ஆ. முத்துலிங்கம் பொதுச் செயலாளர் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
1886ல் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து நடத்திய போராட்டத்தினால் உலகிலுமுள்ள சகல உழைக்கும் மக்களும் எட்டு மணி நேர வேலை உரிமையை அனுபவிக்கின்றனர்.
இதை நினைவுகூர்ந்து சகல நாடுகளிலும் மேதின விழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால், நமது நாட்டில் அதிகளவு வருமானத்தைத் தேடித்தரும் தேயிலை, இறப்பர், தெங்கு தொழில் துறையில் தொழில் புரியும் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1920ம் ஆண்டு முதல் முழு உலகத்தையும் கொரோனா உயிர்க்கொல்லி நோய் (COVID 19) வாட்டிய காலத்தில் அதிகமான தொழிற்துறைகள் மூடப்பட்டிருந்தபோதும் நமது நாட்டில் தோட்டத் தொழிற்துறை மட்டும் செயற்பட்டது, ஆனால் கம்பனிகளோ நட்டம் என்ற பல்லவியையே பாடிக்கொண்டிருக்கின்றன.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வானது தேயிலை -இறப்பர் சம்பள நிர்ணய சபைகளால் 05.03.2021 இல் அங்கீகரிக்கப்பட்டது. குறைந்தபட்ச நாளாந்த சம்பள அளவு ரூபா. 900.00 எனவும் வரவு செலவுத்திட்ட சலுகை கொடுப்பனவு ரூபா. 100.00 எனவும் ஆகமொத்தம் ரூபா. 1000.00 மார்ச் மாதம் முதல் வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதனால் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு தோட்டக் கம்பனிகளால் தொழிலாளர் உழைப்பு மிகமிகக் கொடூரமாக சுரண்டப்படுகின்றது.
சம்பள நிர்ணய சபைகள் தீர்மானத்தை ஆட்சேபித்து 20 தோட்டக் கம்பனிகளால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவு பெறாமல் உள்ளதால் தொழிற் சங்கங்கள் தொழில் ஆணையாளர் நாயகத்திடம் செய்த முறைப்பாடுகளுக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளது.
இதனால் ஆயிரம் ரூபா சம்பளம் சில தொழிலாளர்களுக்கு மட்டும் கிடைப்பதோடு அதிகமானவர்களுக்கு கிடைப்பதோ 700ரூபா மட்டுமே. தேயிலைக் கொழுந்து பறிப்பவர்களுக்கு கிலோவிற்கு 40 ரூபா என்ற வீதப்படியே வழங்கப்படுகின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வழங்கினால் ஒன்றரை நாள் சம்பளம் வழங்க வேண்டுமென்பது சட்டமாகும். ஆனால், இந்த சட்டத்தை மீறி ஞாயிற்றுக்கிழமை 30 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் இல்லையேல் 20 கிலோவிற்கு 500 ரூபாவும் அதற்கு மேல் உள்ள கொழுந்திற்கு 40 ரூபா வீதமும் வழங்கப்படுகின்றது. ஆனால் தோட்ட நிர்வாகங்களோ ஆயிரம் ரூபாவைக் காரணம் காட்டி பல ஆயிரங்களை சம்பாதித்துக் கொள்கின்றன.
1992ம் ஆண்டு ஜனவசம மற்றும் அரச தோட்டக் கூட்டுத்தாபன தோட்டங்களை மக்கள் மயப்படுத்துவதாக பிரசாரப்படுத்தி 22 தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டன. இதற்கு தொழிலாளர்கள் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தமையால் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அன்றைய அரசின் பங்காளித் தொழிற் சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இரண்டும் மக்கள் மயமாக்கலுக்கு முழ ஆதரவையும் நல்கின.
பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களையும் ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய தோட்டங்களை தனியார் கம்பனிகள் கடந்த 30 வருடங்களில சீரழித்துவிட்டன. தொழிலாளர்களும் உத்தியோகத்தர்களும் போராட்டங்களினால் வெற்றிகண்ட உரிமைகளும் சலுகைகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு தற்போது அவர்கள் கூலிகளாக நடத்தப்படுகின்ற அவல நிலைக்கு வந்துவிட்டனர்.
கம்பனிகள் தொழிலாளர் தொகையை மட்டுப்படுத்த சேவைக்காலப் பணம் (14 நாள் சம்பளம்) வழங்குவதாக கூறி வேலை நிறுத்தப்பட்டுசேவை காலப் பணம் வழங்க காலதாமதத்தை ஏற்படுத்துதல், சுகவீனம் அல்லது மரண நிகழ்வுகள் போன்றவைகளுக்குச் சென்று வேலைக்கு ஒரு சில நாட்களுக்குசெல்லா விட்டால் அரசாங்க வைத்திய அத்தாட்சிப் பத்திரம் வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் வேலை மறுக்கப்படுகின்றது.
