![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/05/22/b1.jpg?itok=jlhC6YZD)
இளம் பெண் சுயதொழில் முயற்சியாளர் வாசுகி சிவராஜா
யுத்த சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் எனது தந்தை திடீரெனக் காணாமல் போனபோது, எமது குடும்பம் வருமானத்தை இழந்து தவித்தது. அவ்வேளையில் வறுமையால் வாடிய நாம், ஒருவேளைச் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். இளமையில் பசியின் கொடுமையை அனுபவித்த நான், உணவகமொன்றை உருவாக்கி அதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு மாத்திரமின்றி, பசியால் வாடுவோருக்கும் உதவியளிக்க வேண்டுமென்று எண்ணினேன். இவ்வாறானதொரு எதிர்பார்ப்பே தற்போது உணவகமொன்றை தலைமை தாங்கி நடத்துவதற்கு என்னை உந்தியதாக, இளம் பெண் சுயதொழில் முயற்சியாளரான திருமதி வாசுகி சிவராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த 37வயதுடைய வாசுகி, கொம்மாதுறைக் கிராமத்தில் 'அமிர்தம்' எனும் பாரம்பரிய உணவகமொன்றை சிறந்த முறையில் நடத்தி வருகின்றார். சகலவிதமான பாரம்பரிய உணவுகளையும் தயாரித்து அவர் விற்பனை செய்வதால், 'அமிர்தம்' என்றால் 'வாசுகி', 'வாசுகி' என்றால் அமிர்தம் எனும் அளவிற்கு அவ்வுணவகமும் சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.
இந்நிலையில், 'அமிர்தம்' உணவகத்தில் சிறந்த சுகாதார தரத்தை பேணியமைக்காக, கடந்த 2017ஆம் ஆண்டில், கிழக்கு மாகாண ரீதியில் இளம் பெண் தொழில் முயற்சியாளருக்கான விருது, 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் வாசுகிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமது உணவகம், இளமையில் தான் பட்ட கஷ்டம். அக்கஷ்டத்திலிருந்து தான் முன்னேறி வருகின்றமை பற்றி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் அவர் பகிர்ந்துகொள்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது குடும்பம், நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட சிறிய குடும்பமாகும். எனது பெற்றோருடன், எனக்கு ஒரு தம்பி இருக்கின்றார். இவ்வாறு நாம் இருந்து வருகையில், யுத்த சூழ்நிலை நிலவிய காலப்பகுதியான 1990ஆம் ஆண்டில் எனது தந்தை காணாமல் போனார். அப்போது எனக்கு 10வயதேயாகும். எனது தந்தை காணாமல் போனதை எண்ணி, எனது தாயுடன் சேர்ந்து பிள்ளைகளாகிய நாமும் வேதனையால் துடித்தோம்.
தந்தை காணாமல் போன துயரம் ஒருபக்கம் எம்மை வாட்டி வதைக்க, மறுபுறம் குடும்ப வருமானமின்றி அவதிப்பட்டோம். இந்நிலையில், எமது குடும்பச் செலவைச் சமாளிப்பதற்காக எனது தாயார் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று, அங்கு சுமார் இரண்டு வருடகாலம் பணியாற்றியிருந்தார். அதன் பின்னர், எமது ஊர் திரும்பிய எனது தாயார், அப்பம் சுட்டு விற்கும் தொழிலை ஆரம்பித்தார்.
அப்போது எனது பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டு, தாயாரின் அப்பம் சுட்டு விற்கும் தொழிலுக்கு நான் ஒத்தாசையாக இருந்தேன். இச்சூழ்நிலைக்கு மத்தியில், எனது பாடசாலைக் கல்வியில், க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியடைந்து, க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வியைத் தொடர்ந்த நான், தாயாருடன் சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்க வேண்டி ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால், க.பொ.த. உயர்தரக் கல்வியை இடைநடுவில் கைவிட நேர்ந்தது என்கின்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து, தாயாரின் அப்பம் சுட்டு விற்கும் தொழிலுக்கு ஒத்தாசையாக இருந்து வந்ததோடு, ஏனைய உணவுகளைத் தயாரிப்பது பற்றியும் தாயாரிடம் பழகிக்கொண்டேன்.
உணவுகளைத் தயாரிக்க நன்கு பழகிக்கொண்ட நான், கடந்த 2017ஆம் ஆண்டு 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 'அமிர்தம்' பாரம்பரிய உணவகத்தை நடத்துவதற்கு தலைமை தாங்கினேன். இதில் என்னுடன் சேர்த்து 15 பெண்கள் வேலை செய்கின்றார்கள். நாங்கள். 15பேரும், 15வகையான உணவுகளைத் தயாரிப்போம்.
