![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/05/22/a24.jpg?itok=y4sqwytT)
(கடந்த வாரத் தொடர்) இதன் காரணமாகவே இந்தப் போராட்டங்கள் எந்த ஒரு அரசியல் தலைமைத்துவமும், பின்னணியும் இல்லாமல் இடம்பெறுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் 'நாம் யாவரும் தலைவர்கள்' என்ற செய்தியினை வழங்குகின்றார்கள். போராட்டத்தை நடத்துவதற்கு மரபுரீதியாக நாம் பார்க்கும் தலைமைத்துவம் அவசியம் இல்லை என்பதனை இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. முறையான தலைமைத்துவம் அல்லது அரசியல் பின்புலம் இல்லாமல் இப்போராட்டங்கள் இடம்பெறுவதால் இதனைப் பலரும் கேலி செய்தார்கள். இளைஞர்களின் பொழுதுபோக்குக்கான களமாக காலிமுகத்திடலை விமர்சித்தார்கள். உணவு, குடிநீர் மற்றும் ஏனைய வசதிகள் இல்லாமல் போகும்போது சுயமாகவே கலைந்து செல்வார்கள் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். கடந்த காலங்களில் இலங்கையில் அவ்வப்போது இடம்பெற்ற போராட்டங்களில் ஒன்றாக இதனைப் பார்த்தார்கள். போராட்டத்தை குழப்புவதற்கு அரச தரப்பினரால் பல முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. அவை தொடர்கின்றன. ஆயினும் அவை யாவற்றையும் போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக முறியடித்து போராடி வருகின்றார்கள். இதன் காரணமாக இப் போராட்டங்கள் மீதும், அதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீதும் பெரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்புடைமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பின்புலங்களைக் கொண்டவர்கள் இப்போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதனை காணமுடிகின்றது. அதில் உணவு அடிப்படை வசதிகள் என்பனவும் அடங்கும். இவை இந்தப் போராட்டத்தினை மேலும் சக்திபடுத்தியுள்ளது. அரசியல் கலப்பற்ற போராட்டமாக இது தொடர்வதற்கு பிறிதொரு காரணமுண்டு. அதுவே அரசியல்வாதிகள் தலையிட்டால் ஒட்டுமொத்த போராட்டத்தினையும் தமது நலன்களுக்காக திசைதிருப்பி விடுவார்கள் என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் நிலவுகின்றது. எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாது ஒரு மாதகாலத்திற்கு மேலாக பல தடைகளைத் தாண்டி இடம்பெறும் போராட்டம் இது. இது மக்கள் போராட்டத்திற்கான புதிய கலாசாரத்தை வழங்கியுள்ளது. மக்களே தலைவர்கள் என்ற செய்தியினை மீள நினைவூட்டுகின்றது.
இப்போராட்டங்களில் காணக்கூடிய பிரிதொரு விடயம் யாதெனில், தகவல் தொழிநுட்பத்தினையும் டிஜிட்டல் ஊடகங்களையும் வினைத்திறன் மிக்க வகையில் கையாள்வதாகும். பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் ஏனைய தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக முறியடித்து வருவதற்கு இவை பெரியளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றன. இவை இளைஞர்கள் ஆக்கத்திறனுடன் சிந்திப்பதற்கும் புத்தாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மற்றும் கவர்ச்சிகரமாக, யாவரையும் ஈர்க்கும் வகையில் போராட்டத்தினை கொண்டு நடாத்துவதற்கும் இந்த விஞ்ஞான தொழிநுட்பத்துடன் அவர்களுக்கு இருக்கும் பரிட்சயம் முக்கிய காரணமெனலாம். கடந்த காலங்களில் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் இருந்து பாடங்களை கற்று அதனை இங்கு நடைமுறைப்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
மக்கள் போராட்டம் தொடர்பாக எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் காலிமுகத்திடலில் அணிதிரண்டு இருப்பது முக்கிய விடயமாகும். இவர்கள் ஜனநாயகத்தின் விழுமியங்களை, ஜனநாயகப் போராட்டம், அகிம்சா வழிப்போராட்டம் தொடர்பாக பிரயோக ரீதியான அனுபவத்தினை, அறிவினைப் பெற்று வருகின்றனர். இதனை இந்தப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தினை நோக்கும்போது தெளிவாகின்றது. சிறப்பான நூலகம் ஒன்று தாபிக்கப்பட்டிருப்பது இதனை மேலும் உறுதி செய்கின்றது.
