இலங்கை அரசியலில் 17 வருடங்களாக தவிர்க்க முடியாத மாபெரும் பாத்திரம்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அரசியலில் 17 வருடங்களாக தவிர்க்க முடியாத மாபெரும் பாத்திரம்!

இலங்கை அரசியலில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பான மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. ராஜபக்‌ஷ குடும்பத்தின் முக்கிய உறுப்பினரும், பிரபலமான அரசியல்வாதியுமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். இது அரசியல் அரங்கத்தில் ஏதிர்பாராத ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொருளாதார அமைச்சராக மிகவும் பலம் பொருந்திய அரசியல்வாதியாக இருந்த பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். ஏறத்தாழ ஒரு வருட காலத்துக்குள்ளேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் பிரஜாவுரிமை உட்பட இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியான பின்னரே இலங்கை திரும்பியிருந்தார். இதற்கு முன்னர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பணியாற்றியிருந்ததுடன், அதன் பின்னர் சுதந்திரக் கட்சியுடனும் இணைந்து செயற்பட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் நாடு திரும்பிய அவர், ஜனாதிபதியின் ஆலோசகராகச் செயற்பட்டதுடன் 2007ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முதன் முதலில்  சபைக்குச் சென்றார்.

அதன் பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற பலம் மிக்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. இவர் பொருளாதார அமைச்சராக இருக்கும் போதே திவிநெகும சட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன.

இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததும் பசில் ராஜபக்‌ஷ நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். மஹிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்‌ஷவின் செயற்பாடுகள் காரணம் என்ற விமர்சனங்கள் வலுப்பெற்றிருந்தன.

இதன் தொடர்ச்சியாக அவர் நாட்டுக்கு மீண்டும் திரும்பி வந்து மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவரும் முயற்சியைத் திரைமறைவிலிருந்து ஒருங்கிணைத்தார். இதன் ஒரு அங்கமாக ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ என்ற கட்சியை உருவாக்கி குறுகிய காலத்துக்குள் அதனை பலம் பொருந்திய கட்சியாகக் கட்டியெழுப்பினார்.   பொதுஜன பெரமுன முதன் முதலில் களமிறங்கிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி தனது பலத்தை நிரூபித்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகக் களமிறங்கிய கோட்டாபய ராஜபக்‌ஷவை 69இலட்சம் வாக்காளர்கள் தெரிவு செய்திருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக் கூடிய வகையில் பொதுஜன பெரமுன பலமாக இருந்தது.   கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை காணப்பட்டது. இது பசில் ராஜபக்‌ஷவுக்கும் நேரடி அரசியலுக்குத் தடையை ஏற்படுத்தியிருந்தது. எனவே கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து அதில் இரட்டைப் பிரஜாவுரிமை விடயம் நீக்கப்பட்டது. இதன் பின்னணியில் பசில் ராஜபக்‌ஷ முழுமையாகச் செயற்பட்டிருந்தார்.

அது மாத்திரமன்றி, பொதுத் தேர்தலின் பின்னர் கூடிய பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், குறிப்பாக முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலரும் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். அதாவது பசில் ராஜபக்‌ஷவின் தேவைப்பாடு காணப்படுகிறது என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

அத்துடன், நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பசில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. ஏழு மூளையைக் கொண்ட பசில் ராஜபக்‌ஷ நிதி அமைச்சராக்கப்பட வேண்டும் என ஒரு சில பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் பகிரங்கமாக் கூறியிருந்தனர். பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டாலும் ஜனாதிபதி நியமித்த பொருளாதார செயலணியின் தலைவராக அவர் செயற்பட்டிருந்தார்.

இந்த அரசியல் பின்னணியில் கடந்த வரும் ஜுலை மாதம் பசில் ராஜபக்‌ஷ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவதற்குத் தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஜயந்த கட்டகொட இராஜினாமா செய்தார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமானம் செய்வதற்கு முன்னரே நிதி அமைச்சராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார். பசில் ராஜபக்‌ஷ பொருளாதார செயலணியின் தலைவராக இருந்த எடுத்த முடிவுகளில் ஒன்றுதான் வரிகளைக் குறைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

இதன் பின்னர் இவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இதுவும் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருந்தது.

நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த நிலையில், நிதி அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து இவர் எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லையென எதிர்க்கட்சிகள் கடும் குற்றஞ்சாட்டின. இந்த நிலையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட பின்னர் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய போது பசில் ராஜபக்‌ஷவும் பதவி விலகினார். இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இவருடைய வெற்றிடத்துக்கு பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் தீவிர அரசியலிலிருந்து தான் விலகப் போவதில்லையென்றும், நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள சூழ்நிலைக்கு தம்மைத் தெரிவு செய்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.

பி.ஹர்ஷன்

Comments