எமது உணவகத்தில் வேலை செய்யும் அத்தனை பெண்களும் கணவரின்றி நலிவுற்ற பெண்களேயாவர் என்கின்றார் அவர்.
'அமிர்தம்' உணவகம் ஆரம்பிக்கப்பட்டபோது, வியாபார நுட்பம் பற்றிய அறிவு எனக்கு போதியளவாக இருக்கவில்லை. 'அமிர்தம்' உணவகம் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 6 மாதகாலத்தில். 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பினால் 35பெண்களைத் தெரிவுசெய்து 'வியாபாரம் என்றால் என்ன' எனும் தலைப்பில் 7நாள் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட நான், வியாபாரத்தின் நுட்பம் பற்றிய அறிவை அறிந்துகொண்டதோடு, அதை எமது வியாபாரத்திலும் நடைமுறைப்படுத்த தொடங்கினேன். அதிலிருந்து உணவகத்தை நான் சிறந்த முறையில் நடத்தி வருவதோடு, இலாபத்தையும் பெற்று வருகின்றேன் என்கின்றார் அவர்.
இது இவ்விதமிருக்க, எமது உணவகம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நான் பல சவால்களை எதிர்நோக்கினேன். எமது உணவகமானது சுமார் 2வருடகாலம் இலாபத்துடன் சிறந்த முறையில் இயங்கி வந்தபோதிலும், பின்னர் போட்டி மனப்பான்மை காரணமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இவ்வாறான நிலையில், நான் புதியதொரு உத்தியைக் கையாண்டேன். அதாவது, கடினமென்று ஏனையோர் செய்யத் தயங்கும் உணவுகளை நான் தயாரிக்கத் தொடங்கினேன். இதனைத் தொடர்ந்து, எமது உணவகம் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கியது.
சைவ உணவுகள் மாத்திரமே விற்பனை செய்யப்படும் எமது உணவகத்தில், இலைக்கஞ்சியிலிருந்து சகலவிதமான உணவுகளும் மூன்று வேளைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தோடு, சிற்றுண்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அசைவ உணவுகளுக்காக வாடிக்கையாளர்கள் என்னிடம் ஓடர் செய்யும் பட்சத்தில், அவற்றை எனது வீட்டில் வைத்து தயாரித்து விற்பனை செய்கின்றோம் என்கின்றார் அவர்.
எப்போதும் எமது உணவகத்தில் உணவுகளுக்கு கேள்வி அதிகம் காணப்படுவதோடு, மிகவும் பரபரப்பான இக்காலகட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என்று அனைவரும் வந்து தங்களுக்கு விரும்பிய உணவுகளை எம்மிடம் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், தற்போது சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவும் இக்காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் அனேகமான உணவகங்கள் மூடப்படுவதும் திறப்பதுமாக காணப்படுகின்றன. ஆனால், எமது உணவக வியாபாரமானது சோபை இழந்துவிடவில்லை. தற்போது நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டினால் வீடுகளில் உணவுகளைத் தயாரிக்க முடியாதவர்கள் கூட, எமது உணவகத்தில் உணவுகளை வாங்குகின்றனர். இதனால் எமது வியாபாரம் பெருகுகின்றது என்கின்றார் அவர்.
நாமும் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. தற்போது மாற்றீடாக, விறகு அடுப்பிலும் தூசு அடுப்பிலும் உணவுகளை சமைக்கத் தொடங்கியுள்ளோம் என்கின்றார்.
நான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு கடினமான முயற்சிக்கு மத்தியில் எமது வியாபாரத்தை கவனித்து வருகின்றேன். நேர முகாமைத்துவத்தைக் கையாள்வதே எனக்கு பெரிய விடயமாக இருக்கும். வீட்டுக் கடமைகளையும் கவனித்துக்கொண்டு எமது வியாபாரத்தையும் சிறந்த முறையில் கவனிக்கின்றேன்.
எமது வியாபாரத்திற்கு நான் தலைமை தாங்கியபோது, ஒரு வகையான பீதியை, வெட்கத்தை உணர்ந்தேன். இருந்தபோதிலும், அவற்றை ஒருபுறம் தூக்கி எறிந்துவிட்டு எனது காலில் நான் நிற்க வேண்டுமென்று மன உறுதியை ஏற்படுத்தினேன். ஏனையோருக்கு பயந்தால், எனது வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பதை உணர்ந்தேன்.
ஆகையால், என்னைப் போன்ற பெண்களுக்கு நான் கூற விரும்புவது யாதெனில், பெண்களாகிய அனைவரினுள்ளும்; ஏதோவொரு திறமை ஒளிந்துகொண்டிருக்கின்றது. அத்திறமையை நாம் அடையாளம் கண்டு, உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
எனது வாழ்க்கையில் முன்னேறி வரும் எனக்கு, சமூகத்தில் நலிவுற்ற பெண்களை முன்னிலைக்கு கொண்டுவர வேண்டுமென்று மனோ தைரியம் ஏற்பட்டுள்ளதோடு, அதற்கான நடவடிக்கையிலும் நான் ஈடுபட்டு வருகின்றேன் என்கின்றார் அவர்.
