மாஸ்டர் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் அவர், செல்லும் நிலையில் நான் இல்லை, அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமை மிகுந்த வருத்தமே பழுத்த ஓலைகள் விழுகின்றன, காலத்தின் நியதி அது மாஸ்டர் என்ற சொல் ஒருகாலத்தில் மட்டக்களப்பில் சிவலிங்கத்தையே குறிக்கும் சொல்லாக இருந்தது. இத்தனைக்கும் அவர் ஓர் பாடசாலை மாஸ்டர் அல்ல. பாடசாலையில் படிப்பிக்காத அவருக்கு பலநூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர் மாஸட்ராக அல்ல மாமாவாக அவர் குழந்தைகளின் உள்ளத்தில் கொலு வீற்றிருந்தார். அவரது மறைவு இயற்கையானது, அவர் தனது 89ஆவது முது வயதில் காலமானார். இருந்திருந்தால் அடுத்த ஆண்டில் அவரது 90வயதைக் கொண்டாடியிருப்போம். மாஸ்டர் சிவலிங்கத்தை அனைவரும் ஒரு கதைசொல்லியாக அதிலும் சிறுவர்களுக்கான கதைசொல்லியாக மாத்திரமே பார்க்கிறார்கள். முக நூலில் அப்படியொரு பிம்பமே உருவாகி இருந்தது. நான் அறிந்த மாஸ்டர் சிவலிங்கம் இன்னும் வித்தியாசமானவர், அவருடனான முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நான் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். காற் சட்டை போடும் வயது 13. எட்டாம் வகுப்பு அன்று. பாடசாலை பாரதிவிழா கொண்டாடுகிறது. அதற்கு அவர்கள் அன்றைய மட்டக்களப்பின் பிரபல பேச்சாளர்களான செ, இராசதுரை, கமலநாதன் (அவர் வித்துவான் ஆகாத காலம் அது) எஸ் பொன்னுதுரை ஆகியோரையும் அவர்களுடன் சிவலிங்கத்தையும் அழைத்திருந்தனர், முன்னவர் இருவரும் தமிழரசுக்கட்சி மேடைகளில் விளாசித் தள்ளி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். எஸ் பொன்னுத்துரை இன்னொரு விதத்தில் பிரபலமானவர். அவர்கள் அனைவரும் சிவலிங்கத்திலும் வயது கூடியவர்கள். சிவலிங்கத்தை மட்டக்களப்பு அதிகம் அறியாத காலம் அது. சிவலிங்கம் அப்போதுதான் தமிழ்நாட்டு வாசம் முடித்து, மட்டக்களப்பு திரும்பியிருந்தார். தமிழ்நாடு சென்று வருவது என்பது அன்று பெரிய விடயம். சிவலிங்கம் தனது பேச்சில் தனது தமிழ் நாட்டு அனுபவங்களைச் சுவையாக கூறினார். அவர் அப்போது ஒரு மிமிக்கிறிக் கலைஞராக வளர ஆரம்பித்த காலம் அது, அவர் அன்றைய முதலமைச்சர் காமராஜர்போல திராவிடக் கழக தலைவர் ஈ வே ரா போல திராவிட முன்னேற்றக்கழக தலைவர் அண்ணாதுரைபோல கருணாநிதிபோல சினிமா நடிகர் என் எஸ் கிருஸ்ணன் போல சிவாஜி கணேசன் போல தனது குரலை மாற்றி மாற்றி செய்து அவர்கள் பேசுவதுபோல பேசிக் காட்டினார். சிறுவர்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியம். குசி சந்தோசம் கைதட்டல் பெரு வியப்பு. "பச்ச எடுத்து முஸ்துல அடிச்சன் ஜஸ்து புடிஸ்து" என்று மெட்ராஸ் தமிழை அப்படியே கூறி அதற்கான அர்த்தத்திதையும் விளக்கினார். பச்சத் தண்ணியை எடுத்து முகம் கழுவினேன் ஜலதோசம் பிடித்துகொண்டது என்றது அதன் அர்த்தம். பஸ்து என்றால் பச்சத்தண்ணி என்பது அர்த்தம். முஸ்து என்றால் முகத்தில் என்று அர்த்தம். ஜஸ்து என்றால் ஜலதோசம் என்பது அர்த்தம். புடிஸ்து என்றால் பிடித்துகொண்டது என்பது அர்த்தம்என அவர் விளக்கியபோது எமக்குப் புதிய உலகங்கள் விரிந்தன.