அவசர காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தால் கடிதமூலம் நிருவாகத்திடம் அறிவித்துவிட்டு திரும்பிவந்து வேலைக்குச் சென்றால் கம்பனிக்கு எழுதியிருக்கின்றோம் பதில் வந்தவுடன் வேலை தருவதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்து ஒரு மாதம் கடந்த பின் கணனியில் பெயர் நீக்கப்பட்டுள்ளதென கூறி கடைசியில் வேலை மறுக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உழைப்பை கீழ் கண்ட முறையில் நிர்வாகங்கள் சுரண்டுகின்றன. - எவ்வித உரிமைகளும் சலுகைகளும் இல்லாமல் நாளொன்றுக்கு கைக்காசுக் கொடுப்பனவாக 700 ரூபா மட்டும் வழங்குதல்.
- எவ்வித உரிமைகளும் சலுகைகளும் இன்றி மாதத்திற்கு 30 நாள் வேலை 20,000.00 ரூபாகொடுப்பனவு, ஆனால் வேலைக்கு செல்லாவிட்டால் நாளொன்றுக்கு 700 ரூபா வீதம் கழிக்கப்படுதல்.
- தேயிலைக் கொழுந்து40 ரூபாவுக்கு பறித்துக்கொடுத்தல். பறிக்கப்படும் கொழுந்தை நிருவாகத்திற்கு பாரம் கொடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 2 - முதல் 3 கிலோ வீதம் கழித்துக்கொள்ளல் என்பன சம்பந்தமாக எவ்வித ஆவணங்களும் கொடுக்கப்படுவதில்லை.
- கம்பனிகள் குத்தகைக்கு எடுத்தபின் பல்லாயிரக் கணக்கான தேயிலை மலைகளை காடுகளாகிக் கைவிடப்பட்ட மலைகளிலிருந்த புல், பூண்டு, செடிகொடிகள் போன்றனவற்றை களைந்து தேயிலை செடிகளை கவ்வாத்து வெட்டி அதன் பின் மட்டம் வெட்டி கொழுந்து பறித்து நிருவாகத்திற்கு கொடுப்பது. இப்படி கொடுக்கும் தேயிலை கொழுந்துக்கு ஆகக் குறைந்த தொகையே கொடுக்கப்படுகின்றது. இந்தக் குறைந்த தொகையில் காணி வரி, உரம், மருந்து போன்றவைகளுக்கும் கழித்து மிகுதிதான் கொடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நாளில் கொழுந்து பறிக்காவிட்டால் வேறு ஆட்களைக் கொண்டு பறித்து நிர்வாகம் எடுத்துக் கொள்ளுவதால், தோட்ட நிர்வாகம் ஐந்து சதமேனும் செலவில்லாமல் இலட்சக் கணக்கில் சம்பாதித்துக் கொள்கின்றது. இது வெளியார் உற்பத்தி முறை என சொல்லப்படுகின்றது. இதன் விதி முறைகள் சம்பந்தமான ஆவணத்தில் நிர்வாகங்கள் கையொப்பம் பெற்றுக்ெகாள்கின்றன. ஆனால் அதன் நகல்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவதும் இல்லை. இங்கு இன்னொரு விடயம் என்னவென்றால் சிறு தோட்டங்களிலிருந்து தேயிலைக் கொழுந்து கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும் தொகையும் கொடுக்கப்படுவதில்லை.
மேற்குறிப்பிட்டவர்கள் தொழிலாளர் அந்தஸ்து இல்லாத உற்பத்தியாளர்கள் என்பதால் எவ்வித எழுத்து மூலமான அத்தாட்சிகளும் நிர்வாகத்தால் கொடுக்கப்படுவதில்லை. ஆகக்குறைந்தது இவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலை தூள்தானும் நிர்வாகத்தால் கொடுக்கப்படுவல்லை. அது மாத்திரமல்ல, சம்பள நிர்ணய சபை தீர்மாணித்த சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைகாலப் பணம், வருடாந்த விடுமுறை, சம்பளம் போன்றனவற்றை வழங்காமலும் எவ்வித விபத்துகள் ஏற்பட்டாலும் பொறுப்பெடுக்காமல் தப்பித்துக் கொள்வதற்கும் தோட்டக் கம்பனிகள் போடும் தந்திரமாகும்.
அதே நேரத்தில் படித்தவர்களில் கணிசமானவர்கள் இருந்தபோதும் இதைப்பற்றி எவ்வித அக்கறையும் அற்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும். கடந்த காலங்களில் தொழிற்சங்க போராட்டங்களினால் வென்றெடுத்த உரிமைகள் தற்போது ஒவ்வொன்றாக கம்பனிகளால் பறிக்கப்பட்டு வருகின்றன.
மே தினமான இன்றும் வெளியார் உற்பத்தி முறையில் தேயிலைக்கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் அவல நிலையில் உள்ளனர். ஆகையினால், இவ்விடயம் சம்பந்தமாக மக்கள் நன்கு புரிந்து தங்களது உழைப்பை சுரண்டும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றை மே தினத்தில் ஐக்கியப் பட வேண்டும். இல்லையேல் கம்பனிகளின் சுரண்டலுக்கு முகம் கொடுத்துக்கொண்டே காலத்தை கடத்த வேண்டியிருக்கும்.