'ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை காலரீதியாகவும் நவீன சிறுகதை வடிவரீதியாகவும் ஆராயும்போது ஈழத்தின் சிறுகதை மூலவர்களாகவும் முன்னோடிகளாகவும் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகிய மூவரையும் குறிப்பிடுவது வழக்கம். சிறுகதை வரலாற்றினை விபரிக்க முயலும் விமர்சகர்கள் அனைவரும் இந்த வரன்முறையை ஒரு வாய்ப்பாடாக ஒப்புவித்து வருகினறனர். இதற்கு முக்கிய காரணமொன்றுள்ளது. தமிழக அல்லயன்ஸ் பதிப்பக உரிமையாளரான வி. குப்புசாமி ஐயர் 1940-_ 1944காலப்பகுதியில் நான்கு பெரும் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். அவை கதைக்கோவை என்ற பெயரில் வெளிவந்தன. முதலாவது தொகுதியில் இடம்பிடித்த நாற்பது சிறுகதைகளில் ஈழத்தினைச் சேர்ந்த சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் ஆகிய மூவரின் சிறுகதைகள் அடங்கியிருந்தன. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரால் இந்த மூவரே ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளாக அடையாளங்காணப்பட்டனர். அல்லயன் கதைக்கோவையின் வருகை இந்த வரன்முறை ஒப்புவிப்பினை தொடரவைத்துவிட்டது எனக் கருதுகிறேன்' இவ்வாறு ஈழத்துச் சிறுகதை வரலாற்றினை எழுதிய செங்கை ஆழியான் கலாநிதி குணராசா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்: 31)
செங்கை ஆழியான் ஈழத்தின் முதல் சிறுகதை முன்னோடியாக ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்களைத் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேபோன்று தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலினை இணைந்து எழுதிய பெ. கொ. சுந்தரராஜன் (சிட்டி) சோ. சிவபாதசுந்தரம் ஆகியோரும் தமது நூலிலே ஆணல்ட் சதாசிவம் பிள்ளையையே தமிழில் தோன்றிய முதல் சிறுகதை ஆசிரியராகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆணல்ட் சதாசிவம் பிள்ளை ஷநன்னெறிக் கதாசங்கிரகம்| என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். இந்த நூலினுடைய முதலாவது பதிப்பு 1869ஆம் ஆண்டு வெளிவந்தது. நூலின் இரண்டாவது பதிப்பு 1893ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாவது பதிப்பின் பிரதியொன்று இப்பொழுது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ; நூலகத்தில் உள்ளது. அந்த நூலினை, தான் நேரில் பார்த்ததாகக் பதிவு செய்து, ஷதமிழில் முதலில் சிறுகதை எழுதியவர் ஆணல்ட் சதாசிவம் பிள்ளையா?| என்ற கட்டுரையை கலாநிதி பேராயர் எஸ். ஜெபநேசன் ஞானம் சஞசிகையின் (50ஆவது) 2004ஜூலை இதழில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பின்வரும் விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்:
நன்னெறிக் கதாசங்கிரகத்தின் முதலாவது பதிப்பின் முன்னுரையில் இக்கதைகள் எழுதப்பட்டதன் நோக்கத்தை ஆசிரியர் விளக்கிக் கூறுகின்றார். தமிழில் இதுவரைகாலமும் எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் இருக்கின்ற கதைகள் சாதாரணமாய் சிற்றின்ப துராசைகளை எழுப்பி வாலிபர் மனங்களைக் கறைப்படுத்தும் காமரசம் வாய்ந்தவையன்றி ஞானரசம் சார்ந்தவையல்ல| கதைகளில் ஆயத்தமானவற்றில் சிலவற்றை நன்னெறிக் கதாமாலை என்ற முகவுரையுடன் உதயதாரகைப் பத்திரிகையில் தோற்றச் செய்து மறுபடி பக்திபோதனைக்குரிய வேறு சிலவற்றையும் எழுதி வந்தோம். இக்கதைகளை இங்கிலீசில் இருந்து மொழிபெயர்த்து, வேட்டை வாளியானது புழுக்களின் உருவை பேதப்படுத்தினாலொப்ப எமதிஷ்டப்பிகாரம் கூட்டிக் குறைத்து பேதப்படுத்தி வேற்றுருவாக்கிக் கொண்டோம். எம் ஊர்ப் பெண்கள் ஆதியாய் பழமொழிப் பிரீதியர். ஆதலால் அவற்றில் சற்றும் ஒறுப்பின்றி தாராளமாகச் சேர்த்துக் கொண்டோம்'
இரண்டாம் பதிப்பு 1893இல் வெளிவந்தது. இதன் முகவுரையினால் முதலாவது பதிப்பிற்குப் பெரும் வரவேற்பு இருந்தது என்பது தெரிகின்றது. இதன்முகவுரையில் ஆசிரியர் ' நவமான சிலகதைகளை கூட்ட யோசித்தும் புத்தகம் பெருக்கும், காலம் எடுக்கும் என்ற அச்சத்தினால் அந்த எண்ணத்தை விடுத்து உள்ளவற்றையே திருத்தி, காடினிய சந்திகளைத் தவிர்த்து அரும்பதத் தொடர்களை மாற்றி யாவரும் விளங்க இலகு வாக்கினோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்னெறிக்கதாசங்கிரகத்தில் 40கதைகள் இருக்கின்றன. பிள்ளைகளுக்கான சிறுகதைகளை எழுதுகின்றபோது இங்கிலாந்தின் ஆசிரியர்கள் அந்தக்கதை குறிக்கும் படிப்பினை, பயன் முதலியவற்றையும் தெளிவாகக் கூறுவார்கள். கதையின் முடிவில் படிப்பினை என்று ஒரு வசனத்தைக் குறிப்பிட்டுவிடுவார்கள்.
ஆணலட் சதாசிவம் பிள்ளை ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் அது குறிக்கும் செம்பொருளையும் ஒவ்வொரு கதையின் முடிவிலும் அவை குறிக்கும் போதனையையும் தெளிவாகக் கூறியுள்ளார். ஆசிரியர் குறிக்கும் செம்பொருளும் போதனைகளும் வருமாறு:
சிதட கண்ட பீவரன் கதை
செம்பொருள் ; இணக்கம்: வாழ்வு தரும்
படிப்பினை: இதனால் இணக்கம் வாழ்வுதரும் என்று உணர்க.
2வீம்பாகரன் கதை
செம்பொருள்: அகங்காரம் அருமை குலைக்கும்
படிப்பினை: இதனால் தத்தம் ஒழுக்கமும் தகுதியும் நீங்கி வீம்படித்து தம்மினத்தை இகழ்ந்து மேலினம் நாடி நடப்பர் (அன்ன நடை நடக்கப்போய் காகம் தன்னடையும் கெட்டாற்போல) உள்ள கற்கையும் சலாக்கியமும் அழிந்து போவானென்றுணர்க.
மேற்கண்டவாறு தொகுதியிலுள்ள 40கதைகளுக்கும் செம்பொருளும் படிப்பினையும் கூறப்பட்டுள்ளன.
ஆணல்ட் சதாசிவம் பிள்ளையின் கதைகளில் பஞ்சதந்திரக்கதைகளின் சாயல் தென்படுகிறது. ஒரு கதைக்குள்ளே பலகதைகள் வருகின்றன. மிருகங்கள் பட்சிகள் பேசுவதுபோல தென்படுகின்றன. இதனை தமது பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆணல்டின் தமிழ்ப் பெயர் சதாசிவம்பிள்ளை. இவரது தந்தையார் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருணாசலம். தாயார் பெயர் ஆனந்தப்பிள்ளை. 1820ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினொராம் திகதி மானிப்பாய் நவாலியில் பிறந்த சதாசிவம்பிள்ளை தாய்தந்தையருக்கு ஏழாவது பிள்ளையாவார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற சதாசிவம்பிள்ளை, 1832இல் வட்டுக்கோட்டை பட்டிகோட்டா செமினறி மதப்பள்ளியில் இணைந்து 1840ஆம் ஆண்டுவரை அங்கு கற்று பட்டதாரியானார். செமினறியில் சேர்ந்த பின்னரும் மூன்று வருடகாலம் சைவராகவே வாழ்ந்தார். 1835ஆம் ஆண்டு மானிப்பாயில் நடைபெற்ற விசேட சமயப் பிரசாரக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்து ஜோவல் ரசல் இராசசேகரம் ஆணல்ட் என்ற பெயருடன் ஞானஸ்தானம் பெற்றார்.
