இரண்டாக பிளக்குமா அ.தி.மு.க? | தினகரன் வாரமஞ்சரி

இரண்டாக பிளக்குமா அ.தி.மு.க?

தனித்து விடப்பட்டால் பன்னீர் சசிகலாவுடன் கை கோர்ப்பாரா?
ஒற்றைத் தலைமைக்கு திரளும் ஆதரவால் ஓங்கும் எடப்பாடி அலை

அனைத்திந்திய அண்ணா தி.மு.க மிக விரைவில் இரண்டாகப் பிளந்து இரு தனிக் கட்சிகளாக இயங்கலாம் என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எம்.ஜி.ஆர். ஆரம்பித்து ஜெயலலிதாவினால் வளர்த்தெடுக்கப்பட்ட இக் கட்சியின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை எதிர்க்கட்சிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

அ.தி.மு.கவின் செயற்குழு மாநாடு எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. சென்னையின் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சி பலப்படுத்தப்படும் என்று கட்சி முக்கியஸ்தர்கள் கருதுகின்றனர். இக் கட்சி எம்.ஜி.ஆரினால் 1972அக்டோபர் 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அண்ணாவினால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர். என் மடியில் ஒரு கனி வந்து விழுந்தது. அதை நான் எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். அது தான் இதயக்கனி என்று எம்.ஜி.ஆர் தனக்கு எவ்வளவு நெருக்கும் என்பதை உவமையாகச் சொல்லியிருந்தார் அறிஞர் அண்ணா. அவரும் அண்ணாவுக்கு விசுவாசமான உண்மைத் தம்பியாகவே கட்சியில் இருந்து வந்திருக்கிறார். அண்ணாவின் பெயரைத் தன் படங்களில் குறிப்பிடுவது, கட்சிக் கொடி, பெயரைப் பயன்படுத்துவது, கட்சிக் கொள்கைகளை பாடல் வரிகளில் கொண்டு வருதல் என்பனவெல்லாம் அண்ணா உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்தது. 1969இல் அண்ணாவின் மறைவின் பின்னர் முதல்வராகப் பதவியேற்ற கலைஞர் கருணாநிதி பின்னர் ஆட்சியைக் கலைத்துவிட்டு 1971இல் சட்டசபைத் தேர்தலை நடத்தினார். அது தி.மு.கவுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இனிமேல் தான் அசைக்கப்பட முடியாத தமிழகத் தலைவர் எனக் கருதிய கலைஞர் கருணாநிதி தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ள தலைப்பட்டதில் எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் இடையிலான பிணக்கு முறுகலாக மாறி மோதலாக உருவெடுத்தது. ஒரு நீயா நானா மோதலே அ.தி.மு.க என்ற ஒரு கட்சியின் உதயத்துக்கு காரணமாக இருந்ததே தவிர வேறு எந்தக் கொள்கை கோட்பாட்டாலும் அல்ல.

எனவே அடிப்படையில் அ.தி.மு.க என்பது கருணாநிதி எதிர்ப்புக் கட்சியாகும். இதைத்தவிர இவ்விரு கட்சிகளுக்கு இடையில் பெரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது. எம்.ஜி.ஆரோ அதன் பின்னர் வந்த ஜெயலலிதாவோ அ.தி.மு.காவின் கொள்கைகள் இவைதான் என்று எதையும் உருவாக்கி வைக்கவில்லை. தற்போது, கருணாநிதி இல்லை. கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அவசியம் தற்போது இல்லை என்ற அளவில் கருணாநிதியின் குடும்பத்தை எதிர்ப்பதை அது தன் இலட்சியமாகக் கொண்டுள்ளது. அ.தி.மு.கவின் பெரும் பலவீனம் இதுதான். தி.மு.கவுக்கு இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழிப் பற்று - வளர்ப்பு, சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான கொள்கை, சமச்சீர் கல்விக் கொள்கை, இந்துத்துவா எதிர்ப்பு என விசேடமாகக் குறித்துச் சொல்லக்கூடிய கொள்கைள் உள்ளன. அ.தி.மு.கவை எடுத்து கொண்டால் இவ்வாறான வித்தியாசமான எந்தக் கொள்கையையும் பார்க்க முடியவதில்லை. எம்.ஜி.ஆர். எமது கொள்கை அண்ணாயிசம் என்றார். ஆனால் இன்றளவும் அண்ணாயிசம் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆர் அண்ணாயிசத்துக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் பின் வந்த ஜெயலலிதா கருணாநிதி வெறுப்பு அரசியலை வெற்றிகரமாகவே முன்னெடுத்தார். தமிழக அரசியலை தனிமனித கவர்ச்சி அரசியலாக அவரால் மாற்றியமைக்க முடிந்தது. இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் ஆட்சிகளைத் தீர்மானித்தது அரிசி அரசியலும் இனவாத அரசியலும் தான். அதேபோல தி.மு.கவை தமிழகத்தில் காலூன்றச் செய்தது இந்தித்திணிப்பு கொள்கையும் அதன் எதிர்விளைவாக தமிழகத்தில் எழுந்த தமிழ் உணர்வும்தான். அ.தி.மு.க தழைத்தோங்க கருணாநிதி எதிர்ப்பு அரசியல் உதவியதால் அவரது மறைவும் அதற்கு முன்னரேயே அக்கட்சியின் சுப்பர் ஸ்டார் ஜெயலலிதாவின் மறைவும் அ.தி.மு.கவை கடுமையாகப் பாதித்தது. மேலும் அக் கட்சியின் தலைவர்களாக தொண்டர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு செலுத்த முடியாத பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நீடித்ததும் அதன் வீழ்ச்சிக்கு வழி கோலியது.

