அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான் | தினகரன் வாரமஞ்சரி

அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

கொட்டகலை தொண்டமான் தொழில்நுட்ப பயிற்சி வளாகத்தில் 1998ஆம் ஆண்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது.இந்திய டாக்டர்களின் பரிசோதனையும் இலவச மருந்துவ முகாமை இ.தொ.கா ஏற்பாடு செய்திருந்தது. இறுதிநாள் நிகழ்வில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் பங்கேற்கிறார்.அப்போது அவர் உடல் நலம் குன்றியிருந்தார் நடையில் சிறிது தளர்வு தெரிந்தது. அவரைத் தாங்கியபடி மருத்துவ முகாமைப் பார்வையிட உதவினார் ஓர் இளைஞர், அவர் தான் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பேரன் ஆறுமுகன் தொண்டமான்.

அந்நேரம் அவர் தனது தாத்தாவுக்கு அந்தரங்கச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது துடி துடிப்பும் கம்பீர தோற்றமும் வருங்காலத்தில் தலைமையை தாங்கும் உணர்வைத் தந்தது.

அப்போது அவர் அரசியலில் ஈடுபட்டிருந்தார். அவரது முதல் அரசியல் பிரவேசம் 1990ல்.தாத்தாவோடு பவனி வந்தார். இ.தொ.கா. பாசறையில் பயிற்சி பெற்றார். இ.தொ.கா அப்போது வெறும் தொழில் சங்க காரியங்களை மட்டும் கவனிக்கும் அமைப்பாக இருக்கவில்லை. முழு மலையகத்தினதும் சமூகவியல் மாற்றங்களை நிர்ணயிக்கும் சக்கியாக விளங்கியது. சௌமிய மூர்த்தியின் சாதுர்யமான தலைமைத்துவம் ஒரு கட்டுக் கோப்பை உருவாக்கி விட்டிருந்தது.

அவரது திறமை பளிச்சிட்டது. இதனாலேயே 1994ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக நியனம் பெறும் தகுதி கிடைக்கப்பெற்றது. இதே ஆண்டு (1994) பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடந்தது. அதில் முதல் தடவையாக அமரர் ஆறுமுகன் தொண்டமான் போட்டியிட்டார். நுவரெலியா மாவட்டத்தில் களம் இறங்கிய அவர் 74,000வாக்குகளைப் பெற்றார்.இந்த வாக்குகள் மூலம் இரண்டு செய்திகளை மலையக மக்கள் அறிவித்திருந்தனர்.ஒன்று அமர் சௌமிய மூர்த்தியின் அரசியல் தரிசனம் சரியானதே என்பது.

அடுத்தது இ.தொ.கா.வின் அடுத்தவாரிசாக வரும் தகுதி ஆறுமுகன் தொண்டமானுக்கே உள்ளது என்பதாகும். 1999இல் சௌமிய மூர்த்தி தொண்டமான் இயற்கை எய்தினார். இ.தொ.காவில் சலசலப்பு எழுந்தது. சௌமிய மூர்த்தியோடு தோளோடு தோள் நின்று போராடி அனுபவம் பெற்ற உயர்மட்டத் தலைவர்கள் பலர் உடனிருந்தார்கள். தலைமைத்துவ போட்டியொன்று தோன்றும் ஆபத்து தெரிந்தது. திறைமறைவு சங்கதிகள் சிலவும் நடந்தேறின. இ.தொ.கா சிதறிப்போகும் என்று எதிர்வு கூரல்கள் எழுந்தன. இருந்தும் ஆறமுகன் தொண்டமான் துணிவு கொண்டார். தலைமைப் பொறுப்பை தாங்கிக் கொள்ள தானே முன்வந்தார்.ஆனால் ஆறுமுகன் தொண்டமான் தனது மன உறுதியை கைவிடவே இல்லை. அவரின் நிதானமும் சவாலை சாதித்துக் காட்டும் இளமைத் துடிப்பும் இ.தொ கா தொண்டர்களுக்கு உயிரூட்டம் தந்தது. சௌமியமூர்த்தியின் மறைவுக்குப் பின் திரைமறைவு செயற்பாடுகளினால் தடுமாற்றம் அடைந்திருந்த அவர்கள் திருப்தியுடன் பெருமூச்சு விட்டார்கள். இது ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆறுதலை தந்தது. தன்னை எதிர்ப்பவர்கள் விமர்சிப்பவர்களுக்குப் பதில் கூற முனையாத அவர் தனது பணியினை தக்க முறையில் நிறைவேற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தார்.

