'பஞ்சம்' என்ற எச்சரிக்கை மட்டும் சோறு போடாது | தினகரன் வாரமஞ்சரி

'பஞ்சம்' என்ற எச்சரிக்கை மட்டும் சோறு போடாது

'ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகக் கணிப்பீட்டின்படி சுமார் நாற்பத்தொன்பது இலட்சம் பேருக்கு அதாவது மொத்த சனத்தொகையில் இருபத்தி இரண்டு சதவீதமானோருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது' 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை சமாளிப்பது எப்படி என்பதே இப்போதுள்ள மில்லியன் டொலர் கேள்வியாகும். பொது மக்களைப் பொறுத்தவரையில் கறிச்சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த நிலை. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவையேனும் பெறமுடியாத நிலை பல குடும்பங்களுக்கு எற்பட்டுள்ளது.  

தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தாயொருவர் அரளி விதைகளை உண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பட்டினிச்சாவு சம்பவமொன்றும் ஊடகங்களில் பதிவாகின. இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகக் கணிப்பீட்டின்படி சுமார் நாற்பத்தொன்பது இலட்சம் பேருக்கு அதாவது மொத்த சனத்தொகையில் இருபத்தி இரண்டு சதவீதமானோருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது. 

பாடசாலை செல்லும் சிறார்கள் மத்தியில் மந்த போசணை அதிகரித்துள்ளது. காலை உணவின்றி பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கர்ப்பிணித்தாய்மாருக்கு வழங்கப்பட்டுவந்த திரிபோஷ உணவு, அதன் முக்கிய உள்ளீடான சோளம் கிடைக்காமை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது அடுத்து வரும் தலைமுறையின் ஆரோக்கியம் பற்றிய முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.  

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான உணவை வழங்குவதிலும் பிரச்சனைகள் உருவாகியுள்ளன. அதேபோல சாதாரண ஒரு குடிமகனின் நிறை உணவுத் தேவையைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. மீன், இறைச்சி, முட்டை போன்ற மிருகப்புரத உணவுகளின் விலைகள் மிகமோசமான அதிகரிப்பைச் சந்தித்துள்ளன.  

இன்று உதாரணமாக கோழி முட்டை ஒன்றின் விலை 18ரூபாவிலிருந்து 50ரூபாவாக அதிகரித்துள்ளது. தாவரப்புரத உணவுகளான பருப்பு, சோயா, பாசிப்பயறு, கெளப்பி என்பவற்றின் விலைகளும் வானைத் தொடுகின்றன. இறைச்சி வகைகளின் விலைகள் சாதாரண பொதுமக்கள் அணுக முடியாதளவுக்கு உயர்ந்துள்ளன.  

பெரும்பாலான மரக்கறி வகைகளின் விலைகள் இருமடங்காக அதிகரித்துள்ளன. பல குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மாத்திரம் உட்கொள்கின்றனர். நகர்ப்புறங்களிலும் பெருந்தோட்டத்துறையிலும் இப்பிரச்சினை தீவிரமானதாக மாறியுள்ளது. இவ்வாறு உணவுப்பாதுகாப்பு நலிவடைந்து வரும் நிலையில் உடனடியாக உதவி வழங்கும் நிலையில் அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. 

கொழும்பு நகரின் சில இடங்களில் சமூக சமையலறைகள் (community kitchens) உருவாக்கப்பட்டு பசியோடிருப்போருக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றுக்கு சமூக ஆரவலர்களிடமிருந்து உதவியும் கோரப்பட்டுள்ளது.  

இப்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பணம் படைத்த தனவந்தர்கள் குறைந்தபட்சம் தத்தம் பிரதேசங்களில் உள்ள உதவி தேவைப்படும் மக்களுக்கு இதுபோன்ற அன்னதானம் வழங்கும் திட்டங்களை ஆரம்பிக்கலாம்.  

குறிப்பாக, விஹாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் இதில் முன்னின்று செயற்படலாம் அதன் மூலம் தமது பிரதேசத்தில் பட்டினியையும் பட்டினிச் சாவுகளையும் தடுக்கலாம். மக்கள் கைவிடப்பட்ட நிலைக்கு உள்ளாகும்போது சமூக நிறுவனங்களே முன்னின்று செயற்பட வேண்டியிருக்கும். புலம்பெயர் சமூகமும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது உதவிகளை வழங்க முன்வரவேண்டும். அரசு சாரா நிறுவனங்களும் தத்தமது நடவடிக்கைப் பிரதேசங்களில் தம்மால் முடிந்தளவு மக்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரவேண்டும்.  

