![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/06/26/a29.jpg?itok=NiOHdhV-)
இந்திய நடுவன் அரசின் "அக்னிபாத் திட்டம்" (அக்கினி வீரர், Agneepath Scheme) என்று அழைக்கப்படும் புதிய இராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் நாடு முழுவதும் எதிர்ப்பு, வன்முறை மற்றும் கிளர்ச்சி அலைகளைத் தூண்டி இன்றைய இந்தியாவை கலவர பூமியாக்கி உள்ளது.
இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்த கடந்த 14ம் திகதிக்கு மறுநாளே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து மக்களை கதிகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்க்கிழமை 17ம் திகதி முதல் நாட்டின் ஏழுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறி பலத்த பொருட் சேதத்தை அரசுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக ஹரியானா, பீகார், தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மொத்தம் நான்கு பயணிகள் ரயில்கள் தீயிட்டு கொளுத்தப் பட்டதுடன், 10க்கும் மேற்பட்ட ரயில்களில் பயணித்தவர்களின் உடைமைகள் யாவும் சூறையாடப்பட்டு அவர்கள் நடு வழியில் இறக்கி விடப்பட்டனர். இளைஞர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டங்களுக்கு பல இராணுவ ஆர்வலர்களும் இளைஞர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டன. முதல் நாள் அமைதியாக நடைபெற்ற போராட்டங்கள் மறு நாளே வன்முறையாக மாறி நாசப்படுத்துதல் மற்றும் பொது சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
கூடுதலான மாநில அரசுகளது எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த அக்னிபாத் திட்டம் என்றால் என்ன...? அதன் சாதக பாதகங்கள் என்ன...? என்கிற கேள்விகளுக்கான விடையையே தற்போது இந்திய மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் செய்தியாகவும், வாதப்பிரதிவாதங்களாகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கினறன.
மேற்குலக நாடுகள் பலவற்றில் நடைமுறையில் இருப்பது போன்ற ஒரு திட்டமே தற்போது இந்திய ராணுவத்தில் அக்னி பாத் என்ற பெயரில் மோடி அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் இந்திய படையணிக்கு தெரிவாகும் ஒருவர் 4ஆண்டுகள் மட்டுமே முப்படைகளில் ஏதாவது ஒன்றில் குறுகிய கால வீரராக பணியாற்ற முடியும்.
இந்த 4வருட பணியில் 6மாதம் பயிற்சி வழங்கப்படும் எனவும்,பின்னர் 4வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25சதவிகிதம் பேர் வரை மட்டுமே நிரந்தரமாக 15வருட ஒப்பந்தத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் புதிய திட்டம் தெரிவிக்கின்றது.
4வருடத்திற்கு பின் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரபணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தகுதியான 25சதவிகிதம் பேர் தவிர ஏனையவர்கள் வெளியேற வேண்டும் எனவும், நிரந்தரமாக 15வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்கள் அதிகாரிகள் ஸ்தானம் அற்ற சாதாரண படை சிப்பாய் நிலையிலேயே பணி செய்ய முடியும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
17.5வயது முதல் 21வயது வரையான குறைந்தது 10ம் வகுப்பு வரை படித்த இரு பாலினரும் இதில் சேர முடியும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம், மாதம் 30ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு மாதா மாதம் சம்பளம் சிறிதளவு உயர்த்தப்பட்டு கடைசி வருடம், அதாவது 4வது வருடம் அவர் 40ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் வருமான வரி கிடையாது எனத் தெரிவிக்கும் இந்த புதிய சட்டமூலம் இதன் கீழ் இணைத்துக் கொள்ளப் படுபவர்களுக்கு ஓய்வூதியம் (பென்சன்) எதுவும் கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றது.
