்களை இசைத்து பாடல்களைப் பாடுவது, நடனமாடுவது என பொழுதுபோக்குச் செயற்பாடுகளே அதிகம் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது மக்களின் உண்மையான கோரிக்கை இந்தப் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படாமல் இல்லை.
கொழும்பில் உள்ள உயர்தரப்பு மக்களையே இங்கு அதிகம் காணக் கூடியதாக இருப்பதுடன், நாளாந்தம் செலவு செய்யப்படும் பணத்தைப் பார்க்கும் போது போராட்டத்தின் பின்னணி குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
இங்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் குடிபானங்களுக்கு எங்கிருந்து, யாரால் பணம் வழங்கப்படுகின்றன என்பது இன்னமும் மர்மமாகவே காணப்படுகிறது. மக்கள் போராட்டம் களியாட்டமாக மாற்றப்பட்டிருப்பது தொடர்பில் நாளுக்கு நாள் விமர்சனங்கள் அதிகரித்தே வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளால் சாதாரண மக்களினால் நடத்தப்படும் நியாயமான போராட்டங்களுக்கான மதிப்பும் இழக்கப்படுகிறது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இது இவ்விதமிருக்க, காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்தார். இருந்தபோதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் இதற்குத் தயாராகவில்லை. அத்துடன், பாராளுமன்றத்தில் உள்ள 225பேரும் தேவையில்லையென அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
அரசியலமைப்பின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட 225பேரே அரசியல் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கான பிரதிநிதிகளாகக் காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரையும் நீக்கி விட்டு ஜனநாயக ரீதியில் எவ்வாறான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. அவ்வாறு செயற்படுவது அரசியலமைப்புக்கு முரணான விடயமாக அமைந்து விடும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது காலிமுகத்திடலில் உள்ளவர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம், எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் வீதிகளை மறித்து நடத்தும் போராட்டங்கள் பல தரப்பினரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றன. வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்வதால் அவசரமாக வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட அன்றாட கடமைகளை நிறைவேற்றச் செல்லும் பலரும் சிக்கல்களுக்கும், கஷ்டங்களுக்கும் உள்ளாகின்றனர். எனவே இது குறித்தும் போராடும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதே பொதுவான வேண்டுகோளாக உள்ளது.
பி.ஹர்ஷன்