கிருஸ்ணா ஒயில் உங்களுக்குத் தெரியுமா? என சிறுவர்களான எங்களிடம் கேட்டார், தெரியாதே என்றோம், ஒயில் என்றால் எண்ணெய் என்பது தெரியும் லாம்பெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் நாம் அறிந்த எண்ணெய்கள்-, ஒயில்கள் இது என்ன கிருஸ்ணா ஒயில்/கிரெசன் ஒயிலை மெட்ராஸ்காரன் கிருஸ்ணா ஒயில் என்று அழைத்ததை "கிருஸ்ணா ஒயில் கிருஸ்ணா ஒயில் வாங்கோ வாங்கோ" என அப்படியே கூவிக் காட்டினார். அவரது உடல் குரல் கண் அனைத்தும் பேசின. கிரசன் ஒயில் தான் நமது லாம்பெண்ணெய் அதாவது மண் எண்ணெய். மிகச்சிறந்த பேசாளர்களான செ.இராசதுரை, கமலநாதன், எஸ் பொன்னுத்துரை ஆகியோரின் பேச்சுகளை விட எம்மை அன்று மிகவும் கவர்ந்தது சிவலிங்கத்தாரின் பேச்சே இந்தச் சிவலிங்கம் இந்தியா சென்றிருக்கிறார், நாம் நூல்களில் படித்த ஈ வே ரா பெரியார். அண்ணதுரை கருணாநிதி போன்றோரைக் கண்டிருக்கிறார். அவர்களோடு பேசியிருக்கிறார், நாம் திரைப்படங்களில் கண்டு பிரமித்த என் எஸ் கிருஸ்ணன், சிவாஜி கணேசன் போன்ற சினிமா நடிகர்களைக் கண்டு உரையாடியுள்ளார் என்ற பிரமிப்பு, அப்பிரமிப்பு சிவலிங்கத்தார் மீதும் ஓர் பிரமிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பிரமிப்பு தொடர்ச்சியாக அவர் செயல்கள் மூலம் வளர்ந்து வந்தது. இது இன்னொரு அனுபவம். எனது 15ஆவது வயதில் என நினைக்கிறேன் அப்போது அவருக்கு 25வயது இரு.க்கும். சங்கிலியன் நாடகம் என நினைவு சிவலிங்கமும் அந்த நாடகத்தில் நடிக்கிறார் . அதில் ஒரு காட்சியில் அவருக்கு அரசன் கோபத்தோடு ஏச சடாரென்று முகத்தை அவர் திருப்பி அஸ்டகோணலாக்கிய காட்சி அப்படியே ஞாபகம் வருகிறது. அது நடந்தது புதிதாகக் கட்டப்பட்ட மட்டக்களப்பு நகர மண்டபத்தில். என் அருகில் உட்கார்ந்திருக்கிறார் பாலு மாஸட்டர், அவர் ஒரு நாடக ஆசிரியர். அத்தோடு அவர் ஒரு பகுத்தறிவுவாதியும் கூட . எல்லாவற்றையும் எல்லாரையும் கிண்டல் பண்ணும் இயல்பினர் அப்படியான அவரே சிவலிங்கத்தாரின் அந்தக் கணநேர நடிப்பில் மயங்கிச் "சபாஸ் சிவலிங்கம்" என்று கூவி விட்டார்.சபையிலிருந்து மாஸ்டர் சிவலிங்கத்திற்குக் கிடைத்த அந்தப் பாராட்டு. இப்போது ஞாபகம் வருகிறது. ஆம் மாஸ்டர் சிவலிங்கம் சிறந்தவோர் நடிகர். பின்னாளில் நகைச்சுவை நடிகர் இந்த நகைசுவையை அவர் வளர்த்தெடுத்து பின்னாளில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நகைச்சுவை மாமாவும் ஆனார். மிமிக்கிறி கலைஞனாக, நகைச்சுவைப் பேச்சாளனாக பகுத்தறிவுவாதியாக அரசியல் செயற்பாட்டாளனாக, சத்தியாக்கிரகியாக, நாடக நடிகனாக கூத்துக்கலைஞனாக வில்லுப்ப்பாட்டுக் கலைஞனாக சிறுவர்களுக்கான எழுத்தாளனாக கதைசொல்லியாக கார்ட்டூனிஸ்டாக பன்முகம் காட்டியவர் மாஸ்டர் சிவலிங்கம் அவரது இழப்பு துயரத்திற்குரியதன்று அவர் வாழ்வு கொண்டாட்டத்திற்குரியது.
பேராசிரியர்
சி.மௌனகுரு