படைகளில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் பட்டாளம் தான் இந்த சட்டமூலத்தை எதிர்த்து களம் இறங்கி. மோடி அரசுக்கு எதிரான கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றது, சில இடங்களில் இளைஞர்கள் தமக்கு தாமே தீ மூட்டியும் போராட்டத்தை உணர்ச்சிப் பிழம்பாக்கி வருகின்றனர். இந்த தீமூட்டல் அனர்த்தத்தில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு இளைஞன் இறந்த செய்தி வெளிவர,பல மாநில காவல் நிலையங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாகப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே வழமையாக ஒவ்வொரு ஆண்டும், முப்படைகளிற்கும் 15வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரந்திர நியமனமாக சிப்பாய்களை இணைத்துக்கொள்ளப்படும் நடை முறையே இருந்து வருகிறது. அதே போல வெற்றிடமாகும் உயர் பணியிடங்கள் அந்த பதவித் தரவரிசையில் அடுத்ததாக இருப்பவர்களை கொண்டே நிரப்பப்பட்டு வந்தன, மேலும், படைகளில் 15ஆண்டுகள் பணியாற்றிய வீரர் ஒருவர் அரச ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவாராக கணிக்கப்பட்டு ஓய்வூதியம் பெற்று வந்தனர். ஒருவர் 21வயதில் படையணியில் சேர்ந்திருந்தால், 36வயதில் அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருப்பார்.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய திட்டத்தின்படி இந்த பணிக்கான காலம் நான்கு ஆண்டுகளாக்கப் பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் இல்லாத நிலையையே ஏற்படுத்துகிறது..இதுவே அக்னிபாத் திட்டத்தின் பெரும் சலசலப்புக்கு முக்கிய காரணம்.
அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், ராணுவ ஆள்சேர்ப்பு குறித்து இந்தியாவின் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தளபதியாக இருந்த, குன்னூர் விமான விபத்தில் மறைந்த ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்த கருத்தை வலியுறுத்துகின்றனர் சில ஆய்வாளர்கள்.
“இந்திய ராணுவத்தில் சேர, ஒருவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்கு மேலதிகமாக, தாய்நாட்டைக் காக்கவேண்டும் என்ற ஆர்வமும், தியாக சிந்தனையும் இருக்க வேண்டும்” என்கிற அவரின் கூற்றே இன்றைய நாட்டு மக்களுக்கும், அரசுக்கு எதிராகவும் போராடும் இளைஞர் கூட்டத்தின் கவனத்திற்கு முன் வைக்கப்படுகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் தேசத்திற்கு சேவை செய்ய விரும்பவில்லை, எனவும் மாறாக இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் காலம் வரை பணிபுரிந்துவிட்டு பின்னர் வாழ்நாள் வரை ஓய்வூதியம் பெறவே விரும்புகிறார்கள் என வாதிடும் அந்த ஆய்வாளர்கள் இன்றைய இந்திய இளைஞர்கள் இந்திய இராணுவம் உட்பட்ட படைத் துறையை தமக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டமாகவே பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இப்போது 18மாநிலங்களில் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படைகளுக்கான ஆட்சேர்ப்பு வயது வரம்பை 21லிருந்து 23ஆக உயர்த்தியுள்ள அரசு. அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு வரும் 24ம் திகதி முதல் இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பில் இருந்து தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. ராணுவத்தில் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணியை அரசாங்கம் விரைவில் தொடங்கினாலும், பல இராணுவ ஆர்வலர்கள் திட்டத்திற்கு எதிராக உறுதியாக நிற்கின்றனர்.
'பாகிஸ்தான் சீனா என இரண்டு முனைகளிலிருந்து அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும் போது, அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும் எனவும் நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும்' எனவும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த திட்டம் ராணுவத்திற்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் பல வழிகளில் சிறந்ததாக அமையும் என்று மத்திய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
ராணுவ ஆர்வலர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அக்னிபாத் திட்டத்தை அமூல் படுத்துவதற்கு முற்றிலும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் மோடி அரசு இந்தத் திட்டம் குறித்து மீள் பரிசீலனை செய்வதே நாட்டிற்கும் பா.ஜா.க அரசின் எதிர்காலத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பதே யதார்த்தம்.
கோவை நந்தன்...