அரசாங்கத் தரப்பிலிருந்து பயிர்ச்செய்கையை அதிகரிக்குமாறு ஆலோசனை சொல்லப்படுகிறதே தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசர நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கையில் ஸ்ரீமா அரசு பதவிவகித்த 1970 -1977காலப்பகுதியில் ஒரு உணவுப் பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்ட போதும் அது இவ்வளவு தீவிரமானதாக இருக்கவில்லை.    அக்காலப் பகுதியில் இலங்கையர் அனைவருக்குமான உணவுப் பங்கீட்டுத்திட்டம் நடைமுறையில் இருந்தமையால் அந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உணவ வழங்கும் தமது பொறுப்பிலிருந்து இலகுவாக விடுபட முடியவில்லை.    அதேவேளை குறைந்தபட்சம் ஒரு வேளையேனும் மக்கள் உணவைப்பெற அத்திட்டம் உதவியாக இருந்தது. இலங்கையில் சமுர்த்தித் திட்டம் நடைமுறையில் உள்ளபோதும் அதில் உள்ளடக்கப்படாத வலுவிழந்த குழுவினரும் உள்ளனர்.  

இது தவிர முன்னர் வறியவர்களாகக் கருதப்படாத பெரும் எண்ணிக்கையிலானோர் வருமான வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் காரணமாக வறியவர்களாக மாறியுள்ளனர். எனவே இலங்கையின் சனத் தொகையில் கணிசமானோருக்கு வாழ்வாதார உதவிகள் தற்காலிகமாகவேனும் தேவைப்படுகின்றன. வரிசெலுத்தும் வருமானம் உழைக்கும் தனிநபர்களிலும் கணிசமான எண்ணிக்கையினர் கடனாளிகளாக மாறியுள்ளனர்.   எனவே இப்போது அமுலுக்கு வந்துள்ள வரி அதிகரிப்புகள் இவர்களின் வாழ்க்கைச் செலவுகளிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ருவர் பெறும் வருமானத்தில் பெற்ற கடனை மீளச் செலுத்தல் தொகைக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் பெற்றகடனை மீளச் செலுத்தும் தொகைக்கும் சேர்த்து வருமான வரி செலுத்துவதால் வாழ்க்கைச் செலவைக் கொண்டு நடத்துவது மிகக் கடினமாதாக இருக்கும். இலங்கையர்களின் வருமானத்தில் உணவுக்கு கணிசமானளவு சதவீதம் செலவிடப்படுகிறது. இதனால் உணவு விலை உயரும்போது உணவுப்பாதுகாப்பு மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்.  

கடந்த பெரும்போகத்தில் இலங்கையின் முக்கிய உணவுத் தானியமான நெல் உற்பத்தி நாற்பது தொடக்கம் ஐம்பது சதவீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நெல்விளையும் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வீழ்ச்சி எழுபது சதவீதமாக இருந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.  

2021ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பசுமை விவசாயக் கொள்கை காரணமாக விவசாய இரசாயன வளமாக்கிகள் கிடைக்காமையே இந்த வீழ்ச்சிக்கான காரணமாகும். இப்போது இரசாயன வளமாக்கித் தடை நீக்கப்பட்டுள்ள போதிலும் இப்போது செய்கை பண்ணப்பட்டுள்ள காணிகளுக்குத் தேவையான வளமாக்கிகளை உரிய காலத்தில் இறக்குமதி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.  

ஒருபுறம் உலக சந்தையில் இரசாயன வளமாக்கிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மறுபுறம் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 203ரூபாவிலிருந்து 365ஆக 80வீதம் தேய்வடைந்துள்ளபடியால் இறக்குமதி விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. அந்த அதிகரித்த விலையிலும் வளமாக்கிகளை இறக்குமதி செய்யப் போதுமான டொலர் கையிருப்புகள் இலங்கையில் இல்லை. முன்னர் 30ரூபா மானிய விலையில் கிடைத்த ஒரு கிலோ உரம் இப்போது 400ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்திய கடனுதவியின் கீழ் வளமாக்கிகள் பெறப்பட்ட போதிலும் அவை உரிய காலத்தில் வந்துசேரவில்லை. இதனால் நெல் விவசாயிகள் பலர் தமது நிலங்களைப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தவில்லை. அதுமட்டுமன்றி ஏனைய விவசாய உள்ளீடுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிப்பும் அவற்றின் தட்டுப்பாடும் விவசாய நடவடிக்கைகளை மோசமாகப் பாதித்துள்ளன.  

எனவே இப்போது நடைபெற்றுவரும் போகத்தில் பாசிப்பயற்றை அதிகளவில் பயிரிடுமாறு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும் சிறு போக அறுவடை மிக மோசமானதாக இருக்கப்போகிறது. எனவேதான் இலங்கையில் உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.  

உணவுப்பற்றாக்குறை வரும் என அதிகாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுப்பதுடன் தமது கடன் முடிவடைந்து விட்டதாக நினைக்கின்றனர். அதனை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் அரசாங்கம் இருக்கவேண்டும். மக்களைப் பட்டினிபோடாமல் காப்பது ஒரு அரசாங்கத்தின் தலையாய கடமை. பஞ்சம் வருகிறது என்று மக்களை எச்சரிக்க அரசாங்கம் தேவையில்லை. அது மக்களுக்கே தெரியும். அதிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதையே அரசாங்கம் சொல்ல வேண்டும்.     

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments