மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசியலமைப்பு ஊடாகவே வழியுண்டு! | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசியலமைப்பு ஊடாகவே வழியுண்டு!

பாராளுமன்றத்தின்அதிகாரத்தைப் பலப்படுத்தும்நோக்கில் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படும் உத்தேச 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பு மாற்றத்தை இலக்காகக் கொண்டு 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமொன்று முன்வைக்கப்பட வேண்டும் ஒன்ற கருத்தாடல் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் சார்பில் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தனிநபர் சட்டமூலமாக 21ஆவது திருத்த யோசனையை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜயதாச ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு அரசாங்கத்தின் சார்பில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வரைபை அமைச்சரவையில் சமர்ப்பித்திருப்பதால் அவருடைய தனிநபர் சட்டமூலம் மீளப்பெறப்படவுள்ளது.

இது இவ்விதமிருக்க அரசாங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் பல்வேறு கட்சிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் அமைச்சர் விஜயதாச விளக்கமளித்திருந்தார். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பரஸ்பர நிலைப்பாடுகளைத் தெரிவித்திருப்பதாகவும், இதனால் அவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்பொழுதுள்ள அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன கட்சிக்கே அதிக பெரும்பான்மை இருப்பதால், 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றும் விடயத்தில் அவர்கள் இறுதி முடிவு எடுக்கவில்லையெனத் தெரியவருகிறது. 

குறிப்பாக இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தை நீக்குவதற்கு பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்ஷவும் அவருக்கு ஆதரவான சிலரும் விரும்பவில்லையென்றும், இதனால் 21ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அரசாங்கம் தயாரித்துள்ள உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக வாசித்து ஆராய்வதற்கு சில வாரங்கள் தேவை என பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரட்டைப் பிரஜாவுரிமை விடயம் நீக்கப்படக் கூடாது எனக் கூறியதும் அங்கு கலந்து கொண்டிருந்த பிரதான கட்சியொன்றின் செயலாளருக்கும் அவருக்கும் இடையில் கருத்தப் பரமாற்றம் இடம்பெற்றுள்ளது.

அதேநேரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் 21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார். இதன் மற்றுமொறு சந்திப்பும் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருந்தபோதும் 21ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவ்வாரம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பில் மாறுபட்ட கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் 21வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறிய போதும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனினும், தனது முழுமையான சம்மதத்துடனேயே 21ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது அரசாங்கம் உண்மையான நோக்கத்தில் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சித்தாலும் ஆளும் கட்சியில் உள்ள ஒரு தரப்பினரே இதற்கு முட்டுக்கட்டை போடுவதாகத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் காலிமுகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளம் அரசியலமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதிகாரத்தை ஓரிடத்தில் மாத்திரம் குவிப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் சரி செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் உள்ள பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.            

அரசாங்கம் சார்ப்பில் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்கள் மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிக்கப்படுவதுடன் மதிப்பாய்வு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் அவசியம். சுயாதீன ஆணைக்குழுக்கள் முழுமையான சுயாதீனத் தன்மையுடன் இயங்குவதன் தேவையும் தற்பொழுது உணரப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கு சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவதாயின் அவர்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான கட்டமைப்பு மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். எனவே இதற்கான அடித்தளத்தை அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்தக் கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். ஒட்டுமொத்த நாடுமே பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் மீண்டும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களைப் பற்றிச் சிந்திக்காது கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நாட்டை இந்த நிலைமையிலிருந்து மீட்பதற்கு அரசியல் பிரதிநிதிகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் எமக்கு உணரவைக்கின்றன.

எனவே, எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு சூழலை உருவாக்கக் கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கு அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்வதே காலத்தின் தேவையாகும்.

பி.ஹர்ஷன்

Comments