![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/05/17/a16.jpg?itok=kZfz4y6M)
இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலைமைகளால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றதைத் தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் பிரதமர் பதவியை ஏற்ற அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த அமைச்சரவையும் விலகியது. இவ்வாறான நிலையில் சுமார் 72மணித்தியாலங்கள் இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் இல்லாது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருடன் மாத்திரம் காணப்பட்டது.
நாட்டின் அரசியல் நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சித் தரப்பினருக்கு ஜனாதிபதி பல தடவை அழைப்பு விடுத்திருந்தார். இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை. மாறாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிச் சென்ற பின்னரே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டது.
மறுபக்கத்தில், மற்றுமொரு எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.
எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்திலிருந்து விலகிய 11கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனக் குழு டலஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால.டி.சில்வா, விஜயதாச ராஜபக்ஷ ஆகிய மூவரில் ஒருவரைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. இருந்தபோதும் கடந்த புதன்கிழமை மாலை ரணில் விக்கிரமசிங்கவை அழைத்திருந்த ஜனாதிபதி, அவரைப் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை பிரதமராகப் பதவியேற்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததுடன், குறுகிய காலத்தின் பின்னர் ஜனாதிபதி பதவி விலகுவார் என்ற அடிப்படையில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருந்தபோதும் பிரதமராக ரணிலை நியமிக்க முடிவு எடுத்த பின்னர் காலதாமதாகவே அக்கடிதம் கிடைத்ததாகவும், வேண்டுமாயின் அமைச்சரவைக்குப் பிரதிநிதிகளை முன்மொழியுமாறும் ஜனாதிபதியிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க சில மாதங்களுக்கு முன்னரே தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வந்தார். உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தீர்வொன்றைப் பெறாவிட்டால் மோசமான சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதையும் அவர் கணித்திருந்தார்.
இருந்தபோதும் முன்னைய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்காமையால் தற்பொழுது மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே தான் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு சர்வதேச நாடுகளுடன் காணப்படும் தொடர்புகள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பி நிலையான ஸ்தானத்துக்குக் கொண்டுவர அவருடைய ஒத்துழைப்பு நிச்சயம் அவசியம் என்பது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சாரத் தடை போன்ற உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான வழிகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க மீது மக்களுக்கு நம்பிக்கை காணப்படுகிறது.
பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர், சீனத் தூதுவர் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதற்கு அந்நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இது மாத்திரமன்றி பிரதமர் பதவியேற்று ஒரு சில நிமிடங்களில் டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என்ற செய்தியையும் தெரிவித்திருந்தார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்துடன் கொண்டிருக்கும் நல்லுறவுகளின் அடிப்படையில் நாட்டிற்குப் பல்வேறு உதவிகளைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.
இருந்தபோதும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் எதுவும் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயாதீனக் குழு உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லையென்று தெரிவித்துள்ளன.
மறுபக்கத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பிரதான எதிர்க்கட்சி பிரதமருக்கு சவால் விடுத்துள்ளது. எனினும், அரசாங்கத்தில் பங்கெடுக்காவிட்டாலும் கொண்டு வரப்படும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என சுயாதீனக் குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தாலும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையுடனேயே செயற்பட வேண்டிய நிலை அவருக்குக் காணப்படும்.
இது இவ்விதமிருக்க, கடந்த திங்கட்கிழமை அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சவால்களுக்கு முகக்கொடுத்து உடனடியான தீர்வுகளை முன்வைக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையும் அரசாங்கத்துக்குக் காணப்படுகிறது.
பி.ஹர்ஷன்