![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/06/12/a34.jpg?itok=Xy5Y3BxO)
ஐக்கிய தேசிய கட்சியை, முஸ்லிம் அரசியல் புலத்திலிருந்து விலக்கி வைக்கும் அஷ்ரஹ்பின் தாரக மந்திரம் வலுவிழக்கும் நிலைக்குச்செல்கிறதா?
"ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக (தலைவர்) ரணில் இருக்கும்வரை, முஸ்லிம்கள் அந்த வாகனத்தில் ஏறக்கூடாது". இதுதான், அஷ்ரஹ்பின் தாரகமந்திரம்.
1994முதல் 2000ம் ஆண்டு வரைக்கும், அதாவது அவர் மரணிக்கும் வரைக்கும் இதைத்தூக்கிப் பிடித்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
அஷ்ரஹ்புக்குப் பின்னர், இதுபோன்ற உணர்ச்சிக்கோஷம் ஒன்றை எந்த முஸ்லிம் தலைமையாலும் தூக்கி நிறுத்த முடியவில்லை.
இன்றளவும், இத்தாரக மந்திரம் முஸ்லிம் அரசியற் பரப்பில் சிலாகிக்கப்படுகிறதென்றால்,இதன் கனதியை கணிப்பிட முடிகிறது. கிழக்கில், அதிலும், எல்லைக் கிராமங்களில், இது நல்ல வருவாயைத் தந்தது.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்காட்டி, முஸ்லிம் தனித்துவ அரசியலின் அவசியத்தை உணர்த்தும் வியூகமே இந்தத்தாரக மந்திரம்.வடக்கு, கிழக்கு இணைப்பு,வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம், பள்ளிவாசல் படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு இன்னும் இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்பட்டமை போன்ற அனைத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் இடம்பெற்றதால்தான், இந்த தாரக மந்திரத்தை பாவித்து முஸ்லிம்களை உசுப்பேற்றினார் அஷ்ரஹ்ப்.
இத்தனைக்கும் இப்போதைய பிரதமரான ரணில்,இந்த அசம்பாவிதங்கள் நடந்த காலத்தில் பிரதமரும் இல்லை, ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் இல்லை. ஆனால், சந்திரிக்கா அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் சக்திமிக்க எதிர்க்கட்சி தலைவராக ரணிலிருந்தார்.இதனால்தான், இந்த தாரக மந்திரத்தை அஷ்ரஹ்ப் பாவித்தார்.
இதை, இன்னுமொருபடி மேலேங்கச் செய்வதற்கு, அந்தக்காலத்தில் (1994 -_--2000) அவருக்கிருந்த அரசியல் மவுசும் கை கொடுத்தது. ஐக்கிய தேசிய கட்சியின் 1997முதல் 1994வரையான ஆட்சியை தோற்கடித்த சந்திரிகா அரசில், அஷ்ரஹ்புக்கிருந்த மவுசு,எதைச் சொன்னாலும் முஸ்லிம் அரசியல் களத்தில் எடுபடும் நிலையிலிருந்தது. புனர்வாழ்வுக் கொடுப்பனவுகள் அல்லது வேலைவாய்ப்புக்களை வழங்கி விட்டு நடாத்தப்படும் பொதுக்கூட்டங்களிலே, இந்த தாரகமந்திரம் தூக்கிப் பிடிக்கப்பட்டது. இரண்டு தசாப்பதத்துக்காவது, ஆட்சியின் பக்கம் ஐக்கிய தேசிய கட்சியை கொண்டு வரக்கூடாதென் பது அவருக்குள்ளிருந்த கனவு.
கிழக்கில், முப்பது வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் மோகத்திலிருந்த முஸ்லிம்களை, நிதானம் கலைக்க இந்த மந்திரத்தை தவிர வேறு வியூகம் அவருக்கு இருக்கவில்லை. இன்னும், ஐக்கிய தேசிய கட்சியின் அன்றைய முஸ்லிம் பிரதிநிதிகள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்பதை காட்டும் மறைமுக அளவீடும் இதில் ஒளிந்திருந்தது.
இதைவிட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரான ஷேகுஇஸ்ஸடீனுக்கு தேசியப்பட்டியலை ரணில்விக்ரமசிங்க வழங்கியதுதான், இத்தாரக மந்திரத்தின் மூலமந்திரமாக இருந்தது. இப்படியொரு தாகரக மந்திரத்தை உச்சரித்து முஸ்லிம்களின் அரசியலுக்கு தனித்துவம் கொடுக்க இன்றுள்ள தலைமைகளால் முடியவுமில்லை. அவ்வாறு முடிந்தாலும், இதற்கான அங்கீகாரங்களை போட்டி அரசியல் போர்த்திவிடுகிறது. எனினும், அஷ்ரஹ்பின் தாரகமந்திரம் அவரது மரண காலத்திலேயே மலினப்படுத்தப்பட்டதாகவும் சிலர் கூறுவதுண்டு. 2001முதல் 2004வரையான பிரதமர் ரணிலின் ஆட்சியில், அதாவது, அஷ்ரஹ்ப் மரணித்த அடுத்த ஆண்டில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமை இரண்டறக்கலந்ததால்தான் இக்கருத்து, நிலவுகிறது. இது, முஸ்லிம்களுக்குள் தெற்குத் தலைமை, கிழக்குத் தலைமை என்ற பிரதேசவாதம் உள்ளூர வேர்விட,வித்திட்டது. இதிலுள்ள யதார்த்தங்கள் அன்றே புரிய வைக்கப்பட்டிருந்தால், முஸ்லிம் அரசியலில் போட்டிச் சிந்தனைகள் ஏற்பட்டிருக்காது. அஷ்ரஹ்பின் தாரகமந்திரத்திலுள்ள காலச்சூழல் தாற்பரியங்களைப் புரியவைப்பதில், கட்சியின் தலைமையைப் பாரமேற்ற தரப்பு,வெற்றி பெற்றதா? முஸ்லிம் சமூகத்துக்குள் குடையப்படும் கேள்விதானிது.
எதையுமே, புதிய அரசியல் கருத்தாக முன்வைக்க இயலாதுள்ள முஸ்லிம் தலைமைகள், அஷ்ரஹ்பின் அடியொற்றிகளெனக் காட்டியாவது, கட்சியை நிலைப்படுத்த இயலாதிருக்கின்றன. காரணம், தாரகமந்திரம் காலாவதியானதுதான். போராட்ட களமே இல்லாத நிலையில்,ஆயுதங்கள் வழங்கியமை அல்லது அழித்தமை பற்றிப் பேசி முஸ்லிம் சமூகத்தை உசுப்பேற்ற முடியாதே! ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களின் காலத்தில் நடந்தவற்றுக்காக,இன்றைய தலைவரை (ரணில்) ஏற்காமலிருப்பது காலவோட்டத்துக்கேற்ற கருத்தும் இல்லையே! அதலபாதாளத்துக்குச் சென்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசாங்கமிது.பிரதமர் ரணிலை எதிர்ப்பது, நாட்டில் பஞ்சத்தை உருவாக்கும் என்ற கருதுகோளையே ஏற்படுத்துகிறது. எனவே, காலாவதியான அரசியல் சிந்தனைகளில் பயணிப்பது யதார்த்த அரசியலுமாகாது.
ஏ,ஜீ,எம்,தௌபீக்