யோகமலர் அஜித்குமார்
ஆரம்பத்தில் ஓர் ஆசிரியையாக கடமையாற்றி வந்த எனக்கு, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வேளையிலேயே, அச்சமூகத்தை வலுவூட்ட வேண்டுமென்று எண்ணினேன். இந்நிலையில், எனது ஆசிரியைத் தொழிலைக் கைவிட்டு, பெண்களுக்கான சமூகப் பணியை முதற்கட்டமாக முன்னெடுக்க தொடங்கினேன் என, 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் ஸ்தாபகர் திருமதி யோகமலர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பானது, நலிவுற்ற பெண்களுக்காக மாத்திரமின்றி, சமூகத்தில் நலிவுற்ற ஆண்களின் முன்னேற்றத்திற்கும் கைகொடுக்கத் தொடங்கியது. 'ஆண், பெண் இருவருக்கும் சமமான முன்னுரிமை' எனும் கொள்கையுடன் இவ்வமைப்பு இயங்கத் தொடங்கியது. ஆரம்பத்தில், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தை மையப்படுத்தி தனது சமூகப் பணியை தொடங்கிய 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பானது, தற்போது கிழக்கு மாகாணம் முழுவதும் அதன் பணியை முன்னெடுக்கும் வகையில் விரிவடைந்துள்ளது.
தற்போது இவ்வமைப்பினால், 75சதவீதமான பெண்களும் 25சதவீதமான ஆண்களும் பயனடைந்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஏழ்மையில் வாழும் குடும்பங்கள், இளவயதுத் திருமணம், சிறார்களின் பாடசாலை இடைவிலகல் உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு, அப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் எமது அமைப்பு செயற்படத் தொடங்கியது.
பெண்களின் பிரச்சினைகளை நோக்கியபோது, பெண்களின் தலைமைத்துவ பண்பு குறைவாக காணப்பட்டமை, சமூக, பொருளாதாரத்தில் பெண்கள் மந்தகதியில் காணப்பட்டமை, ஆண்களில் பெண்கள் தங்கி வாழ்தல், வீண் பொழுதுபோக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன.
இந்நிலையில் ஆண்களுக்கு ஒத்தாசையாக பெண்களும், பெண்களுக்கு ஒத்தாசையாக ஆண்களும் இருக்கும் வகையில், வேலைத்திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டன.
பெண்களின் வீட்டுக் கடமைகளுக்கான நேரம் போக, எஞ்சிய நேரத்தை பெறுமதி மிக்கதாக மாற்றியமைத்தல், சிறுதொழில் முயற்சி, அதில் பணம் சம்பாதித்தல், சேகரித்தல், கல்வியறிவூட்டல் போன்ற விடயங்களை கற்றுக்கொடுத்து, அவர்களை வளமாக்கினோம்.
இதில் பெரும்பாலான பெண்கள் முன்னேறியதோடு, சுயதொழில் செய்து சேமிக்கத் தொடங்கினார்கள். இவ்வாறு முன்னேறியவர்களில் ஒருவரே, இளம் பெண் சுயதொழில் முயற்சியாளரான திருமதி வாசுகி சிவராஜா. அவரே 'அமிர்தம்' உணவகத்தின் தலைவராவார். தற்போது எமது நாட்டில் நிலவும்; பொருட்களின் விலையேற்றம், மூலப்பொருட்களின் தட்டுப்பாடு போன்ற பொருளாதார தொய்வு நிலை, எமது சமூகப் பணியிலும் சற்று தொய்வை உருவாக்கியுள்ளது. இத்தொய்வு நிலைக்கு மத்தியிலும் எமது சமூகப் பணியை முன்னெடுப்பதே எமது தற்போதைய சவாலாக காணப்படுகின்றது என்கின்றார் அவர். 'காவியா' பெண்கள் அபிவிருத்தி அமைப்பை நான் உருவாக்க முற்பட்ட வேளையில், என்னால் இப்பாரிய சமூகப் பணியை முன்னெடுக்க முடியுமா என்ற தயக்கம் காணப்பட்டது. இருந்தாலும், அத்தயக்கத்திற்கு இடங்கொடுக்காமல், திடமான மன நம்பிக்கையுடன் இவ்வமைப்பை உருவாக்கினேன்.
அத்தயக்கம் கூட எனக்கு சாதிக்கக்கூடியதாக அமைந்து விட்டது. எத்தடைகள் வந்தாலும் வென்று செல்வோம் என்கின்றார் அவர்.
ஆர்.சுகந்தினி