போராட்டங்களில் வெளிப்படும் பிரதான முழக்கங்கள்
இந்தப் போராட்டங்களின் ஊடாக எழுப்பப்படும் மிக முக்கிய கோசங்களாக காணப்படுவது பின்வரும் விடயங்களாகும்.
(1) இருக்கின்ற ஆட்சி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
(2) ஊழல், மோசடி இல்லாத இலங்கையினை உருவாக்குதல் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.
(3) ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பொதுமக்களின் பணம் மீளப்பெறப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பொதுவுடைமை ஆக்கப்படுதல்.
(4) பொது நிறுவனங்கள் மிகவும் பலவீனமாக காணப்படுவதால் அவை மறுசீரமைக்கப்பட வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது பிரிதொரு கோரிக்கை. இங்கு சட்டமா அதிபர் காரியாலயம், கணக்காய்வாளர் நாயகம் காரியாலயம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு,மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
(5) அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துக்களை மீளப்பெறுவதற்கான சட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் சொத்துக்களை பகிரங்கப்படுத்துதல் தொடர்பான சட்டங்களை பலப்படுத்துதல்.
(6) குற்றவியல் நீதி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் - இதன் மூலம் சட்டத்தினை யாவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சட்டத்தினை அமுல்படுத்தும் நிறுவனங்களை அரசியல் கலப்பற்ற சுயாதீனமான நிறுவனங்களாக மாற்ற வேண்டும்.
அதிகாரம் ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரத்தினை விட உயர்வானது என்ற கோசம் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றது. இது மக்கள் இறைமையின் முக்கியத்துவத்தினை, மக்களே ஆட்சி அதிகாரத்தின் மூலாதாரம் என்பதனை மீண்டும் ஒரு முறை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இச்செய்தி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்துள்ளதுடன் வெறுமனே இவ்வளவு காலமும் வாக்காளராக இருந்த மக்கள் பிரஜைகளாக மாறுவதற்கு வழி செய்துள்ளது. இது ஒரு முக்கியமான மாற்றமாகும். ஜனநாயகத்தினை மற்றும் நல்லாட்சியினை பேணுவதற்கு செயலூக்கமுள்ள பிரஜைகள் மற்றும் தர்க்க ரீதியாக சிந்திக்கும், அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும், விமர்சிக்கும் ஆட்சிமுறை செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுகின்ற பிரஜைகள் பெரிதும் அவசியம் என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உலகறிந்த அரசியல் விஞ்ஞான பேராசிரியையான பிப்பா நொறிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் குறுகிய இலாபங்களுக்காகவும், பொருள் சார்ந்த நன்மைகளுக்காக வெறும் வாக்காளர்களாக இருந்த இலங்கை மக்கள் இன்று பிரஜைகளாக மாறி வீதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர மாற்றத்தை கோரி நிற்பது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது எனலாம். வெறும் உணர்ச்சிகளுக்கும், இன, மத தேசியவாத சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த தென்னிலங்கை மக்கள் மாத்திரமின்றி ஏனைய சமூகத்தவர்களும் இவ்வாறான மாற்றத்தினை தழுவியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
(7) இவை எல்லாவற்றையும் விட பிறிதொரு முக்கிய செய்தி இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது சிறுபான்மை மக்களை பொறுத்தவரை மிக முக்கியமான விடயமாகும். அது வேற்றுமையில் ஒற்றுமை' என்ற செய்தியாகும். சகல சமூகத்தவரும் ஒன்றாக போராடுவது, உறங்குவது, உணவுண்பது, ஒன்றாக கைகோர்த்துக் கோசம் இடுவது, பிரச்சாரம் செய்வது போன்ற செயற்பாடுகள் யாவும் நாம் இலங்கையர் இங்கு சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லை என்ற செய்தியினை வெளிப்படுத்தி உள்ளது. இன மற்றும் மதவாதமற்ற இலங்கை வேண்டும் என்பது சிறுபான்மை இனத்தவரது நீண்ட கால கனவாகும். அதற்கான ஆரம்பமாக இதனை நாம் நோக்க முடியும்.