அ.தி.மு.க அதன் ஆரம்பத்தில் இருந்தே தனி மனிதரின் கவர்ச்சியால் மட்டுமே நடத்தப்பட்டு வந்துள்ள கட்சி. முதலில் எம்.ஜி.ஆரின் மயக்கத்தில் தொண்டர்களும் வாக்காளர்களும் கிறங்கிக் கிடந்தார்கள் என்றால் அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா விஷயத்திலும் இதுவே நடந்தது. அந்த மயக்கத்தை தொடர்ச்சியாக கட்சிக் கிண்ணத்தில் இட்டு நிரப்ப முடியாத தலைவர்களாக முதலில் ஓ. பன்னீர்செல்வமும் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும் விளங்குவதால்தான் அ.தி.மு.க தொடர்ச்சியாக ஒரு தேக்க நிலையில் இருந்து வருகிறது. ஆட்சியில் உள்ள தி.மு.கவுக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்பட முடியாத ஸ்தம்பித நிலையை அக் கட்சியில் பார்க்க முடிகிறது.

எனினும் இன்றைக்கும் பெரிய கட்சியாகவும், தி.மு.கவுக்கு மாற்றாக விளங்கக் கூடிய கட்சியாகவும் அ.தி.மு.கவே விளங்கி வருகிறது. முழுத் தமிழ்நாடும், எல்லாக் கிராமங்களிலும் கிளைகளைக் கொண்ட கட்சியாக திகழ்ந்தாலும் அ.தி.மு.கவின் பெயர் ஊடகங்களில் அடிபடுவதில்லை. அப்படியே அடிப்பட்டாலும் மக்கள் மத்தியில் பாதிப்பை எதிர்விளைவுகளை - ஏற்படுத்துவதாக இல்லை என்று சொல்லி விடலாம்.

அ.தி.மு.கவுடன் ஒப்பிடும்போது தமிழக பா.ஜ.க ஒரு வளராத கட்சி. தனித்து இயங்க முடியாத, திராவிட மண்ணில் வேர்பிடிப்பதற்காக போராடும் கட்சி. ஆனால் இன்று அண்ணாமலையின் தலைமையில் தமிழ்நாடு பா.ஜ.க பேசப்படும் கட்சியாகவும் தி.மு.கவுக்கு குடைச்சல் கொடுக்கும் கட்சியாக பேசப்படும் வகையிலும் அக் கட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு பிரச்சினையை அண்ணாமலை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்.

பா.ஜ.கவுக்கு நான்கு சட்ட மன்ற ஆசனங்கள் உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் பாஜக கட்டாயக் கூட்டை வைத்துக் கொண்டது. செஞ்சோற்றுக் கடனுக்காக, அதாவது எடப்பாடி - பன்னீர் ஆட்சி கவிழாமல் மோடியவர்கள் பார்த்துக் கொண்டதற்காக, - வேண்டாவெறுப்பாக இக்கூட்டணியை அ.தி.மு.க தலைமை வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அ.தி.மு.கவின் செல்வாக்கினால் நான்கு இடங்களை கைப்பற்றிக் கொண்ட பா.ஜ.க, இன்று அக் கூட்டணியில் இருந்து வெளியேறியதோடல்லாமல் அ.தி.மு.கவை விமர்சிக்கவும் செய்கிறது. பா.ஜ.க மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கட்சியாக இருப்பதால்தான் தமிழகத்தின்மூன்றாவது பெரிய கட்சியாக எம்மால் விளங்க முடிகிறது என்று அண்ணாமலையார் மார்தட்டவும் செய்கிறார். அண்ணாமலையின் கூற்றுகள் சில சமயம் மிகைப்படுத்தலாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். ஆனால் பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை பேசப்படும் நபராகவும், அடிக்கடி ஊடகங்களில் குறிப்பிடப்படுபவராகவும், பலம் பொருந்திய தி.மு.க அரசுக்கு குடைச்சல் கொடுப்பவராகவும் திகழ்கிறார். தி.மு.க அமைச்சர்கள் மீது ஊழல் புகார் படிக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு இரண்டு தி.மு.க அமைச்சர்கள் அடிக்கடி விளக்கமும் மறுப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழக பா.ஜ.க. வேகமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், தி.மு.கவுக்கு சவால்விடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை அண்ணாமலையார் தமிழகத்தில் உருவாக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சொந்தமாக காலூன்ற முடியாத ஒரு பா.ஜ.க தன் பிரசார தந்திரங்கள் மற்றும் அணுகுமுறைகள் ஊடாக தன்னைமுக்கிய கட்சியாக வெளிப்படுத்த முடிகிறது என்றால் பலம் பொருந்திய அ.தி.மு.க எவ்வளவு வேகமாகவும், தந்திரமாகவும் இயங்க வேண்டும்! ஆனால் அ.தி.மு.க இரண்டு தோணிகளில் கால் வைத்தமாதிரி இரட்டைத் தலைமை முறையை வைத்துக் கொண்டு தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் இரட்டைத் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தமக்குடையே அதிகாரப் போட்டியை தீவிரப்படுத்தி யாருக்கு கட்சியில் அதிக செல்வாக்கு என்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருப்பதால் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத ஒரு நிலை அ.தி.மு.கவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது ஆளும் தி.மு.கவுக்கு வாய்ப்பான காலம்தான். அ.தி.மு.க தலைமை ஆற்ற வேண்டியவற்றை அண்ணாமலையார் செய்து கொண்டிருப்பதாகவும் கொள்ள முடியும்.

