கொழும்பு-யாழ்ப்பாணம் புதிய ரயில் சேவை | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு-யாழ்ப்பாணம் புதிய ரயில் சேவை

நமது நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க, கால கட்டத்தில் நாடளாவிய ரீதியில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் வெகுவாகப் பாதிப்படைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. எரிபொருள் பற்றாக்குறையே இத்தகைய நிலைமைக்கு காரணம் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு ரயில் போக்குவரத்தை அதிகளவில் நாடிவருவதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். தெருவில் பயணிக்கும் போக்குவரத்து வாகனங்களைவிட ரயில் குறைந்தளவு கட்டணத்துடன் ஒரே தடவையில் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதியை கொண்டிருப்பது சிறப்புக்குரியது.

இவ்வேளையில் இலங்கை ரயில்வே திணைக்களம் பொதுமக்களின் நலன்கருதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய வார இறுதி ரயில் சேவையொன்றை நேற்று முன்தினம் (17ஆம் திகதி) ஆரம்பித்திருப்பது பலரது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதம அதிபர் தி. பிரதீபன், ஊடகவியலாளர் சந்திப்பின் போது "தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு புதிய இரவுநேர நகர்சேர் கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஒரு வழிக் கட்டணமாக 2800/= ரூபா அறவிடப்படும். பயணிகள் முன்பதிவு செய்துகொண்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என நம்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட மேற்படி நகர்சேர் கடுகதி ரயில் பத்து பெட்டிகளுடன் 520ஆசனங்களையும் கொண்டது. இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 10.00மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். தெஹிவல,  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை இரவு 10.25மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து 10.30க்கு புறப்படும். மட்டுப்படுத்தப்பட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படுவதுடன் அதிகாலை 5.25மணிக்கு யாழ். ரயில் நிலையத்தையும் 5.55க்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தையும் சென்றடையும்.

இந்து நகர்சேர் கடுகதி ரயில் மிண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும். இரவு மணி 10.25க்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை சென்றடைந்து புறப்படும். இரவு 12.40மணி அளவில் வவுனியா வந்தடையும் அதிகாலை 5.25மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தையும், காலை மணி 5.55க்கு கல்கிசை ரயில் நிலையத்தையும் சென்றடையும்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பல ரயில்கள் சேவையில் ஈடுபட்டுவந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அதிகாலை 4.00மணிக்கு சிறிதேவி கடுகதி ரயில், காலை 6.10மணிக்கு உத்தரதேவி ரயில் காலை மணி 9.45க்கு யாழ்தேவி ரயில், இரவு தபால் ரயில் என்பன நாளாந்தம் சேவையில் ஈடுபட்டிருந்தன. அதுபோலவே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் அதே ரயில் சேவைகள் தினமும் இடம்பெற்றுவந்தன. அத்துடன் தினமும் அதிகாலையில் கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் நண்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து, மீண்டும் பகல் 1.45மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும்.

இப்போது யாழ்தேவி, உத்தரதேவி குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ஆகிய மூன்று ரயில் சேவைகள் மட்டுமே நாளாந்தம் இடம் பெற்றுவருகின்றன. குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயிலும், யாழ்தேவி ரயிலும் கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரைக்கும், உத்தரதேவி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன் துறைவரைக்கும் சேவையை மேற்கொள்கின்றன. இப்போது வார இறுதி புதிய ரயில் சேவையும் இதனுடன் இணைந்துள்ளது.

இலங்கை ரயில் சேவை வரலாற்றில் 1956ஆம் ஆண்டு ஒரு மறுமலர்ச்சி காலமாக அமைந்திருந்தது. நீராவி என்ஜின்களுடன் டீசல் என்ஜின்களும் பயன்பாட்டுக்கு வந்தன அப்போது ரயில்வே பொது முகாமையாளராகப் பதவி வகித்த பி.டி. ரம்பாலா என்பவரின் ஆலோசனைக்கு அமைய டீசல் என்ஜினைப் பயன்படுத்தி மூன்று புதிய கடுகதி சேவைகள் ஏககாலததில் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்து வடபகுதிக்கு யாழ்தேவி என்ற பெயரிலும் தென்பகுதிக்கு ருகுணுதேவி என்ற பெயரிலும், மலையத்திற்கு உடரட்ட மெனிக்கே என்ற பெயரிலும் 'அன்புகொண்ட மூன்று சகோதரிகள்' (Lovely Three Sisters) என்ற மகுடத்தின் கீழ் 1956ஏப்ரல் 23ஆம் திகதியன்று மூன்று கடுகதி ரயில் சேவைகளும் அறிமுகமாகின.

இதனைத் தொடர்ந்து காலப்போக்கில் நாடளாவிய ரீதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அந்தவகையில் வடபகுதிக்கு உத்தரதேவி என்றபெயரில் மற்றுமொரு ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் முறிகண்டி என்ற இடத்தில் யாழ்தேவி ரயிலுக்கு ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வடபகுதிக்கான சகல ரயில் சேவைகளும் வவுனியாவுடன் இடை நிறுத்தப்பட்டன.

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையில் வவுனியாவிலிலுந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இந்திய ரயில்வே அமைச்சின் நிர்வாகத்திலுள்ள 'இர்க்கொன்' நிறுவனத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வவுனியாவிலிந்து தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு ரயில் சேவை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக ரயில் பாதை திருத்தப்பட்டு 2011மே மாதத்திலிருந்து ஓமந்தை வரையும், 2013செப்டம்பர் மாத்திலிருந்து பளை வரையும் ரயில் சேவை நீடிக்கப்பட்டது. பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் 2014அக்டோபர் 13ஆம் திகதியிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நேரடி ரயில் சேவை ஆரம்பமானது.

இதன் பின்னரே காங்கேசன்துறை வரையிலான ரயில் பாதை சீர்செய்யப்பட்டு கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை இடம்பெறத் தொடங்கியது.

ஆ.கனகசூரியர்

Comments