இந்தப் போராட்டம் முழுவதும் இனவாதத்திற்கு எதிராக கோசம் எழுப்பப்படுவது, பன்மைத்துவம் மதிக்கப்படுவது, ஏற்றுக்கொள்ளப்படுவது, சமத்துவம், சமவாய்ப்பு ஆகிய சித்தாந்தங்கள் பேணப்படுவது தொடர்ச்சியாக காணக் கூடியதாக உள்ளது. மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டமை இனவாதத்திற்கு எதிரான முக்கிய செய்தியை பறைசாற்றுகிறது. 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'சிங்களம் மட்டுமே' சட்டம் இந்த நாட்டினை சீர்குலைந்துள்ளது என்பதனையும், இனவாதம் இலங்கை தேசத்தினை சுதந்திரத்திற்குப் பின் 74ஆண்டுகளாக மிக மோசமான அழிவுக்கு இட்டுசென்றுள்ளது என்பதனையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள இளைஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் புலப்படுகின்றது. ஆயினும் இத்தகைய போக்குகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது சிறுபான்மை சமூகம் முன்வைக்கும் பிரதான கேள்வியாகும். இதற்கு அவர்களின் கடந்தகால அனுபவங்கள் காரணமாக அமையலாம்.
பேராசியர் ஜயதேவ உயன்கொட நாடுதழுவிய ரீதியில் இடம்பெறும் போராட்டங்களின் ஊடாக கோரப்படும் System change என்பது பின்வரும் விடயங்களை வலியுறுத்துவதாக வாதிக்கின்றார். 1. ஆதிக்கமிக்க அரசியல் கலாசாரத்தினை மாற்றுதல் 2. பொதுக்கொள்கை உருவாக்க செயன்முறை மற்றும் நடைமுறையினை மாற்றுதல். 3. ஆளும் வர்க்கம் அரசு சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் நடைமுறையினை மாற்றுதல் 4. இலங்கையினுடைய பிரதிநிதித்துவ அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்லுதல் 5. அசமத்துவம் மற்றும் அநீதிகளுக்கு காரணமாக அமைந்துள்ள சமூக, பொருளாதார முறையில் மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புகின்றார்கள்.
போராட்டக்காரர்கள் முன்னுள்ள சவால்கள்
எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் மாறாக பிறிதொரு முக்கிய கேள்வியினையும் எழுப்புகிறது. இலங்கையினுடைய கடந்தகால நிகழ்வுகள், ஆழமாக வேறுன்றியுள்ள இன,மத, தேசியவாதம் என்பவற்றினை வைத்து நோக்கும் போது ஒரு தீவிர ஐனநாயக மறுசீரமைப்பு இந்தப் போராட்டங்கள் மூலம் ஏற்படுமா என்ற வினாவிற்கு இன்னும் விடைகாண முடியாமல் உள்ளது. இப் போராட்டம் வெறுமனே ராஜபக்ச குடும்பத்தினரை விரட்டியடிப்பதுடன் மட்டுப்படுத்தப்படுமா? நிறுத்தப்படுமா? அல்லது அதற்கு அப்பால் சென்று இந்த நாட்டின் ஆட்சிமுறையில் மற்றும் ஜனநாயக கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி இப் போராட்டங்கள் நீடிக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவை சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை முக்கியமான கேள்விளாகும். காரணம் ராஜபக்சக்களை விரட்டியடிப்பதன் முலம் மாத்திரம் இந்த நாட்டில் சகல சமூகத்தவர்களும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப முடியாது.பன்மைத்துவம், சுதந்திரம், சமவாய்ப்பு, யாவரையும் உள்வாங்கும் ஆட்சி, சிறுபான்மையினருக்கான நீதி, அரசியல் தீர்வு என்பன கிடைக்கப்போவதில்லை.அவர்களை விரட்டியடிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை காணமுடியாது.
ஆகவே தற்போதையப் போராட்டங்களில் இந்த விடயங்களும் பிரதிபலிக்கப்பட வேண்டும். இது குறித்து புரிதலை சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடன் வாழக்கூடிய புதிய இலங்கையினை கட்டியெழுப்புவதற்கான நல்லதொரு வாய்ப்பாக தென்படுகின்றது. (தொடரும்)
கலாநிதி இரா. ரமேஷ்
சிரேஸ்ட விரிவுரையாளர்,
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்