![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/04/24/a27.jpg?itok=zbUMy8uG)
பொருட்தட்டுப்பாடு, விலையேற்றம் இதுபோன்ற நெருக்கடிகளால் மக்கள் மூச்சுத்திணறும் நிலைகள் நாட்டின் அமைதியைப் படையெடுத்திருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கள் பசி, பஞ்சத்தை போக்கவே புறப்பட்டிருக்கிறது. புறமுதுகு காட்டி ஒடும் நிலையில் இந்த அமர்க்களம் இல்லை. இதுதான் இன்றுவரைக்கும் உள்ள ஆறுதல். ஆனால், இதுதவிர ஏதும் இதற்குள் புகுந்திருந்தால், கட்டாயம் அவை புறந்தள்ளப்பட வேண்டும். பழிதீர்ப்பது, ஆட்சியைப் பிடிப்பது, அதிகார அலகு கோருவது இன்னும் தனித்தனி அஜந்தாக்கள் தழையெடுப்பது எல்லாம் இந்தப் பொதுப்படையெடுப்பை பலமிழக்கச் செய்யும். தென்னிலங்கை சக்திகளின் தேவை, பொதுவாக பொருளாதார பிரச்சினைக்கான தீர்வுதான். மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் 225எம்.பிக்களையும் இராஜினாமாச் செய்யுமாறு கோஷமிடும் சூழலுக்குச் சென்றிருக்கிறது. இதுபற்றித்தான் அரசியல்வாதிகளின் கவனம் இருக்க வேண்டும். குறிப்பாக, சிறுபான்மை தலைமைகளின் கவனம் கத்திக் கூர்மையில் நடக்க வேண்டிய நிலைதான் இது. சமஷ்டி தரவில்லை, சந்தர்ப்பம் தரவில்லை என்பதற்காக அரசாங்கத்தை அனுப்ப எடுக்கப்படும் எத்தனங்கள் ஏதோவொன்றை எச்சரிக்கலாம்.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இதை யாராவது அர்த்தப்படுத்துவார்களானால் அவர்களே தனித்தனி அஜந்தாக்காரர்கள். இன்றுள்ள லட்சணத்தில், இன்னுமொரு தேர்தலுக்கான அஜந்தாக்களாகவும் இவை இருக்க இயலாதே! அவ்வாறானால், கற்பனைக் காரணங்களைக் கையிலெடுத்துள்ளனரா இவர்கள்?. எனவேதான், இந்நிலை ஏற்பட்டதற்கான காரணங்களை களைய வேண்டிய பொறுப்புள்ளோர் பொறுப்புடன் நடக்க நேரிட்டுள்ளது. ஆனாலும், இவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை. அரசியலாகட்டும் அல்லது பொதுத்துறையாகட்டும் ஏன்? மக்களும் இவற்றில் பொறுப்புடன்தான் நடக்கவேண்டும். சந்தர்ப்பம் வாய்த்துவிட்டதற்காக நீண்டகால ஆசைகளை அடைந்துகொள்ளும் தேவைகளை இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவது திறமையாகாது.
இவ்வாறு சிலர் பயன்படுத்துவதுதான் இந்த நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துகிறது. எரிபொருள், எரிவாயு, பால்மா மற்றும் எதையாவது தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்வது, பதுக்கி வைப்பது போன்ற வியாபாரத் தந்திரங்கள் கைவிடப்படுவதற்கான கூட்டுமுயற்சிகள், பொதுப் பொறுப்புக்களை முன்னின்று நடத்துவது யார்? அரசாங்கத்தரப்பு தவிர்ந்த வேறு எவரிடமும் இந்தப் பொதுப் பொறுப்புக்கள் இன்னும் ஏற்படவில்லையே! ஆக எளிய காய்நகர்த்தலாக பாராளுமன்றத்தில், சாதாரண பெரும்பான்மையை (113) காட்டி ஆட்சியைப் பொறுப்பெடுக்கும் புரிந்துணர்விலும் இவர்கள் இல்லை. இதைத்தான், ஜனாதிபதி அடிக்கடி சொல்கிறார். "அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அரசாங்கம் இருக்கிறது. 113ஐ நிரூபித்தால் அரசாங்கத்தை உடன் கையளிப்பேன்" என்பதும் இதற்காகத்தான்.
இவ்வாறான நெருக்கடிச் சூழல்களில் மக்களைவிட்டு ஓடுவது, ஒரு தலைவனுக்கு அழகுமில்லை. இந்த பின்னோக்குப் பெறுமானங்களில், ஜனாதிபதி களத்தை நகர்த்துவதாகவே தோன்றுகிறது. அசேதனப்பசளை உள்ளிட்ட தோற்றுப்போன திட்டங்களால் இழந்துபோன மவுசைப் பெற முடியாவிடினும், நஷ்டத்தை ஈட்டிக் கொள்ளும் நாட்டம் இந்த அரசுக்கு இருக்கிறது. இதற்காகத்தான் இவ்வளவு இறங்கியும் வந்திருக்கிறது. எனவே, இதைத்தான் எதிரணிகள் சிந்திக்க வேண்டும். வீதி ஆர்ப்பாட்டங்கள், வரவேண்டிய வெளிநாட்டு டொலர்களை தாமதப்படுத்துகிறது. குறைந்தளவில், ஆடம்பர இறக்குமதியை மட்டுப்படுத்தியிருப்பதும் இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான டொலரைச் சேமிக்கத்தான். இல்லாவிடின், வேறு வழியில் இதைச் செய்யும் வியூகங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்துவதுதான் எதிரணிக்குள்ள பொறுப்பு. மாறாக, "மரத்தால் விழுந்தவனை மாடு குத்திய" நிலைமை ஏற்பட இடமளிப்பது பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகாது.
சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை, உதவி வழங்கும் நாடுகளின் ஆலோசனைகள் எல்லாம், இலங்கையில் அரசியல் புரிந்துணர்வு அல்லது பலமடைவு ஏற்பட வேண்டும் என்பதையே எம்மவர்கள் உணர வேண்டும். களவாடப்பட்டதாகக் கூறப்படும் தேசிய சொத்துக்கள், வீண்விரயத்தால் ஏற்பட்ட நஷ்டம் என்பவற்றுக்கான விளக்கங்களை பொதுமக்களுக்கு வழங்குவதும், ஆட்சியிலுள்ளோரின் பொறுப்புக்களிலிருந்து விலகப் போவதுமில்லை.
சுஐப் எம்.காசிம்