இவர் முதலில் மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1844இல் சாவகச்சேரி அமெரிக்க மிசன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 1847இல் தலைமை ஆசிரியராக மாற்றம் பெற்றார். சதாசிவம்பிள்ளை 1846ஜூலை ஒன்பதாம் திகதி மார்கரெட் ஈ. நிச்சி என்ற முத்துப்பிள்ளை என்பாரைத் திருமணம் புரிந்தார்.
ஆசிரியத் தொழில் புரிந்த காலத்தில் அவருக்கு நூல்கள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. தனது 24ஆவது வயதில் திருச்சதகம் என்ற நூலை எழுதினார். அதனைத் தொடர்ந்து பல பக்தி இலக்கிய நூல்களை எழுதினார்.
ஆணல்டு, வட்டுக்கோட்டை மதப்பள்ளியின் தொடர்ச்சியாக அதனை யாழ்ப்பாணக் கல்லூரியாக நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். கல்லூரியின் இயக்குநரகத்தின் உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1881ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் இலக்கியப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1892வரை அங்கு பணியாற்றினார்.
ஈழத்தின் முதல் பத்திரிகையான உதயதாரகை, மற்றும் ஆழசniபெ ளுவயச ஆகியவற்றின் ஆசிரியராக 1857இல் கரோல் விசுவநாதபிள்ளைக்குப் பின்னர் பணிபுரிந்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்குப் பெருந்தூணாக இருந்தார். 1896இல் இறக்கும் வரை உதயதாரகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவர் எழுதிய நூல்களுள் மிக முக்கியமானது, பாவலர் சரித்திர தீபகம் ஆகும்.
இந்நூல் மூலமாகவே தமிழ் பேசும் நல்லுலகம் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பெருமையை அறிந்து கொண்டது. இந்நூலே தமிழில் முதலாவதாக வெளிவந்த தமிழ்ப்புலவர் சரிதநூலாகும். பாவலர் சரித்திர தீபகம் நூலானது 410தமிழ்ப் புலவர்களது சரிதங்களை விபரமாகத் தந்துள்ளது. இந்த நூல் சிலகாலம் மதுரை பாலபண்டிதர் வகுப்பிற்கு பாடமாய் இருந்தது.
பரந்த அறிவும் தமிழ்ப் புலமையும் வாய்ந்த ஆணல்ட் சதாசிவம்பிள்ளை பல்வேறு துறைகளில் ஈடுபட்டுழைத்து அவற்றை நூல் வடிவில் வழங்கியுள்ளார்.(1)பாவலர் சரித்திர தீபகம் (2)இல்லறநொண்டி (1887), (3)மெய்வேட்டசரம் (4)திருக்கடகம் (5)நன்நெறிமாலை (6)நன்நெறிக்கொத்து (7)Carpotacharam
(8)வானசாத்திரம் (9)வெல்லை அந்தாதி (சிறுவர் நூல், 1890), என்பன இவர் எழுதிய நூல்களிற் சிலவாகும்.
பத்திராதிபரும், பன்னூலாசிரியரும், தமிழில் முதலாவதாக வெளிவந்த தமிழ்ப்புலவர் சரிதநூலை எழுதியவரும், ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியருமான ஆணல்ட சதாசிவம் பிள்ளை 1896ஆம் ஆண்டு தமது 75ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். (தொடரும்)