இதே சமயம் எதிர்வரும் 23ம் திகதி சென்னையில் திட்டமிட்டபடி அ.தி.மு.க பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்படுமா என்பதில் இழுபறி நிலையே காணப்படுகிறது. இக் கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் கோரும் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொதுக் குழுவில் எவை எல்லாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற பட்டியல் ஒரு புறமிருக்க, அ.தி.மு.கவுக்கு ஒற்றைத் தலைமை அவசியமா அல்லது இரட்டைத்தலைமை அவசியமா? என்ற கேள்வியே பெரிதாக எழப்போகிறது என்பதால் தான் எடப்பாடித் தரப்பும் பன்னீர் செல்வம் தரப்பும் தீவிர பேச்சு வார்த்தைகளிலும், மாவட்டச் செயலாளர்களை வளைப்பதிலும் ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.கவின் வீழ்ச்சிக்கு இரட்டைத் தலைமையே காரணம் என்பது அக் கட்சியில் பரவலாகக் காணப்படும் கருத்தாகும். தி.மு.கவுக்கு எதிராக போதுமான அளவுக்கு செயற்படாமலும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாலேயே விமர்சிக்கப்படும் அளவுக்கு சிறுமை அடைந்ததற்கும் இரட்டைத் தலைமையே காரணம் எனக் கட்சிப் பிரமுகர்கள் கருதுகின்றனர். எனவே இரட்டைத் தலைமை என்பதை கட்சி யாப்பில் இருந்து நீக்கிவிட்டு தலைவர், செயலாளர் என்ற பழைய முறையை மீள் அறிமுகம் செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கருதுகின்றனர். இரட்டைத் தலைமை நீடிக்கும் வரை அது சசிகலாவுக்கு வாய்ப்பானதாகவே இருக்கும் என்பது மற்றொரு காரணம்.

ஆனால் இங்கே கேள்வி, யார் கட்சியின் தலைவராகப் போகிறவர் என்பது தான்! இன்றைய நிலவரப்படி, 23ம் திகதி கூட்டத்தில் யாரைத் தலைவராகத் தெரிவு செய்வது என்பது வாக்கெடுப்புக்கு விடப்படுமானால் பெரும்பாலும் வெற்றி பெறப்போகிறவர் எடப்படி பழனிச்சாமியாகவே இருக்கப்போகிறார். எடப்பாடியுடனான பன்னீர் செல்வத்தின் இதுவரையிலான நேரடி மோதல்களில் தொடர்ந்தும் எடப்பாடியாரே வெற்றி பெற்று வந்துள்ளார். மாவட்டச் செயலாளர் மத்தியிலும் எடப்பாடியாருக்கே செல்வாக்கு நிலவுகிறது. பன்னீர் செல்வத்திடம் இல்லாத ஒரு தோற்றத் கவர்ச்சியும், சமாளித்துப் போகின்ற தன்மையும், தொண்டர்களை கையாளத் தெரிந்த சூட்சுமமும் எடப்பாடிக்கு கைவந்த கலை என்பது உண்மையே. பன்னீர் செல்வத்தின் பாணி தொண்டர்களிடம் பெரிதாக எடுபடுவதில்லை.

எனவே, இக்கூட்டம் நடைபெற்று ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், எடப்பாடியாருக்கே வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அவ்வாறு நிகழுமானால் பன்னீர் செல்வத்தின் நிலை, - எதிர்காலம், - என்னவாகும்? எடப்பாடியாரின் கீழ் ஒரு கட்சி முக்கியஸ்தராகக் காலம் கழிப்பாரா அல்லது தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு தனிக்கட்சி அமைத்து சசிகலாவுடன் கூட்டு வைத்துக் கொள்வாரா? இது பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கைக்கு வைக்கப்படும் வேட்டாக அமையலாம். எனவே அவர் ஏதாவது செய்தாக வேண்டும். கடைசி முயற்சியாக. பன்னீர் செல்வம் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அருள் சத்தியநாதன்

Comments