![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/05/17/a17.jpg?itok=r6cx3g7_)
அயல்நாட்டுடன்எக்காலமும் இராஜதந்திர உறவு நெருக்கமாகப் பேணப்பட வேண்டுமென்பதற்கு இலங்கை-இந்திய நாடுகளுக்கிடையிலான நல்லுறவு நல்லதொரு முன்னுதாரணமாகும். இலங்கையும் இந்தியாவும் தங்களுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை நெருக்கமாகப் பேணி வந்ததன் காரணமாகவே எமது நாட்டின் இன்றைய நெருக்கடி வேளையில் இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டியது.
இலங்கையில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொடர்பாக இந்தியாவின் தேசியக் கொள்கையில் மாற்றம் இருந்ததில்லை. இலங்கை தனது அயல்நாடு என்பது மட்டுமே இந்தியாவின் அசைக்க முடியாத கொள்கையாக இருந்து வருகின்றது. இலங்கையின் அரசியல் நெருக்கடி பற்றியோ அரசியல் மாற்றங்கள் பற்றியோ சிந்திக்காமல் இந்தியா தனது உதவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.
இந்நிலையில் இலங்கையின் இன்றைய நிலைமை தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய கருத்துகளை சில தின ங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்தும், இலங்கையில் நிலவிய வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் இந்திய மத்திய அரசு முதன் முறையாக இக்கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
'இலங்கை மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா முடிவு எடுக்கும்' என்று இந்தியா கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து பொருளாதார உதவிகளைச் செய்யும் என்றும் அதேநேரம் அரசியல் ரீதியிலான ஆதரவை வழங்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "அண்டை நாடான இலங்கையுடன் இந்தியா நெருக்கமான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ரீதியிலான மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது. இலங்கை மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது நிலவுகின்றது. இலங்கையின் வரலாற்றில் முன்னொரு போதுமில்லாதவாறு தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. கொவிட் தொற்று காரணமாக நாட்டின் வருமான மூலங்கள் யாவும் முடங்கிப் போயிருந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ளதே இந்த நிலைமையாகும். இந்த நிலைமையில் இருந்து நாடு மீண்டெழ வேண்டியது அவசியம்.
ஆனால் அதற்கு சில காலம் தேவை. அதுவரை ஏனைய நாடுகளிடம் பொருளாதார மீட்சிக்கான உதவி கோருவதில் தவறில்லை. இந்தியாவிடம் மாத்திரம் இலங்கை உதவி கோரவில்லை. சீனா உட்பட பல நாடுகளிடமும் இலங்கை உதவி கோரியிருந்தது. ஆனாலும் பிரதிபலன் கருதாது உடனடியாக உதவிக் கரம் நீட்டிய நாடு இந்தியா ஆகும். இந்த உதவியானது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்தியாவின் உதவி குறித்து இலங்கையின் பிரபலங்கள் பலரும் தங்களது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்திருந்தனர்.
இலங்கைக்கு நேரடியாக உதவிகள் வழங்குவதுடன் மாத்திரம் இந்தியா நின்றுவிடவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப் பெற்றுக் கொடுப்பதிலும் இந்தியா விசேட கவனம் செலுத்தியிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இன்றைய துன்பத்தை எவ்வாறாயினும் நீக்கிவிட வேண்டுமென்பது மாத்திரமே இந்தியாவின் எண்ணமாக இருந்து வருகின்றது.
டொலர் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் தற்போது மருந்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. தனியார் வைத்தியசாலைகளில் மருந்துகள் பலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைத் தீர்த்து வைப்பதிலும் இந்தியா சமீபத்தில் உதவி வழங்கியிருந்தது. இந்தியாவிடமிருந்து இது போன்ற உதவிகள் எதிர்காலத்திலும் தொடருமென்று தெரிகின்றது.
ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மாபெரும் தேசம் ஆகும். இந்தியா பொருளாதார வல்லரசாகவும், ஆயுதபலத்தில் வல்லரசாகவும் திகழ்கின்றது.
அயல்நாடுகளில் இருந்து சவால்களை எதிர்கொள்கின்ற போதிலும், அத்தனையையும் சமாளித்தபடி இந்தியா வெற்றியுடன் முன்னேற்றமடைந்து வருகின்றது. தனது முன்னேற்றத்தில் மாத்திரம் கவனம் செலுத்தாமல் அயல்நாடுகளின் நெருக்கடிகளைத் தணிப்பதிலும் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
இலங்கையின் நெருக்கடியைத் தணிப்பதிலும் இந்தியா அவ்வாறுதான் உதவிகள் வழங்கி வருகின்றது. இலங்கையில் கொவிட் தொற்று உச்சகட்டத்திற்குச் சென்றிருந்த வேளையில் இந்தியா வழங்கிய உதவியை ஒருபோதுமே மறந்து விட முடியாது.
அன்றைய காலப்பகுதி மிகவும் பயங்கரம் நிறைந்ததாக இருந்தது. உலக நாடுகள் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்ைகயில் இறங்கியிருந்த காலப் பகுதி அது. உலகின் அத்தனை நாடுகளும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த வேளை அது. கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்து கொள்வதே மிகவும் சிரமமானதாக அவ்வேளையில் இருந்தது.
இலங்கையும் கொவிட் தடுப்பூசியை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தில் இருந்தது. அவ்வேளையில் இந்தியா வழங்கிய உதவி அளப்பரியதாகும். முதல் கட்டமாக இலங்கைக்கு அன்பளிப்பாகவே தடுப்பூசிகளை இந்தியா வழங்கியிருந்தது. அயல்தேசத்தின் நலனுக்கே முன்னுரிமை என்பதே இந்தியாவின் உறுதியான குறிக்கோளாக இருந்து வருகின்றது.
கொவிட் தடுப்பூசிகளை ஏற்றியபடி இந்தியாவின் முதலாவது விமானம் இலங்கையில் தரையிறங்கிய போது அது உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. இலங்கை மக்களின் உயிர்காக்க வந்த முதலாவது நாடான இந்தியாவின் அர்ப்பணிப்பை அன்று இலங்கை மக்கள் நன்றியுடன் நோக்கினார்கள். கொவிட் தடுப்பூசி வழங்கும் விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் தனது உதவிகளை இலங்கைக்கு வழங்கி வந்திருக்கின்றது.
இவ்வாறுதான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, இந்திய மத்திய அரசு சார்பில் ஏராளமான மருந்துப் பொருட்கள், இந்திய கடற்படை கப்பலில் அண்மையில் அனுப்பப்பட்டிருந்தன.
இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்துப் பொருட்களை அனுப்பி உதவும்படியும், இலங்கை அரசு மருத்துவர் சங்கம், சமீபத்தில் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையேற்று ஏராளமான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.இவற்றை இந்திய துாதர் கோபால் பக்லே, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த மருந்துகள் இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடிக்கு அப்பால் அரசியல் நெருக்கடியும் நிலவுகின்றது. இந்நிலையில் அரசியல் நெருக்கடிகளுக்கு அப்பால் இந்தியாவின் உதவிகள் தொடருமென்பதே நம்பிக்கையாக இருக்கின்றது.
சாரங்கன்