எட்டு வருட கால பா.ஜ.க ஆட்சியில் வலிமையடைந்துள்ள ஜனநாயகம் | தினகரன் வாரமஞ்சரி

எட்டு வருட கால பா.ஜ.க ஆட்சியில் வலிமையடைந்துள்ள ஜனநாயகம்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தணிவு நிலைமைக்குவந்துள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும்தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில் பௌத்த மக்களின் புனித தினமான வெசாக்நிகழ்ச்சிகளில் பங்கேற்கவென பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அந்நாட்டுடன் பல்வேறு இருதரப்பு வர்த்தகஒப்பந்தங்களையும் பிரதமர் மோடி செய்திருந்தார்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் சமீப காலமாக சிறுவிரிசல் நிலவி வந்த நிலைமையில், பிரதமர் மோடியின் அவ்விஜயமானது இந்திய_நேபாள இருதரப்பு உறவுகளை மீண்டும் துளிர்விடச் செய்திருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக நேபாளம் தற்போது உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேபாள நாட்டுக்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். ஜப்பானிய அரசினால் பிரதமர் மோடிக்கு பெருவரவேற்பு வழங்கப்பட்டது.- அத்துடன் ஜப்பானில் வாழும் இந்திய மக்கள் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பானில் பல்வேறு வைபவங்களில் அவர் கலந்து கொண்டார்.

இந்தியாவில் எட்டு வருட கால பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயகம் வலிமையாகவும் மீள்தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளதாக ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

'குவாட்' நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நரேந்திர மோடி ஜப்பான் சென்றிருந்தார். ரஷ்யா_ உக்ரைன் போர் காரணமாக 'குவாட்' அமைப்பில் நிறைய சிக்கல் ஏற்பட்டிருந்தன. இந்தியாவின் நிலைப்பாட்டை 'குவாட்' அமைப்பில் உள்ள அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் 'குவாட்' அமைப்பு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்குமா என்ற சந்தேகமும் நிலவியது. இந்த நிலையில்தான் 'குவாட்' அமைப்பைப் பலப்படுத்துவதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றிருந்தார். இதனால் ஜப்பான் சென்றிருந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

"இந்தியாவின் உட்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையைக் கட்டமைத்ததில் ஜப்பான் மிக முக்கியமான பங்குதாரராக உள்ளது. மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், டெல்லி_ - மும்பை தொழில்துறை ெகாரிடார் போன்றவை இந்திய_ -ஜப்பான் ஒத்துழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். உலகளவில் நிகழும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 40சதவீதம் இந்தியாவில் நடக்கின்றது. பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஜனநாயகம் வலிமையாகி உள்ளது. பசுமையான எதிர்காலத்தையும், சர்வதேச சூரியதிறன் கூட்டமைப்பை அமைப்பது தொடர்பாகவும் இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மனிதத்தை வன்முறை, பயங்கரவாதம், பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க உலகம் புத்தர் பெருமானின் வழியைப் பின்பற்ற வேண்டும். நாட்டின் ஒவ்வொரு நபரின் தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான நிர்வாக அமைப்பை கட்டமைப்பதற்காக நாம் பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவில் உண்மையான அரசாங்கம் மக்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது" என்று அங்கு வாழும் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதேவேளை ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மோடி டோக்கியோவில் சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய வாகனத்துறையில் சுசூகி மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வரும் பங்களிப்புக்காக மோடி பாராட்டுத் தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கு மின்சார வாகனங்கள் மற்றும் பற்றரிகளுக்கான உற்பத்தி வசதிகள், மறுசுழற்சி நிலையங்களை அமைப்பது, இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பிரதமர் அச்சந்திப்பின் போது ஆராய்ந்தார்.

மேலும், திறன் மேம்பாடு கற்கைகள் மூலம் இந்தியாவில் உள்ளூர்க் கண்டுபிடிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.

அத்துடன் ஜப்பான் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ எண்டோவை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில், முக்கியமாக சென்னை,- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிடையேயும், கேரளாவின் கொச்சி- இலட்சத்தீவுகளிடையேயும் அமைக்கப்பட்டு வரும் 'ஒப்டிகல் ஃபைபர் கேபிள்' பணியில், என்.இ.சி ேகார்ப்பரேஷன் அளித்து வரும் பங்களிப்பை மோடி வெகுவாகப் பாராட்டினார்.

தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து என்.இ.சி ேகார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

டோக்கியோவில் ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தாய் நிறுவனமான 'ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ' லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான தடாஷி யனாயையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜவுளி மற்றும் ஆடைச்சந்தை குறித்தும், இந்தியாவில் உள்ள ஜவுளி உற்பத்தித் திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் எளிதாக வணிகம் செய்யும் விதமாக, தொழில்துறை மேம்பாடுகள், உள்கட்டமைப்பு வசதி, வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர்கள் துறை உள்ளிட்டவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்பாக நரேந்திர மோடி அப்போது எடுத்துரைத்தார். ஜவுளி உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியாவின், 'பிரதம மந்திரி - மித்ரா' திட்டத்தில் பங்கேற்குமாறு யுனிக்லோ நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், "கொவிட்டுக்கு பிந்திய உலகில், இந்தியா, ஜப்பான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இருநாடுகளும் உள்ளன. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் நிலையான, பாதுகாப்பான தூண்களாக இரண்டு நாடுகளும் உள்ளன. பல்வேறு துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களிலிருந்தே ஜப்பானிய மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளது. ஜப்பானின் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் எப்போதும் போற்றத்தக்கவை. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, புதிய தொழில்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஜப்பான், இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்விதமிருக்க, கடந்த ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல் காரணமாக முடங்கியிருந்த இந்திய தொலைத்தொடர்புத்துறை தற்போது 3ஜி,4ஜி,5ஜி என தொடர்ந்து முன்னேறி தற்போது 6ஜி என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. "எட்டு ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம்.3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக இந்தியா முன்னேறியுள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450பில்லியன் ெடாலர் அளவிற்கு 5ஜி தொழில்நுட்பம் பங்காற்றும். 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, வளர்ச்சியின் வேகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். அடுத்த 10ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை தொடங்க முடியும். 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்பது மக்களுக்குத் தெரியும். ஊழல்களால் முடங்கிய பல்வேறு துறைகளை நாம் மீட்டெடுத்துள்ளோம்.

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட முன்னெடுப்புகள் இதற்குக் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது நாட்டில் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் 4இலட்சம் பொதுச்சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று இந்த பொதுச்சேவை மையங்கள் மூலம் நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் கிராம மக்களைச் சென்றடைகின்றன. இந்த பொதுச்சேவை மையங்கள் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளன. சமீபத்தில் குஜராத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பழங்குடியினர் வசிக்கும் பகுதியான தாஹோட் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியை சந்தித்தேன்.அவர்கள் பொதுச்சேவை மையத்தின் மூலம் 30ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றார்கள் இதுதான் நமது திட்டம்" என பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாரங்கன்

Comments