இதனால் நாளடைவில் அவரக்கெதிரான தனிப்பட்ட வாய் பேச்சுக்கள் எல்லாமே மௌனித்துப் போயின. இது அவருக்கு மேலும் ஊக்குவிப்பை தந்தது. இதை இறுதிவரை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். 2000ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி,2004ல், 2010இலும் வெற்றி வாகை சூடினார். மக்கள் அவர் வார்த்தைகளை நம்பினார்கள். மெல்லமெல்ல தாத்தாவைப் போல தனது பாணியையும் மாற்றித் கொள்ள ஆரம்பித்தார். அவர் கடந்து வந்த பாதையினை உன்னிப்பாக அவதானிப்பவர்களால் இதனை நன்கு உணர முடியும்.

கூட்டு ஒப்பந்தம் பேச்சு வார்த்தைகளின் போது அதிரடியாக முடிவுகளை எடுத்தார். இதே போலவே அமைச்சர் பதவிகளை வகித்த வேளைகளில் தனது சாணக்கியமான அணுகுமுறைகளை பல தடவைகளில் நிரூபித்துள்ளார். இவர் 1999இல் கால் நடை அபிவித்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், 2001இல் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், 2006ஆம் ஆண்டு இளைஞர் வலுவூட்டல் தோட்ட வீடமைப்பு அமைச்சர், 2019ஆம் ஆண்டு இளைஞர் வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சுப் பொறுப்புகளை இறுதி மூச்சுவரை வகித்தார்.

இதன் மூலம் தோட்ட மக்களின் தனிவீட்டுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதே போல வடக்கு கிழக்கு மக்களும் தமது மீள குடியேற்றம் துரிதப்படுத்தப்படும் என காத்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக காலன் அவரை 55வயதில் அழைத்துச் சென்று விட்டான். அமரர் ஆறுமுகன் தொண்டமான் எந்த முடிவை எடுத்தாலும் அது மக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்து. 1996இல் இ.தொ.கா அப்போது அரசின் பங்காளி கட்சி.சம்பள ஒப்பந்த விவகாரத்தின் போது தொழில் அமைச்சு பாரபட்சமாக நடப்பதாக கூறி அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அசத்தினார். கடந்த ஆட்சியில் முன்னாள் பிரதமர் ரணிலுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தது பொதுஜன பெரமுன. அப்பக்கம் சார்பு கொண்டிருந்தார் அமரர் ஆறுமுகன். ஆனால் அதிரடியாக அவர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து அசர வைத்தார். இது அவரது அரசியல் முதிர் நிலையாகும்.

1000ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப் போதில்லை என்று முன்னாள் இந்நாள் அரசாங்கங்களே நம்பு கின்றன. கம்பனி தரப்பு சகல கதவுகளையும் இறுகச் சாத்திவிட்டுள்ளன. தொழிலாளர்கள் கிட்டுமா? கிட்டாதா என்று ஏக்கம் கொண்டுள்ளனர். நாடே நம்பிக்கை இழந்திருந்த நிலையில் மூச்சின் முணுமுணுப்பு முடங்கும் வரை அவரது பேச்சின் தொணி 1000ரூபாவை வாங்கியே தருவேன் என்னும் உத்தரவாதத்தையே உள்வாங்கி இருந்தது. இந்த மன உறுதி யாருக்கு வரும்? அந்த ஆட்டம் காணாத பிடிவாதம் அவரிடம் நாம் கண்ட தனிச்சிறப்பு.

அவர் தொழிலாளர்களிடம் ஒருமையாக பேசுகிறார் கொச்சை வார்த்தைகளில் உரையாடுகிறார் என்பது சிலரது பார்வை. அதற்கு அவர் தந்த பதில்,நான் என் வீட்டில் பிள்ளைகளிடம் எப்படி பேசுவேனோ அப்படியே தான் எமது மக்களிடம் பேசுகிறேன். இதில் ஏது தப்பு? சரியான சாட்டையடி வார்த்தை. இங்கே அவரது தாத்தாவாகி நிற்கிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான். இ.தொ.காவும் மலையக மக்களும் என் குடும்பம் என்று சொந்தம் கொண்டாடிய அவரின் பாங்கு இனி இங்கு எத்தனை பேருக்கு வாய்க்கும்.எப்படி பார்த்தாலும் எடைபோட்டால் அவரது பக்கத் தராசு தட்டு உயர்ந்தே நிற்கிறது.

சவரிமுத்து தேவதாஸ்
(சிரேஷ்ட ஊடக இணைப்பாளர்)

Comments